வாழ்க்கைப் போராட்டம்
முதியவர் ஆற்றங்கரையில்
வீசிக் கொண்டிருக்கிறார் தூண்டில்,
மீன்களோ சிக்கவில்லையே!
மேக மூட்டம் வானத்தில்
ஆற்றுப் பரப்பெங்கும் தூரல் – தனிமையில்
முதியவர் கரை ஓரத்திலே!
இயற்கையை வேண்டுகிறார்,
இறைவனிடமும் பிரார்த்தனை - ஆனாலும்
வானம் மௌனமாய் அழுகிறதே!
கிழிந்த ஒட்டுப்போட்ட குடையின்
கீழே முதியவர் மோனத் தவத்தில்,
சில மீன்களாவது சிக்க வேண்டுமே!
பசிக்கு உணவு வேண்டும்,
அவருக்கு உதவ, பிள்ளையுமில்லை,
உயிர் வாழ்ந்தாக வேண்டுமே!
இருள் சூழும் நேரம் - தூண்டிலில்
சிக்காமல் தூண்டில் புழுவை எடுக்க
மீன்களும் முயற்சிக்கின்றனவே!
வாழ்க்கைப் போராட்டம்! இருவருமே
வாழ்ந்தாக வேண்டும் – இதுவும்
இயற்கையின் ஓர் விளையாட்டே!