என் கவிதைகள் விற்பனைக்கல்ல
என் கவிதைகள்
விற்பனைக்கு அல்ல
என்பதை சொல்லாமல்
ஒரு காகம்
உயரத்தில்
பறக்கிறது ..
அதன் எச்சங்களில்
கோடி விதைகள்
மரங்களாகி விடுகின்றன !
என் கவிதைகள்
விற்பனைக்கல்ல
என்று சொல்லாமல்
ஒரு அருவி
நதியாகி கடலில்
சேர்கிறது ..
கோடானு கோடி
பயிர்கள் இதற்குள்
விளைந்து விடுகின்றன !
என் கவிதைகள்
விற்பனைக்கல்ல
என்று சொல்லாமல்
காற்றும்..மழையும்
மண்ணும் , வானும்
அற்புதங்கள் நிதம்
செய்கின்றன..
அகிலத்தை அதற்குள்
வாழவைத்து!
என் கவிதைகள்
விற்பனைக்கல்ல
என்று சொல்லிவிட்டு
பஞ்சைகளிடம்
கவிதை விற்ற
மனிதர்கள்..
..
..
என்ன மாற்றம்
ஏற்படுத்தினார்கள்?