வலி காட்டும் வழிகள்
வாழ்க்கையோடு போராடுவதென்பது வேறு. கஷ்டப்படுவதென்பது வேறு. சிலரின் வாழ்க்கை ஒரு நிலைக்கப்பால் நிரந்தர சந்தோஷத்தை இல்லை குறைந்தது மன அமைதியையாவது அவர்களுக்கு பரிசளிக்கும். எத்தனையோ நாட்கள் கழித்து பாலைவனத்தில் கண்டு கொண்ட நீரூற்றுப் போல அத்தனை நாள் பயணங்களின் தாகங்களையும் தணிக்கும். ஆனால் சிலருக்கோ தற்காலிக திருப்பங்களில் இடைவேளைப் புன்னகைகளையும் சந்தோஷங்களையும் தந்து விட்டு நீரூற்றுக்குள் சில சுழல்களை மறைத்து வைத்து வேடிக்கை பார்த்திடும். மூச்சுத் திணறி தவிக்கும் வேளைகளிலும் வெளியில் பதறி உள்ளே சிரித்து வாழ்க்கை பல நேரங்களில் வஞ்சம் தீர்க்கும். அத்தனையும் தாண்டி சகலமும் தொலைத்து மடிப்பிச்சை கொணர்கையிலும் கைகளை கட்டிக் கொண்டு உன் விதி உன் பாடு என்று காழ்ப்புணர்வில் நம்மை கதறச் செய்யும்.
விதி வலியதுதான். வாழ்க்கையின் ஆசையை உள்ளே விதைக்கவிட்டு சண்டையிட்ட பின்னர் கண்டதும் முகம் தூக்கிக் கொள்ளும் உறவினனிடம் தொலைத்து விட்ட நெருக்கத்தை போல பட்டென கன்னத்தில் அறைந்து சந்தோஷங்களையும் எதிர்பார்ப்புகளையும் பறித்துக் கொள்ளும் விதி வலியதுதான். வகையற்று வழியற்று போகும் நிலைகளில் நெஞ்சுரம் கரைத்திடும் விதி வலியதுதான். அப்படிப்பட்ட நிலைகளில் வேண்டுவதெல்லாம் அடைக்கலம், அடைக்கலம், அடைக்கலம்.. வாழ்க்கையோடு போராடி கஷ்டங்களை வென்றெடுக்க "நீ மட்டுந் துணையாய் நின்றருள் இறைவா" என மனமுருகி அவனிடம் வேண்டும் கருணையோடு கண்ணீர் தோய்ந்த அடைக்கலம், அடைக்கலம், அடைக்கலம் மட்டுமே ........