பட்டாம்பூச்சி இழுக்கும் பெரும் பாறை - சந்தோஷ்

எனக்கு
இந்த மனித வாழ்க்கை பிடிக்கவில்லை
மாறாக
போராடி வாழ்ந்துவிட பிடிக்கிறது..!

தோல்வி.. அவமானம்.. புறக்கணிப்பு
விரக்தி.. துரோகம்..
இவையாவும் துளியும் பிடிக்கவில்லை.
ஆனால்
இவையெல்லாம் ஒரு வெற்றியில்
சமாதியாக்கிவிட
ஒரு போராட்ட மனநிலையோடு
வாழ்ந்துவிட பிடிக்கிறது.

என்றும் நான்
அஞ்சா நெஞ்சனென
போலி கர்ஜனையிட பிடிப்பதில்லை
ஆனால்
எந்தன் நெஞ்சத்தில்
அஞ்சாமையை ஏற்றி
துணிவோடு வாழ்ந்துவிட பிடிக்கிறது.

அதிகமில்லை
இந்த வாழ்க்கையை வசந்தமாக்கிடத் தேவை
ஒரு வெற்றி..
ஒரு வெற்றிக்கு அதிகப்பட்ச தேவை
எள்ளவும் குறையாத நெறிதவறாத
கடும் வெறி...!

என் முதுகு எலும்பெல்லாம்
ரணத்திலான கீறல்கள்...
என் யாக்கை நரம்பெல்லாம்
விரக்தியிலான ஒட்டைகள்.
போதுமான இரத்தம் சிந்திவிட்டேன்..
பிறக்கும்போதே..
போதுமான அளவிற்கு
அழதும் தீர்த்துவிட்டேன்.

போதும்.. போதும்...!
அழுவதற்கு காரணங்களுண்டு
ஆனால் கண்ணீரில்லை.-இனி
அழுதாலும் அது ஆண்மையில்லை..!

எந்தன் தன்னம்பிக்கை
பட்டாம்பூச்சி சிறகினில்
பெரும் இலட்சியப்பாறையினை
கட்டியிழுக்கிறேன்...!

இன்றைய உலகம் சிரிக்கும்
வீண் முயற்சியென்று
நாளை உலகம் சொல்லும்
விடா முயற்சியென்று...!

வெற்றி.. வெற்றி..
எப்படியும் வெற்றிப் பெற்றுவிடுவேன்...!
மரணத்திற்கு முன் நொடியிலாவது...
வெற்றியைப் பிடித்து
உயிர்மூச்சில் முத்தம் கொடுத்திடுவேன்..!

ஆம் ! எனக்குத் தெரியும்
வெற்றிப்பெற்றால் தான்
எந்த பிணத்திலும் கூட
பூ மாலைகள் சேர்க்கும்
இந்த சுயநல உலகம்....!

--

இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (2-Apr-16, 11:50 pm)
பார்வை : 223

மேலே