தாய்மைக்கு மகுடம்

என் முதல் துடிப்பை உணர்ந்தவளே
முழுதாய் என்னை சுமந்தவளே.....
உயிர் பிரிந்து இறையடையும் வரை
எனக்காய் உயிராய் வாழ்ந்தவளே......
உன் கைப்பிடித்து நடந்த போது
சிகரம் கூட மடுவாய் பட்டது.....
இடியாய் தாக்கிய இன்னல்கள்...
பொடியாய் தகர்ந்து மாய்ந்தது
அசையன்புக் கரங்கள் அமுதூட்டியபோது
என் ஆயுளின் தீர்க்கம் உயிர்த்தது....
உன்னுள் உறைந்த போராளியால்
பொய்மைகள் புறமுதுகிட்டு ஓடியது.....
பகைமைக்கும் நீ இரங்கியதால்
பராக்கிரம எமனுக்கும்
உன்னிடம் கரிசனம் பிறந்தது
பூப்பந்தாய் உன் ஆவியை ஏந்தி
சிவலோகத்தில் சிம்மாசனம் வைத்தான்......
நிரந்தர நித்திரை நீ சென்றாலும்
உயிரணுவாய் என்னுள் உறைகின்றாய்
உண்மையாய் சத்தியமாய் என்னுணர்வில் வாழ்கின்றாய்
என் காலக் கணக்கு முடிந்தாலும்
என் கல்லறையும் கவி உரைக்கும்
அது உயிர்த் தமிழால் உயர் கருவாய்
உன் பெயர்க்கு மகுடம் ஏற்றும்!
மகள்
கவிதாயினி அமுதா பொற்கொடி