காலச்சுவடுகள் 9 - ஜின்னா
இன்பம்
=======
உயிர்கள் வசிக்கும் உலகப் பந்தில்
ஒளிந்து கொண்டிருக்கும் உணர்வின் பிம்பமே!
ஆசைகள் திரியும் ஆகாயச் சந்தையில்
பாஷைகள் புரியாத பைத்திய வேதமே!
கனவில் மிதக்கும் காதற் படகில்
அனலை அடிக்கும் அலையின் மோகமே!
நினைவில் நின்று நெஞ்சைத் துளைத்து
கனவில் இனிக்கும் குயிலின் ராகமே!
நதிகள் இசைக்கும் தண்ணீர் கீதமே
பதில் பேசாத உணர்ச்சியின் மீதமே!
குழந்தை இதழில் ஒளிந்து கொண்டு
அழுது கொள்ளும் அழகின் சிரிப்பே!
மெழுகின் உடலில் மறைந்து கொண்டு
ஒழுகிச் செல்லும் ஒளியின் விரிப்பே!
கட்டில் ரகசியம் கேட்டுக் கேட்டே
மொட்டு அவிழ்த்த தசைமலர்ப் பாட்டே!
பத்து மாதம் இடைவெளி விட்டு
சத்தம் போட்ட உயிர்ப்பூ பொம்மையே!
விட்டில் பூச்சியின் ஒளியை நம்பும்
தொட்டில் குழந்தையின் நிரந்தர உண்மையே!
கன்னிப் பார்வையின் கணிமழைச் சாரலில்
என்றும் நனைந்திட ஏங்கும் துடிப்பே!
தணிக்கத் தணிக்கத் தொடர்ந்திடும் தாகமே!
அணைக்க முடியாத உயிர்த்தீயின் வேகமே!
இளமை நடத்தும் சுக மாநாட்டில்
தலைமை ஏற்கும் தத்துவப் பித்தனே!
முதுமை நடத்தும் இறைவழிபாட்டில்
முடிவுரை கொடுக்கும் சத்திய பக்தனே!
தசையில் புகுந்த தனித்துவ ரகசியம்
அசைக்க முடியாத ஆன்மாவின் அதிசயம்
எல்லோர் மனதில் இடி இடித்தாலும்
சொல்ல முடியாத சுகமிகு வலியே!
கொளுத்திப் போடும் மனித உடலில்
செலுத்தப் பட்ட சூரிய ஒளியே!
அனிச்சை செயலின் ஆரம்ப நிலையே!
முனிவன் சுவைக்கும் மௌனத்தின் கலையே!
கடவுள் அளித்த கருணையின் அருளே!
எனக்குள் உதித்த கவிதையின் பொருளே!
============== ஜின்னா ================
பின் குறிப்பு:
இந்த தொடரில் இந்த கவிதைதான் எழுத வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்ட
தோழர் கவித்தா சபாபதிக்கு நன்றிகள்.