மல்லிகைப்பூவைத் தழுவிய இன்பம்
சுடு தேநீரின்
நறுமணத்தோடு புலரும்
என் அதிகாலைக்குச் சூரியன் நீ.
*
உன் புன்னகை ஆற்றில்
குளித்துக் கொள்ளும்
அந்நாளின் தூய்மை
என்னை பரபரப்பாய் இயங்க விடுகிறது
*
அதிகாலை அவசரங்களில்
உன்னால் பின்னப்படும்
இடியப்பங்களின் சிக்கல்களுக்கு
சாம்பார் எண்ணெய் பூசி
அவிழ்த்துக்கொள்ளும்
விரல் சீப்புகள்
மல்லிகைப்பூவைத் தழுவிய
இன்பம் பெறுகின்றன
*
கஞ்சிக் குளித்து
விரைப்படைந்த சட்டையை அணிந்து கம்பீரமாகும்
அலுவலகப் பயணத்தின்
துணைக்காக கையில்
நீ தரும் உணவுப்பொதிக்குள்
அடைபட்டுக் கிடக்கும்
உன் நேசம்
மதிய உணவு மேசையில்
விடுதலையடையும் வேளை
சக தோழர்கள் மூக்கில் விரல்வைக்கக் காரணமாகிறது
*
இடையிடையே
வேலைப் பளுக் கடலில்
தத்தளிக்கும்
என் அவசரக் கப்பலை
கைப்பேசிச் சிணுங்களினூடே
நங்கூரமிட்டு நிறுத்திப்பார்க்கும்
உன் திடீர் கரிசனம்
ஒத்தடம் போடும்.
*
என்றாலும் எப்போதும்
ஒரு அணுகுண்டைத்
தயாராக வைத்திருக்கும்
உன் உதடுகளிலிருந்து நமக்கான
சின்னச் சின்ன யுத்தங்கள்
வெடிக்கின்றன
*
சமாதானத்தில் முடியும் சிலவற்றுக்குப் பட்டுச்சேலைகளைக் கொடியாய்ப் பறக்கவிட வேண்டியதாகி விடுகிறது எனக்கு
*
மௌனத்தில் முடிந்தவைகள் போக
எஞ்சியவற்றை
முத்திரை சேகரிப்பதுபோல் சேகரித்து அவ்வப்போது
நீ பிரளயிக்கும்போது
நான் தரைமட்டமாகி விடுகிறேன்.
*
ஒரு சில காரணங்களுக்காக
மாத விடுமுறை எடுத்துக்கொள்ளும்
உன் பேச்சுவார்த்தைக்கு
தாமதமாகும் சம்பளப்பணம்
முற்றுப்புள்ளி வைக்கும்போது
மறுபடியும் பௌர்ணமி நிலவாகிவிடுகிறாய்.
*
ஊடலும் கூடலும் சண்டையும் சச்சரவுமான எல்லா சந்தர்ப்பங்களிலும்
உன் நுதழேந்திய குங்கும மழையில் பூரித்துப்போவதால்தான்
சாமியின் பெயரிலாவது
வீட்டுக்குக் கொண்டுவர முடிகிறது
உனக்கான ஒரு முழம் பூ.
*
என் தேவைகள் எனக்கே தெரியாதபோது
என் தேவைகள் எதுவெனத்
தேடுவதே
உன் தேவையாகிய வாழ்வில்
உன்னை எனக்காகத் தேடிய
தேடியத் தேடலைத் தேடி
அதன் திருவடிகளில்
விழச் சொல்கிறது வாழ்க்கை.
*