தேர்தல் காலத்தில்தான்
உறவுகள் மாறுவதும்
உரிமைகள் கோருவதும்
உடன்பிறப்புகள் பிரிவதும்
தேர்தல் காலத்தில்தான் !
குற்றங்கள் தெரிவதும்
குடும்பங்கள் உடைவதும்
குழப்பங்கள் தோன்றுவதும்
தேர்தல் காலத்தில்தான் !
கசப்புகள் நிகழ்வதும்
கருத்துக்கள் மாறுவதும்
கண்ணியம் குறைவதும்
தேர்தல் காலத்தில்தான் !
தவறுகள் தெரிவதும்
தடுமாற்றம் நிகழ்வதும்
தன்னம்பிக்கை பிறப்பதும்
தேர்தல் காலத்தில்தான் !
சாதிமதங்கள் பேசுவதும்
சாதிக்கட்சிகள் பிறப்பதும்
சாதிவெறி அதிகரிப்பதும்
தேர்தல் காலத்தில்தான் !
ஒருமையில் விமர்சிப்பதும்
ஒப்பந்தங்கள் ஏற்படுவதும்
ஒற்றுமைக் குலைவதும்
தேர்தல் காலத்தில்தான் !
உண்மைகள் தெரிவதும்
உள்ளங்கள் யோசிப்பதும்
உறவுகளை எதிர்ப்பதும்
தேர்தல் காலத்தில்தான் !
கூட்டணிகள் கலைவதும்
கூச்சமின்றி இணைவதும்
கூட்டங்கள் சேர்ப்பதும்
தேர்தல் காலத்தில்தான் !
பிரிவினை பேசுவதும்
பிரிந்தவர் கூடுவதும்
பிரச்சினைகள் தீர்வதும்
தேர்தல் காலத்தில்தான் !
வாக்குறுதிகள் குவிவதும்
வாய்க்குவந்ததை பேசுவதும்
வரம்பில்லாமல் தாக்குவதும்
தேர்தல் காலத்தில்தான் !
இலவசங்கள் வழங்குவதும்
இறந்தவர் உயிர்பெறுவதும்
இருப்பதையும் இழப்பதும்
தேர்தல் காலத்தில்தான் !
நேர்காணல் காட்சிகளாகும்
நேர்மையும் அற்றுப்போகும்
நேசமற்ற நெஞ்சங்களாகும்
தேர்தல் காலத்தில்தான்!
பழனி குமார்
05.04.2016