வாய்மை
வானும் மண்ணும்
வாழ்த்தியே பாடும்
வாய்மையோடு இருந்தால்..!
போகும் இடமும்
போற்றிடும் உன்னை
பொய்யினை நீ களைந்தால்..!
வாழ்வில் யென்றும்
வசந்தங்கள் வீசும்
வாய்மைதனை சுமந்தால்..!
வந்திடும் இடரும்
நின்றிடா தோடும்..
உண்மையாய் வாழ்ந்தால்..!
பொய்யும் புரட்டும்
பெருகிப் பெருகி..
எரிந்து போகுதே உலகம்..!
வாழ்வில் துன்பம்
துரத்தித் துரத்தி
நாளும் பொழுதும் கலகம்..!
உண்மைக் கென்றும்
அழிவுகள் இல்லை
உணர மறந்ததால் வீழ்ச்சி..!
உயிரது போகும்
நிலைதனைக் கண்டும்
உண்மையைச் சொன்னால் உயர்ச்சி..!
வாய்மை ஒன்றே
வாழ்ந்திடும் மண்ணில்
வான்மறை சொல்லும் உண்மை..!
வாக்கினைக் காத்து
வாய்மையை சேர்த்து
வாழ்ந்திட்டால் என்றும் நன்மை..!
போக்கிரித் தனமும்
பொய் சொல்லும் குணமும்
பொசிக்கிடும் வாழ்விலே நின்று..!
நாக்கினை அசைத்து
பேசிட நினைத்தால்
வாய்மையை உரைத்திடு துணிந்து..!
வாய்மைக்கு முதலில்
வாய்த்திடும் பரிசு
தீமையாய் இருந்த போதும்..!
திண்ணமாய் நீயும்
திளைத்திடு அதிலே..
தீங்குகள் யாவும் தொலையும்..!