ஆனால் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள ஆசைப் படுகிறேன் - மணியன்

ஆனால் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள ஆசைப் படுகிறேன்.
ஆம்.இந்த சுமைதாங்கியால் இந்த நேரத்தில் மட்டுமே ஆசைப்படத் தெரியும்.மற்ற நேரங்களில் துன்பப்பட,துயரப்பட,வெட்கப்பட,வேதனைப்படத்தான் முடியும்.

சுமையேற்றிகளாகிய உங்களிடம் இந்த தேர்தல் நேரத்தில் மட்டும்தான் என்னைப் போன்ற சுமைதாங்கியால் ஆசைப்பட்டு சில உரையாடல்கள் பண்ண முடியும்.

அறுநூறு அடி ஆழ்குழாய் இட்டும் சொட்டுத் தண்ணீர் இன்றி வானம் நோக்கி அழுத இந்த சுமைதாங்கி, வானம் கொட்டோ கொட்டு என்று கொட்டித் தீர்த்து ,என் வீட்டைச் சுற்றிலும் ஆறு அடி தண்ணீர் ஓடிய போதும் நீச்சலினூடே கட்டுச் சாதத்திற்காக கதறி அழுதவனும் இதே சுமைதாங்கிதான்.

பழம் எனக்கு உனக்கு என்று கணபதி முருகன் போல் நீங்கள் திருவிளையாடல் சண்டை இட்ட போதும் தேமேன்னு வேடிக்கை பார்த்தவனும் இந்த சுமைதாங்கிதான். பழம் கிடைத்தால் நீங்கள் கோட்டை விடத் தயாராகிருப்பினும் கொட்டையைக் கூட சுமைதாங்கிக்கு விட்டு வைக்க மாட்டீர்கள் என்பதும் தெரிந்ததுதானே.

கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கப்படி எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என நீங்கள் தாராளமய கொள்கை கொண்ட போது விலைச்சுமையை என் முதுகில் ஏற்றிய போதும் சரி , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்தில் வீழ்ந்த போதும்சரி , நீங்கள் வரியைக் கூட்டி எண்ணெய் விலையும் இறங்க விடாமல் என் சுமையும் இறங்க விடாமல் செய்த போதும் சரி , ஏக்கத்தோடு சுமைகளைத் தாங்கியவன்தான் இந்த சுமைதாங்கி.

கொளுத்தும் வெய்யிலில் நேற்று நாக்கு வறண்ட போது 10 ரூபாய்க்கு மதர் வாட்டர் வாங்கி குடித்த போதும் சரி. உங்கள் கட கட லொட லொட தாழ்தள சொகுசுப் பேரூந்துக்காக காத்திருந்த போது இரண்டு முறை கட்டணக் கழிப்பறைக்கு போனதற்காக பத்து ரூபாய் தாரை வார்த்து , சிறு நீர்ப்பையோடு என் சில்லறைப் பையும் காலியான போதும் சரி , இந்த சுமைதாங்கியால் அழக்கூட முடிய வில்லை. ஒரு வேளை அழும் போது விழுகிற கண்ணீருக்கும் ஒரு வேளை கட்டணம் வசூலித்து விடுவீர்களோ என்ற பயம்தான் வந்தது இந்த சுமை தாங்கிக்கு.

தேர்தல் ஆணையத்துக்கு இந்த சுமை தாங்கி ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். 5 முனைப் போட்டி 6 முனைப் போட்டி என்று அவர்கள் தேர்தலுக்கு சில நாள் முன்பு தரப்போகும் ஓட்டுக்கான விலையை தவணை முறையில் தர ஏதுவாகச் செய்தால் குறைந்தா போய் விடுவீர்கள். காசு வாங்காமல் ஓட்டுப் போட நாங்கள் என்ன இளிச்ச வாயர்களா ? . காசு தராமல் ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்க சுமையேற்றிகள் என்ன முட்டாள்களா ? இடையில் நீங்கள் என்ன நக்கீரனா ? ஒன்று ஓட்டு கேட்டுப் பாருங்கள். இல்லை ஓட்டு போட்டுப் பாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு எங்கள் இரண்டு பேருடைய கஷ்டம் புரியும்.

இப்போதுகூடப் பாருங்கள் ஓட்டு எந்திரத்தில் பொத்தானை அழுத்தும் போது,
500 தந்த இவருக்கா அல்லது 1000 தந்த இவருக்கா என்று வழக்கம் போல் தடுமாறும் இந்த சுமைதாங்கியின் ஆட்காட்டி விரல் கட்டுரையில் பதிவிடுவதற்குப் பதிலாக நகைச்சுவையில் பதிவிட்டு , என் போன்ற பல சுமைதாங்கிகளின் பிரதிபலிப்பாக என்னை ஆக்கி விட்டதய்யா. . . . . . . .
ஆக்கி விட்டது.

எழுதியவர் : மல்லி மணியன் (1-Apr-16, 12:21 am)
சேர்த்தது : நெல்லை ஏஎஸ்மணி
பார்வை : 164

சிறந்த நகைச்சுவைகள்

மேலே