நம்பகத்தன்மை இழந்திருக்கின்றனவா ஊடகங்கள்

இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாத......தேவையுமான... அலசப் பட வேண்டிய..... இன்னும் சொல்லப் போனால்... அக்கறையுடன் சேர்ந்து கவனத்தோடு எதிர் வினை ஆற்ற வேண்டிய...கருத்து பரிமாற்ற சிந்தனை தெளிவை நோக்கிய ஒன்றாவே இருக்கிறது........

ஆம்...

"இன்றைய காலகட்டங்களில் ஊடகங்களின் வளர்ச்சி சமுதாயத்திற்கு நன்மை செய்கின்றதா? தீமை செய்கின்றதா..?"-என்ற கேள்வியினூடாகவேதான் பயணிக்கப் போகிறோம்...

முதலில் இந்த ஊடகம் என்பது என்ன... அதன் தேவை என்ன.. பொருள் என்ன... அதன் வேலை என்ன.. அதன் நோக்கம் என்ன...?- இப்படி எத்தனை கேள்விகளைக் கேட்டாலும்.. எத்தனை பதில்களை உள்ளே வேறு வேறு உருவத்தில் நாம் கொண்டாலும்... ஒரே சொல்லில் அடக்க முடியுமானால் அதை..."விழிப்புணர்வு" என்று சொல்லி விடலாம்.....

ஆம்.. தோழர்களே...

நாம் அடங்கிய இந்த சமுதாயம்.. தினமும் தெரிந்து கொள்ள வேண்டும்... அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நல்லவை.. கெட்டவை... என்று செய்திகள் எதையும் அடக்கிய வண்ணம்தான் இருக்கும்.. அது காலத்தின் பிறழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் நேர்மை.... அது அப்படித்தான் இருக்க வேண்டும்.

நோக்கம்.. அறிந்து கொள்ளல்...

நம்மை சுற்றிய இச்சமூகத்தில்... என்ன நடக்கிறது....எதற்கு நடக்கிறது.. ஏன் நடக்கிறது என்று தினமும்.. நாம் நம்மை பரிசோதனை செய்து கொண்டேயிருக்க ஊடகங்கள்தான்...பணி ஆற்றுகின்றன.... செய்தி பரிமாற்றம் என்பதுதான் மானுடத்தின் ஸ்திரமான வளர்ச்சி. எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த ஒரு செய்தியும்.. நொடி நேரத்தில்.. எந்த ஒரு மூலைக்கும் போய் சேரும் தொழில் நுட்பத்தோடு இந்த சமூகம்... வளர்ச்சிதான் அடைந்திருக்கிறது... இந்த செய்தி பரிமாற்றங்கள்.. நடப்பது இந்த சமுதாய தெரிவுகளுக்கு மிகச் சிறந்த தேவையாய் இருக்கிறது....போர்க்காலங்களில்.... செய்திகள்.. சேகரிக்க தன் உயிரையும் கொடுக்கும்.. ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள்....மழை வெயில்.. குளிர் பனி என்று எதன் பொருட்டும் அவர்களின் தூரம் குறைவதில்லை.. அது ஒரு ஆத்ம நிறைவோடு தன் பணிகளில் கோலோச்சுகிறது....

அதே நேரம்.... இழவு வீட்டில் கூட TRP- க்காக மனிதாபிமானமற்ற கேள்விகளை மைக்கோடு சேர்த்து நீட்டும் நிலையும் இன்று இருக்கிறது...

செய்திகளை... சேவையாக செய்தது ஒரு காலம்.. இன்று அதற்குள்.. பணமும் அரசியலும் புகுந்து எல்லா தரவுகளையும் தன் பக்கம் இழுத்து தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்தப்படும் ஒரு தன் முனைப்பின் வெளிப்பாடாகவோ... தன் சொந்த நிறுவனத்தின்... வளர்ச்சியாகவோதான்...இருக்கிறது...... ஆளும் கட்சிக்கு ஒரு சேனல், பத்திரிக்கை..... எதிர்க் கட்சிக்கு ஒரு சேனல்,பத்திரிக்கை..... அவருக்கு.. ஒரு சேனல், பத்திரிக்கை....... இவருக்கு ஒரு சேனல், பத்திரிக்கை...... இந்த சேனலில்.. பத்திரிகையில் வரும்செய்திகள் அப்படியே மாறி வேறு விதமாய் அடுத்த சேனலிலும் பத்திரிகையிலும் வருகிறது.. பார்க்கும், படிக்கும் சாமானியன் என்னதான் செய்வான்..அவனின் சமுதாய பார்வை இச்சூழ்நிலையில் குழம்புமா.. புரியுமா...அதன் பொருட்டுதான்.. இந்த கட்டுரை ..

ஊடகங்கள் இல்லாத ஒரு நாளை யோசித்து பாருங்கள்.... அதை கற்பனையில் பார்க்கக் கூட முடியாத ஒன்றாகத்தானே இருக்கிறது.. ஆம்.. அத்தனை வலிமை வாய்ந்தது இன்றைய இந்த ஊடகம்.

ஊடகம் என்பது.. டிவியாக இருக்கலாம்....வானொலியாக இருக்கலாம்... இணையமாக இருக்கலாம்....செய்தித்தாளாக இருக்கலாம்.... பத்திரிக்கையாக இருக்கலாம்... இங்கிருந்து ஒரு செய்தியை வாங்கி அங்கு கொண்டு போய் சேர்ப்பது எதுவாக இருந்தாலும் அதன் பின்னால் ஊடகம் என்றொரு சொல்.. தன் மைக்கை நீட்டிக் கொண்டோ..... தன் பேனாவை நீட்டிக் கொண்டோ...தன் சமுதாய சாட்டையை சுழற்றிக் கொண்டோ இருக்கிறது என்று அர்த்தம். அதன் பணி சாலச் சிறந்தது என்று நம்மில் நாமே ஏன் தீமை என்று வாதிடுபவர்கள் கூட மறுக்க இயலாது. மழை வெள்ளமோ.. பூகம்பமோ... சுனாமியோ...பஞ்சமோ.... படுகொலையோ....தேர்தலோ...விபத்தோ.... கொண்டாட்டமோ.... குற்றங்களோ... எதுவாக வேண்டுமானாலும் சரி... செய்திகளை உடனுடக்குடன் கொடுத்து நம்மை..... நாம் சார்ந்த இந்த உலகின் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே இருக்க செய்யும் ஊடகத்தின் பணியை நன்மை என்று கூறாமல் வேறு எப்படி கூற...

எங்கு திரும்பினாலும் ஊடகங்கள்... அதன் கண்களில் இருந்து எந்த ஒரு குற்றமும்... அநீதியும்.. சமூகத்துக்கு எதிரான எந்த செயலையும்... எவனும்... செய்து விட்டு தப்பி விடவே முடியாது.. அடுத்த கணம் போட்டு உடைத்து மக்கள் முன் நிறுத்தி விடும்.. வல்லமை பெற்ற ஊடகத்தைக் கொண்டாடாமல் இருக்க முடியாது... செய்தி தொடர்பாளர்கள்.... எங்கும்... மக்களோடு மக்களாக கலந்து இருக்கிறார்கள்.... அந்த நீதிக் கண்களில் இருந்து யாரும்.. இந்த நாட்டின் வளத்தை..... பலத்தை...... கொள்ளை இடவே முடியாது... ஒரு நாட்டில் ஏர் முனை....போர் முனை... பேனா முனை... மூன்றும் பலமாக இருக்கும் பட்சத்தில் அதுதான் வல்லரசு...இங்கு ஊடகம் என்பது தான்.. பேனா முனை.. அது பலமாகவே இருப்பதாகத்தான் இங்கு வாதிட்டவர்களின் மூலமாக நான் உணர்கிறேன்.... சேனல்களின் போட்டிகள் அவர்களின் வியாபாரம் சம்பந்தபட்டது. ஆனால்.. நமக்கு கிடைக்கும் செய்திகள்.. இன்னும் திருத்தமாக.. அந்தந்த ஊருக்கு குறித்த நேரத்தில் வந்து சேர்வது...... ஊடகங்களின் வளர்ச்சிகளால்தானே சாத்தியமாகி இருக்கிறது...

ஊடகத்தின் முன் நிறுத்தி விட்ட எந்த அநியாயமும்..... தப்பிக்க முடியாது என்பதற்கு.. சான்றுகள் நிறைய உண்டு...ஏனென்றால்... அது மக்களின் நம்பிக்கையில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.... எல்லா வாதங்களையும் விவாதாங்களையும்...கேள்விகளையும்.... சந்தேகங்களையும்.....மக்கள் முன் நிறுத்தி வைத்து கேள்வி கேட்கும் உரிமை கொண்ட ஊடகத்தின் சாயலை நேர்மையின் கைகளே தழுவ வேண்டுமே என்பதுதான் ஆசை... அது நடந்து கொண்டுதானிருக்கிறது.. என்பது இங்கே அசைக்க முடியாத யோசனையாகவும் இருக்கிறது...

எல்லா வினைக்கும் எதிர் வினை உண்டென்று நம் ஆங்கில பாட்டன் கூறியது போல...நன்மைக்கு எதிர் புறம் நின்று... எதிரியாகவும் நிற்கும்... .. தீமையின் வாயில்.. நாம் சற்று கவனத்தோடு...கடக்க வேண்டி இருக்கிறது.... அரசியல் இல்லாத எதுவும்.. இங்கு இல்லை... சிக்கி முக்கி கல்லில்... வந்த முதல் தீயில்... பற்றியது இந்த அரசியல்... பச்சை பசி ஆற்றுவதும்.. மிச்சம்... விசை ஆற்றுவதும் அரசியலே...

தேவைக்குத் தகுந்தாற் போல் தன்னை மாற்றி கொள்ளும்.. வியாபார தந்திர நுணுக்கதோடேதான் பல ஊடகங்கள் வேலை பார்க்கின்றன....என்பது ஊடகங்களின் வளர்ச்சி சமுதாயத்திற்கு தீமைதான் தருகின்றனவோ என்று சந்தேகிக்க வைக்கிறது...கோபத்தை தூண்டுகிறது.... நியாயமான கோபம்... கோபங்கள் இல்லாத இடத்தில் பேய்கள் ஆட்சி செய்யும்.. பிணங்கள்...மிச்சமாகும்...

கொஞ்சம் உற்று நோக்கினால் சரி என்றே படுகிறது...ஆம்... பண பலம்.... அரசியல் பலம்.. கொண்டவர்களின் தவறுகள் மூடி மறைக்கப் படுகின்றன.... வெளிவராமல் இருக்க பேரங்கள் பேசப் படுகின்றன.. இது மானுட பக்கத்தின் இருண்மைத் தத்துவங்கள்...சாதிகளின் திரியை மெல்ல பற்ற வைத்து விட்டு குளிர் காய்கின்றன... மதங்களின் மண்டையில்.. என்னை ஊற்றி வளர்ந்து விடும் வேலையையும் வெகு நுட்பமாக பார்க்கின்றன..

இது எல்லா கால கட்டங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன..... புத்திகள் கூர்மையாக்கும் அதே நேரத்தில் கத்திகளும் கூராக்கும் நடைமுறைச் சிக்கலிலும் ஊடங்களில் கண்கள் பிதுங்குகின்றன என்பதும் உண்மை..அந்தரங்கக காட்சிகளை முகப்பு அறையில் திரும்ப திரும்ப ஒளி பரப்பும் ஊடகத்தினால் ஒரு நன்மையும் இருக்க போவதில்லை... கொலையை எப்படி செய்தான் என்று பச்சை ரத்தம் வழிய வழிய காட்டும்.... எழுதும் ஊடகத்தின் வீரியம்... காசின் நோக்கத்தோடு... பக்க விளைவாக ...... மிகப் பெரிய அளவுக்கு நுட்ப திருகுதலை பதின்பருவத்து மனதுக்குள் விதிக்கும் என்றால் மிகை இல்லை... நடிகை உள்ளாடை போடாமல் வந்து விட்டதை வட்டமிட்டு காட்டும் ஊடகம்.. தலைகுனிவுதான்... அது மிகப் பெரிய தீமையை இந்த சமூகத்துக்கு செய்கிறது என்று மிகச் சத்தமாக கூற முடியும்.....மரண வீட்டில் சென்று மைக்கை நீட்டும் நாகரிகமற்ற ..... பண்பாடற்ற...செய்தி சேகரிக்கும் முந்தும் மனநிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்....நண்பர்கள் குறிப்பிட்டது போல.. ஊடகம்... வீட்டுக்குள் வந்து நாளைய தலைமுறையைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது... என்பதை மறுக்காமல் உள் வாங்கும் இன்றைய காலகட்டத்தை நாம் எத்தனை நிதானமாக கடந்தாலும் அதுதான் உண்மை என்று சுடுகிறது.... நிதர்சனம்...

சாக முடியாமல் கிடக்கும்...வறுமையின் விலா எலும்பு குழந்தையை போட்டோ எடுத்த ஊடகவிலாளர்.. பின் தற்கொலை செய்து கொண்ட வரலாறு நாம் அறிவோம்.. அந்த படம் புலிட்சர் விருது வாங்கியது....எப்படியும் அந்தக் குழந்தை செத்துதான் போனது... ஆனால்.. இங்கு கேள்வி என்னவென்றால்..... கழுகு என்ன ஆனது...?

ஊடகம்... இடைநிலை என்றால்.. கழுகாய் ஆரம்பத்தில் இருப்பது.. அதிகார பலம்..... பண பலம்.. அரசியல் பலம்....

அவைகள் ஊடகத்தை தன் போக்கில் பயன் படுத்துகிறது என்றும் புரிந்து கொள்ளலாம்தானே...

விடிய விடிய களத்தில் நின்று செய்தி சேகரிக்கும் ஊடகம்... மக்களின் பிரதிபலிப்பாக இருந்தாலும்.... சில நேரங்களில்.. ஒரு சார்புக்குள் போய்விடுவதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.. அது முதலாளித்துவத்தின் ஓங்குதல் என்ற புரிதலையும் நாம் இங்கு உள் வாங்க வேண்டியிருக்கிறோம்.... இந்த உலகமே ஒரு பத்து பணக்காரர்களின் கையில்தான் இருக்கிறது என்ற நிஜம் கடும் கசப்புதான்.... ஆனாலும்... சுட்ட நிஜம்.... மீண்டும்... சுடத்தானே செய்யும்.... தகுதி உள்ளவைகள்தான் தப்பிப் பிழைக்கும் என்பது அறிவியல் கூற்று.. ஆயிரம் குறைகள் இருந்தாலும்.. ஒரு நிறையை எடுக்கும் மன நிலையை நம் பிள்ளைகளுக்கு நாம்தாம் ஊட்ட வேண்டும்...மேடை எத்தனை கோணையாக இருப்பினும்.. ஆட்டக்காரன் வித்தை செய்து விடுவான் என்பதுதான் வலியது .... எல்லாவற்றையும் கடந்து வந்து சேரும்.. செய்திகளை உங்கள் அளவுக்காவது சரி பார்க்கும் திறனை நாம்தாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்..பாக்சிங்க்ல் ஒரு மொழி உண்டு... "எப்போதும் உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..." என்று... அது இங்கும் பொருந்துகிறது.... எல்லா துறையிலும் நன்மை தீமை இருக்கிறது... பொறுப்புள்ள ஊடகத் துறையிலும் அது நிரம்பியே இருக்கிறது...

ஊடகம் எனும் இந்தப் பேனா முனை கூராக இருக்கலாம்... மழுங்கி இருக்கலாம்... உடைக்கப் படலாம்.. உருவாக்கப் படலாம்.. ஆனாலும்.. பேனா முனை ஒன்று இருப்பதால்தான்... ஓர் ஆணவக் கொலையை உடனடியாக அறிந்து கொண்டு எதிர் வினை ஆற்ற முடிந்தது... சகாயத்தின் குரலை அதிகாரம் மறைக்க முயன்ற போதும்... ஊடகம்தான் மக்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்த்தது.... உயிரை விட துணித்தவன்தான் போர் முனையில் நிற்க முடியும்... அது பேனா முனைக்கும் பொருந்தும்... மல்லையாவின் கடன் பற்றி புட்டு புட்டு வைக்க முடிந்த ஊடகம்தான்... விவசாயின் தற்கொலையையும் வெளியே கொண்டு வருகிறது...எத்துணை குற்றசாட்டுகள் இருப்பினும்...ஒருவேளை ஒரு சார்பு நிலைக்குள் பலவந்தமாக... தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் சார்பாக என்று சார்ந்தாலும்...சாய்ந்தாலும்... காலத்தின் தேவையை... எப்படியாவது அளித்துக் கொண்டுதான் இருக்கிறது... எல்லாத் துறைகளைப் போலவும் அதிலும்.. கறுப்பாடுகள் இருக்கலாம்.. ஆனால் வெள்ளை ஆடுகள் ஒருபோதும் மறைவதில்லை.. அது கண்ணையாக்களை கொண்டு வந்து மக்கள் தலைவனாக்கிக் கொண்டுதான் இருக்கும்..

நமது நோக்கம்... எதிர்மறை அல்ல... நேர்மறை... நேர் நிற்கத்தான் பாரதி சொன்னான்.. அவனும் ஒரு பத்திரிகைக்காரன்...தான் எடுத்துக் கொண்ட பணிக்காக உயிரை விட்ட எத்தனையோ ஊடகவிலாளர்கள் உண்டு... அவர்கள்தான் நம் பிம்பமாக இருக்க வேண்டும்... காலம் காலமாக சமுதாயத்துக்கு புரட்சி என்று விதையை இந்த ஊடகங்களே ஊட்டி வளர்த்திருக்கின்றன... புரட்சிகள் இல்லாத தேசத்தில் விடுதலை சாத்திமில்லை.... இங்கே விடுதலை என்பது அன்னியப் பொருளில் இருந்து கூட.. அதையும் காட்டும் ஊடகம்தான்... செய்திகளையும் கொடுக்கிறது... அது வியாபார தத்துவம்.. வேறு வழி இல்லை... மாறு வேஷம் போட்டுதான்.. தப்பிக்க வேண்டுமெனில் தவறில்லை... அது தந்திரம்.... ராஜ தந்திரம். "எனக்கு பறவை தெரியவில்லை.. கண்கள்தான் தெரிந்தது"- என்ற நோக்கில்தான்.. ஊடகங்களை உள் வாங்க வேண்டும். காமம் சார்ந்தோ.. காதல் சார்ந்தோ... சினிமா சார்ந்தோ.... உணவு சார்ந்தோ... எதைச் சார்ந்து நீங்கள் இருக்கிறீர்களோ... அதைச் சார்ந்துதான் உங்கள் கவனம் போகும்...அது ஊடகத்தின் தவறில்லை... அவன் செய்திகளை கொட்டுகிறான்... நல்லவைகளை எடுக்க பழகிக் கொள்ளுங்கள்... தீயவைகள் காணாமல் போய் விடும்....... ஈழக் கொடுமைகளையும்... இஸ்ரேல் கொலைகளையும்... வெளியே கொண்டு வந்தது... ஊடகம்தான் தோழர்களே...அந்த நிலையில் இருந்து பார்த்தால்..... ஊடகத்தின் மேல் இன்னும் நம்பிக்கை குறையவில்லை... என்பதை உணர முடிகிறது....

- கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Apr-16, 11:54 am)
பார்வை : 455

மேலே