மருத்துவம் --- நோய் நாடி சச்சிதானந்தன் சுகிர்தராஜா----

நோய் நாடி...
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
நான் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் படித்தபோது ஆங்கிலப் பாடப் புத்தகமாக Jerome K Jeromeஇன் ‘Three Men in A Boat’ என்ற நாவல் இருந்தது. அதில் ஒரு கதாபாத்திரம் வாசகசாலைக்குச் செல்வார். அவர் கண்ணில் ஒரு வைத்தியக் கலைக்களஞ்சியம் தென்படுகிறது. அதை வாசிக்கும்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வியாதிகளும் தனக்கு இருப்பதுபோல் படுகிறது. இப்படி ஒரு மோசமான நோயாளியா தான் என்று பதறிப்போய்விடுவார். இப்போது கலைக்களஞ்சியம் தேவை இல்லை. எந்தத் தொடுதிரை கணினியையோ அல்லது அலைபேசியையோ ஒரு வியாதிபற்றி மெலிசாகத் தொடுங்கள், உங்கள் சாதாரண தலைஇடி அல்லது தும்மல் ஏதோ எப்போலா (ebola) முதல் இன்று தென்கொரியர்களைப் பீதிக்குள்ளாக்கியிருக்கும் ஒட்டகக் காய்ச்சல் (MERS virus) வரை உங்களுக்கு இருப்பதாகத் தெரியும். அதுமட்டுமல்ல இந்த வருத்தங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்றும் எண்ணத் தோன்றும். இவைகளைப் படித்துவிட்டு எதோ நீங்கள் வைத்தியத்துக்கு நோபல் பரிசு பெற்ற ஞானி என்ற பிரமையும் ஏற்படும். ஆனால் உங்கள் வைத்தியர் அவரின் மருத்துவ நிபுணத்துவத்தில் அதீதமாகத் தலையிடுவதாக நினைத்துக் கொள்வார்.

வியாதிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று பிறரிடம் அனுதாபம் கிட்டாதவை. உங்களுக்குக் காய்ச்சல், இறுமல், மூக்கடைப்பு என்று சொல்லுங்கள்; சினிமா திரையிடும்முன் ஓளிபரப்பாகும் விளம்பரங்களுக்குக் காட்டும் அக்கறைகூட உங்கள்மீது காட்டமாட்டார்கள். எனக்கு பூஞ்சருகு (pollen) அதிகம் ஒத்துவராது. எனக்கு ஆங்கில வசந்த கால மாதங்களில் பூஞ்சருகு அதிகரிப்பினால் கண்கள் சிவந்துவிடும், தொண்டை கட்டிவிடும், மூக்கு அடைத்துவிடும். ஒருவரிடம் இருந்தும் ஒரு அனுதாபமும் வராது. இவன் உதவாக்கரை என்று கணித்துவிடுவார்கள். ஒரு காலத்து தமிழ் சினிமா ஆண் கதாபாத்திரங்கள்போல நற்பண்பும் சீரான தேகமுமுடையவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு உண்டு. மூக்கில் நீர் ஓடும்போது, இரண்டு கைகளும் கணினியின் விசைப் பலகையைத் தட்டும்போது ஏற்படும் அவதியைவிட ஆக்கினையான காரியம் உலகில் ஒன்றுமில்லை. இரண்டாவது வகை அதீத அனுதாபங்களை உருவாக் கும் வியாதிகள். உங்களுக்குப் புற்றுநோய் அல்லது மூளையில் கட்டி என்று சொல்லுங்கள், பரிதாபமும் கருசனையுமாக உங்களைப் பார்ப்பார்கள்.

வியாதிகளை மற்றவர்களுக்குச் சொல்வதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் அவர்களுக்கு அல்லது அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நேர்ந்த வருத்தங்களைக் கேட்கவேண்டிவரும். அவர்கள் சொல்லும் இந்தக் கதைகள் இன்னும் உங்கள் வேதனையை அதிகரிக்கும். அதுமட்டுமல்ல உங் களைப் பயமுறுத்துவார்கள். இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருவருக்கு இந்த வியாதி வந்தது, அவரின் காலை வெட்டியெடுத்துவிட்டார்கள், என்னுடைய மனைவியின் தம்பிக்கும் இதே வருத்தம் வந்து அவர் இப்போது எல்லா உணர்ச்சியும் இழந்து ஆழ்நிலை மயக்கத்தில் இருக்கிறார் என்று ஏற்கனவே கலங்கிப்போய் இருக்கும் உங்களை மேலும் குழப்பிவிடுவார்கள், இதில் வைத்தியர்களின் ஆலோசனை கூட உதவுவதாய் இல்லை. பயப்படாதீர்கள், இது அன்றாடமான சிகிச்சை (routine operation) ஒன்றுமே நடக்காது என்பார்கள். வைத்தியருக்கு இது தினமும் நடக்கும் வழக்கமான சாதாரண நிகழ்வாக இருக்கலாம். உங்களுக்கு அப்படி அல்ல. வைத்தியரின் பேச்சைப் பார்த்தால் ஏதோ பழுதடைந்த உங்கள் வாகனத்தின் முன்விளக்கை மாற்ற வண்டித் திருத்தகத்துக்குப்போவது போல் நீங்கள் அடிக்கடி அறுவை மருத்துவ அரங்கத்திற்குப் போய் உங்கள் உடலிலிருக்கும் ஒரு நஞ்சான உடல் உறுப்பை வெட்டியெடுத்தோ அல்லது ஒரு புது இருதயம் பொருத்தியோ, வீட்டுக்கு வந்து எந்த விதமான களைப்பும் இல்லாமல் ஐபிஎல் கிரிக்கட் போட்டி பார்க்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தக் கட்டுரையின் நோக்கம் வியாதிகள் பற்றி அல்ல. ஐக்கிய ராச்சியத்தின் தேசிய சுகாதார சேவை (National Health Service NHS) பற்றியது. ஐக்கிய ராச்சியம் என்ற பெயரைக் கேட்டதும் மூன்று காரியங்கள் நினைவுக்கு வரும். ஒன்று, பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் (BBC), இரண்டு நான் மேலே கூறிய தேசிய சுகாதாரச் சேவை, மூன்றாவது பிரித்தானிய பாராளுமன்றக் கட்டிடம். நீங்கள் முடியாட்சி ஆதரவாளராக இருந்தால் இங்கிலாந்தின் இராச குடும்பத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். புத்தகப் பிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் இந்தப் பட்டியல் ஒத்து வராது. பிரிட்டிஷ் வாசகசாலையையும் சேர்த்துக்கொள்ளும்படி அடம் பிடிப்பார்கள், பிரித்தானிய கலாச்சாரத்தில் தேசிய சுகாதார சேவை உன்னத இடம் வகிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக 2012இல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா கலாச்சார நிகழ்ச்சியில் தேசிய சுகாதார சேவைக்குக் கணிசமான நேரம் ஒதுக்கப்பட்டது நினைவிலிருக்கலாம்.

கடந்த தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் அந்தக் கட்சியின் சரித்திரத்தில் நினைவு கூரும்படியாக செய்த சாதனை இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிமுகப்படுத்திய இலவச சுகாதார சேவையாகும். நோயாளிகள் ஒரு சதம், இந்திய நாணயத்தில் ஒரு பைசா செலவழிக்கவேண்டியதில்லை. இந்தியா அல்லது அமெரிக்காபோல் உங்கள் குடல் வாலைத் துண்டிக்க மனைவின் தாலியையோ அல்லது உங்கள் வீட்டை மறுஅடகு வைக்கவோ வேண்டியதில்லை.

இந்தத் தேசிய சுகாதார சேவை 1945ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கத்தைச் சுருங்கச் சொல்லப்போனால் என்ன வருமானமுடையவராக இருந்தாலும் நோய் என்று ஆஸ்பத்திரிக்குப் போனால் வைத்தியம் இலவசமாக இருக்கவேண்டும். இதன் செலவுக்காக அவரவர் தகுதிக்கு ஏற்றபடி சம்பளத்திலிருந்து வரி கட்டவேண்டும். இந்த வரி அவ்வளவு பெரிதல்ல.

ஆங்கில இலவச சுகாதாரச் சேவைக்கு நிகராக உலகில் ஒன்றும் இல்லை என்று சொல்லலாம், ஒருவேளை சில ஸ்காண்டிநேவிய நாடுகளையும் கனடாவையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் முன்பணமாக 75 டாலர்கள் கட்ட வேண்டும். அமெரிக்காவில் கிரேக்கத் தொன்மங்களில் வரும் கதாபாத்திரங்களின் திடகாத்திரமான தேகம் இல்லா விட்டால் மானிட ஜாதியில் வசிக்கத் தகுதியில்லை என்று எழுதப்படாத ஒரு கருத்தாக்கமுண்டு. அலைபேசி எண்கள் கொண்ட ஒரு கணிசமான மருத்துவக் காப்புறுதியில்லாமல் அமெரிக்காவில் வசிக்கமுடியாது.

நான் 80களின் தொடக்கத்தில் மருத்துவமனையில் பதிவுசெய்த போது மூன்று வைத்தியர்கள்தான் வேலை பார்த்தார்கள். மூன்று பேரும் ஆங்கிலேயர்கள். மூன்று பேரும் ஆண்கள். இன்று இந்த மருத்துவமனை இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் ஆசியர்களின் பொறுப்பில் இருக்கிறது. ஒரு வங்காளிப் பெண்தான் இந்த மருத்துவமனைக்குத் தலைமை தாங்குகிறார். ஒரு காலகட்டத்தில் இந்தியர்களும் இலங்கையர்களுந்தான் குடும்ப மருத்துவர்களாகப் பணியாற்றினார்கள். சட்டத் திருத்தத்தினால் இவர்களின் தொகை தந்தி கொண்டுவரும் சேவகர் போல் குறைந்துவிட்டது. இன்றைக்கு ஆங்கில சுகாதார சேவையில் வேலை பார்க்கிற வைத்தியர்கள், தாதிகள், கதிர்வீச்சு மருத்துவர், நோயாளர், வானூர்தி ஓட்டுநர் 40 வீதத்தினர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், தேசிய சுகாதார சேவை ஐக்கிய ராச்சியத்தின் பல்லின, பல்நாட்டுத் தன்மையைப் பிரதிபலிக்கும் முன்வடிவாக இருக்கிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆங்கில இனவாதக் கட்சியான யூகிப், அயல் நாட்டு வந்தேறிகளைத் தடைசெய்யும்படி பிரச்சாரம் செய்தார்கள். இவர்கள் சொல்வது நடைமுறைக்கு வந்தால் இங்கிருக்கும் ஆஸ்பத்திரிகளை மூடவேண்டிவரும்.

நாளார்ந்த வியாதிகளைக் குணப்படுத்துவதுடன், இவர்கள் செய்யும் தடுப்பு சுகாதார சேவை மெச்சத்தக்கது. குடல், மார்பு, கர்ப்பப்பைப் புற்றுநோய் உடலில் பரவியிருக்கிறதா என்று இரண்டாண்டுகளுக்கு ஒரு தடவை இலவசமாகப் பரிசோதிக்கிறார்கள். கண்களைக்கூட பரிசோதனை செய்யலாம். இதனால் ஆங்கில தேசிய சுகாதார சேவை பூமியில் உதித்த கடவுளின் இராச்சியம் என்று அர்த்தமல்ல. குறைகள் இருக்கவே செய்கின்றன. குடல் இறக்க (hernia) அறுவை சிகிச்சைக்கு ஆறு மாதங்களாவது காத்திருக்கவேண்டும். சில நகரங்களில் உங்களின் குடும்ப மருத்துவரைப் பார்க்க ஒரு வாரமாவது எடுக்கும். இதற்கிடையில் நீங்கள் குணமடைந்திருப்பீர்கள் அல்லது உங்கள் புற்றுநோய் உடல் முழுதும் பரவியிருக்கும்.

ஒரே நாளில் ஆங்கில சுகாதார சேவையின் அழகானதும், அவலட்சணமானதுமான முகத்தைப் பார்த்தேன். அதை விபரித்து இந்தப் கட்டுரையை முடிவுக்குக் கொண்டுவருகிறேன்: ஒரு சனிக்கிழமை என் கண்களுக்கு லேசர் சிகிச்சைக்காக பார்மீங்கம் Queen Elizabeth மருத்துவமனைக்குப் போயிருந்தேன். இந்த மருத்துவமனை புதியது. அய்ரோப்பாவில் நவீன வசதிகளுடைய வைத்தியசாலைகளில் இதுவும் ஒன்று என்று சொல்கிறார்கள். கண் சிகிச்சை குறிப்பிட்ட நேரத்திற்கு முடிந்துவிட்டது. எதோ ஒரு வெள்ளைத் திராவகத்தை என் கண்ணில் ஒரு இளம்மாது பூசினார். இவர் மொரோக்க நாட்டவர் என்று சிகிச்சையின் போது அறிந்துகொண்டேன். இவர் காணொளி விளையாட்டுச் (Video game) சந்ததியைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். ஒரு தொலை இயக்கக் கருவியை

(remote control) கையில் ஏந்தி எதிரிகளைச் சுடுவதுபோல் ஒளிக் கதிரை என் கண்களுக்கு ஏவினார். எனக்கு Star Trek இல் Captain Kirk சொல்லும் பிரபலமான நவீன நகர்ப்புற சுலோகமான “Beam me up, Scotty” என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது. சொல்லவேண்டும் போல் இருந்தது, ஆனால் சொல்லவில்லை. தேய்வழக்கில் சொல்லப்போனால் கண்மூடி திறக்குமுன் விசயம் முடிந்துவிட்டது. பிறகு என் கண்ணுக்குப் போடுவதற்கு துளிமருந்து (drops) ஒன்றைச் சீட்டில் எழுதித் தந்தார். அன்று சனிக்கிழமை. ஆகையினால் Queen Elizabethஇல் இருக்கும் மருந்துக் கடை பூட்டியிருந்தது. ஒரு நாளைக்கு நாலு தடவை போடவேண்டிய துளி மருந்து இது என்று சொல்லியிருந்தார். அவர் சொன்ன தொனியில் இந்த துளி மருந்தைப் போடாவிட்டால் தங்கப்பதுமை படத்தில் வரும் சிவாஜி கணேசன் போல் என் கண்கள் ஆகிவிடுமோ என்று எனக்குப் பயம் வந்துவிட்டது.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நான் வழமையாக மருந்து வாங்கும் மருந்தகத்திற்குப் போனேன். அவர் மருந்துச் சீட்டைப் படித்துவிட்டு இது இருப்பில் வைத்துக்கொள்ளும் சரக்கல்ல. நான் இன்றைக்கு மின் அஞ்சல் அனுப்பினாலும் மருந்து வர திங்கள்கிழமையாகும் என்றார். இருதய மாற்று சிகிச்சை கூட சில மணி நேரங்களில் முடிந்துவிடும். மருந்து வர மூன்று நாளா என்று யோசித்துக் கொண்டேன். இது கண்ணுக்குக் கட்டாயம் போடவேண்டிய மருந்துத் துளி என்று அவர் இன்னும் பயமுறுத்தினார். தங்கப் பதுமை சிவாஜி மறுபடியும் வந்து போனார். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது என்னுடைய மருந்துக் கடைக்காரரே வழி சொன்னார். Queen Elizabethஇன் பழைய கட்டிடத்தில் ஒரு மருந்தகம் இருக்கிறது, இது அங்கே கிடைக்கலாம் என்று சொன்னார். இந்த மருந்தகத்தின் விலாசம் பூகோள இடங்காணல் கருவியையே (Global Positioning System - GPS) திணற வைத்தது. அந்தக் குளிரான சனிக்கிழமையில் ஒருவாறு கட்டிடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். விக்டோரியன் கால சாயல் தென்பட்டது. உள்ளே போனால் அங்கே கிட்டத்தட்ட எட்டுப் பேர் வேலைசெய்தார்கள். அந்தக்காலத்து கிரிக்கட் நடுவர்கள் அணியும் வெள்ளையான நீண்ட அங்கி அணிந்திருந்தார்கள். ஒருவர் என்னை அணுகினார். அவரிடம் என் மருந்துச் சீட்டை நீட்டினேன். இந்த மருந்தைத் தர எங்களுக்கு உரிமையில்லை என்றார். இது தலைப்பாக்கட்டு பிரியாணிக் கடைக்காரர் இங்கே பிரியாணி விற்பதில்லை என்பதைப் போன்றது. ஏன் என்று கேட்டேன். ‘இது பச்சைக் கடுதாசியில் எழுதப்பட்டிருக்கிறது. வெள்ளைக் கடுதாசியில் எழுதப்பட்ட மருந்துகளைத்தான் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு’ என்றார். எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் அவர் அசையவில்லை. அவருடைய தேக மொழியையும் அதைவிட அவர் பாவித்த அதிகாரப்பூர்வமான ஆங்கிலத்தையும் பார்த்தால் இந்தியப் பணித்துறைஞர்கள் (bureaucrats) ஏதோ அரிவரி வகுப்பு மாணவர்கள் போல் தெரிவார்கள். இன்னும் தொந்தரவு கொடுத்தால் காவல் துறையினரை அழைத்து விடுவாரோ என்று பயம் வந்தது. வெளியே வந்தேன். என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

மறுபடியும் கண் சிகிச்சை நடந்த இடத்திற்கு வந்தேன். அங்கே சிகிச்சை செய்த வைத்தியருக்கு உதவியாளராக இருந்த தாதி நின்றிருந்தார். என்னை அடையாளம் கண்டு என்ன விசயம் என்றார். நடந்ததைச் சொன்னேன். மருந்துச் சீட்டைத் தாருங்கள். வேறு மாற்றுத் துளிமருந்து இருக்கிறதோ என்று கேட்கிறேன் என்று உள்ளே போனார். சில நிமிடங்களில் இன்னுமொரு மருந்துச் சீட்டுடன் வந்தார். அதை என்னிடம் தந்துவிட்டு நீங்கள் வழக்கமாக மருந்து வாங்கும் கடையின் பெயர் என்னவென்று கேட்டுவிட்டு அதன் தொலைபேசி எண் இருக்கிறதா என்று கேட்டார். ஏன் இந்த எண்ணைக் கேட்கிறார்என்று எனக்கு விளங்கவில்லை. அந்த எண் பதிவு செய்யப்பட்ட என் கைபேசியை நீட்டினேன். அந்த என்னுடைய மருந்தகத்துடன் தொடர்புகொண்டு புதிதாக எழுதித் தந்த துளிமருந்து இருக்கிறதா என்று விசாரித்தார். உங்களை அலைக்கழிக்க விரும்பவில்லை. அந்த துளி மருந்து இருக்கிறதா என்று உறுதிசெய்து கொண்டேன். போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். பொது யுகதிக்கு முன் நான்காம் நூறாண்டில் வாழ்ந்த கிரேக்க வைத்திய ஞானி Hippocrates மருத்துவர்களுக்குக் கொடுத்த அறிவுரை: “குணமாக்கு, மருத்துவம் பார். ஆறுதல் கூறு”. இவறை அந்த தேசிய சுகாதார சேவையின் தாதியிலும் அந்த மொரோக்க நாட்டு மருத்துவரிலும் பார்த்தேன். ஒரே நாள், ஒரே நிறுவனம். இரண்டுவிதமான அனுபவங்கள்.

எழுதியவர் : (15-Apr-16, 12:12 am)
பார்வை : 108

மேலே