கவிதை தொக்கு - 6 - வேளாங்கண்ணி

கவிதை தொக்கு - 6 - அ.வேளாங்கண்ணி
=================================

பரந்து விரிஞ்சிருக்கும்
====கடலவிட நீ பெருசு
நீபொய்த்துப் போனியினா
====உசுரிருந்தும் நான் தரிசு
அரசியல்வாதி போல‌
====பலமுகத்த நீ காட்ட‌
வயலுக்கும் வியாதிவரும்
====எம் பொழப்பு மண்ணாகிடும்

மழவரும்னு எதிர்பார்த்தா
====கருமேகம் ஒளிய வைப்ப‌
வெயில்வரும்னு பாக்கையில‌
====பெருமழய பொழிய வைப்ப‌
நீதானே எங்களோட‌
====மானம் காக்கும் கூரையான‌
எம்பொழப்ப நெனைக்கையில‌
====மனசு விட்டுப் போயிடுச்சு

நீபோட்டுருப்ப கோடிநகை
====ரெண்ட பொஞ்சாதிக்கு அனுப்பிவையி
ஒன்ன அலங்கரிக்கும் ஏழுவண்ண‌
====பொடவ கிழிச்சு உதவிசெய்யி
எங்கநகையெல்லாம் வங்கிவாங்கி
====ஏலம் தான் விட்டுடிச்சு
எங்கஉடுப்பெல்லாம் அரசாங்கம்
====முழுசா உருவி விட்டுடிச்சு

உனப்போல எப்போதும்
====தெளிவா இருக்க ஆசதான்
எதைக்கண்டும் கலங்காத‌
====மனசப் பெறவும் ஆசதான்
என்னாசை நிராசையே
====எனக்குத் தெரியும் ஒருபாஷையே
அந்தப்பாஷையில் எனையுலுக்கும்
====ஒத்தவார்த்தை அது"பசி"யே

ராத்திரியில் நான்பார்க்கும்
====தொலைக்காட்சி பொட்டி நீயே
வெதவெதமா நீசிரிப்ப‌
====ஒனைப் பார்த்தே ஒறங்கிடுவேன்
பேயுக்கும் பிசாசுக்கும்
====துளியும் பயம் எனக்குயில்ல‌
நாளை யெப்படி விடியுமுன்னு
====நெனச்சா உசுரே போயிடுதே

ஒன்ன எட்டிப்பிடிச்சிட‌த்தான்
====சின்ன வயசில் ஆசப்பட்டேன்
ரெக்க கட்டிப்பறந்திட‌த்தான்
====மனசுல கனவு வச்சிருந்தேன்
வானமே எங்குரல் கேக்கிறதா
====உன்னையும் அதிர வைக்கிறதா
கயித்தில் ஊசலாடும் வாழ்க்கைக்கண்டு
====உனக்கும் கண்ணீர் சுரக்கிறதா...

தலைப்பு: வானம்

கவிதை தொக்கு தொடரில் எழுத வாய்ப்பளித்த தோழர் கவிஜிக்கு என் மனமார்ந்த நன்றி....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Apr-16, 8:17 am)
பார்வை : 892

மேலே