ஒனக்கென்ன சம்மதமா

பூப்போட்ட பாவாட
உடுத்தவளே முத்தம்மா!
ஒம் மாமன் தவிக்குறனே
முத்தமொன்னு கொடுத்திடுமா...

கொளத்துப்பக்கம் ஒன் வீடு
கெழக்குல தான் என் வீடு
நடுவுல நாம் கெணத்தடியில்
பால் நெலவ சாட்சி வெச்சி
உரையாட
ஒனக்கென்ன சம்மதமா...

ஒங் கைய நான் புடிக்க
எங் கைய நீ புடிக்க
தனிமைக்குத் தாழிட்டு
நிசப்தத்த உறையவிட்டு
ஊரும் நீரும் ஒறங்கையில
உன் மடியில் நானாக
ஒனக்கென்ன சம்மதமா...

ஒன் நெனப்ப நான் மறந்து
களத்துப்பக்கம் போனாலும்
தாவனிய உடுத்துக்கிட்டு
என் முன்னே போயிடுவ
அப்புறமா என் மனசு
மயிலாட்டம் போடுதடி!

குச்சடுக்கிக் கூடு கட்டி
காகம் கூட சேரயில
ஓல போட்ட குடிசையில
மயிலக்காள நானிருக்கன்
மச்சானுக்குத் துணையாக
மரகதமே வாராயோ...

என் பொட்டக்காட்டில்
பொன்னெழுமே
பொண்டாட்டி நீயானால்
என் பட்டினி போக்குதற்கு
உன் எச்சில் போதுமடி...

தாயை இழந்த தனையனுக்கு
தலைவியாக வருவாயா...?
தங்கமென்ன என் அங்கத்தையே
நான் கொடுப்பன்
பருவம் மாறினாலும்
பாசப் போர் நான் தொடுப்பன்

தலப்புள்ள நீ சுமக்க
தரணியெங்கும் நான் சொல்ல
பலகாரம் பல செய்து
பண்டிகையாய் கொண்டாட
ஒனக்கென்ன சம்மதமா...

மாலை வருகையிலே
மல்லிகைப் பூ உதிர்கையிலே
மானே உன் இடப்புறமா நானிருந்து
புதுக்கனவு நெய்திட
பற்று வெச்சு சொல்லு புள்ள
ஒனக்கென்ன சம்மதமா...?
***

எழுதியவர் : முகம்மது பர்ஸான் (31-Mar-16, 1:25 pm)
பார்வை : 335

மேலே