நெஞ்சுக்குள் காதல்

நெஞ்சுக்குள் காதல்
அழகழகாய் ஆசை
என்னவள் முகம்
பார்க்க எண்ணி

அன்னை அன்பு
என்றும் மாறாத பகுதி
தந்தை அன்பு
வாழ்வை சொல்லி தரும் பகுதி
உடன்பிறப்பு செல்ல சண்டைகளில்
ஒளிந்த உண்மையான அன்பு
திரும்ப பெற முடியாத பகுதி
நண்பர்களோடு கொண்ட அன்போ
மறக்க முடியாத பகுதி
காதலித்து காதலை சொல்லாமல்
போன காதலின் இன்பம் ஒரு பகுதி

அத்தனை அன்பின்
ஒரு முழு பகுதியாக
துணைவி அவள்
உறவுக்குள் ஏந்தி
என் வாழ்வின்
இரண்டாம் பிரதியாக
வர போகிறாள்
என் உரிமைக்கு
சொந்தக்காரி

என் போல்
சொந்தங்களையும்
அன்பையும் கண்டு
அந்த அன்பை
என்னிடம்
மொழி பெயர்க்க வளர்ந்திருப்பாள்

எங்கோ பிறந்து
எனக்காக வளர்ந்து
என் கண்களுக்கு சொந்தம்
எனிலும் இன்னும்
கண்ணில் விழாமல்
கனவுகளில் இல்லாத
முகம் காட்டும் காதலியே

நான் கொண்ட
சுவாசம் உன் வாசத்தில் வாழ்வதற்க்கே
கண் உன்னை ரசிப்பதற்க்கே
செவிகள் உன் குரல் கேட்பதற்க்கே
உதடுகள் உன் சமையல் ருசிப்பதற்க்கே
தொடு உணர்வோ உன்னில் தொலைவதற்க்கே

உன் எதிர்பார்ப்புகளை
மறந்து வா அன்பே
நான் தர நினைக்கும்
இன்பங்கள் எதிர்பார்ப்புகளை கடந்தது

கணவன் என்னும் வார்த்தையில்
என் உறவு முடியாதடி
அன்பில் அன்னையாகிடுவேன்
கண்டிப்பில் தந்தையாகிடுவேன்
செல்ல சண்டைகளில் தோழனாகிடுவேன்
குறும்புகளால் முதல் பிள்ளையாகிடுவேன்
நாளைக்கு ஆயிரம் முறை காதலை சொல்லும்
முதல் நாள் காதலனாகிடுவேன்
குழந்தைக்கு தருவது போல்
கண்ணம் நோகாமல் முத்தம் தருவேன்

உனக்காக துடிக்கும் இதயத்தை
தவிக்க விடாமல் இதயம் கலந்திட
வா என் சொந்தமே
அது வரை நீயாக நான் எண்ணுவது
பூவாக இருக்கும்
உன் மொழியாக நான் எண்ணுவது
ஷிர்லியின் கவியாக இருக்கும்
உன் அன்பாக எண்ணுவது
அந்த வானமாக இருக்கும்
உன் திமிராக எண்ணுவது
ஏமாற்றும் வானிலையாகும்
உன் கோவமாக எண்ணுவது
ஆதவன் முகமாகும்
உன் புன்னகையாக எண்ணுவது
முழுமதியாகும்
உன் வெட்கமாக எண்ணுவது
அதில் பாதி பிறையாகும்
உன் மெளனமாக எண்ணுவது
என் தனிமையாகும்
விழி வராத காதலே
எனக்காக வாய்த்த எதிர்காலமே
உன் வரவிற்கு காத்திருக்கும் பின் பனிக்காலம் நான் . . .

எழுதியவர் : கவி தமிழ் நிஷாந்த் (6-Apr-16, 10:00 pm)
Tanglish : nenjukkul kaadhal
பார்வை : 357

மேலே