படிக்கப்படா பக்கங்கள்

உலக மொழியிலல்ல
உணர்வின் வழியில்
எழுதப்பட்டவை
இக்கல்வெட்டுகள்!
கால நதியில்
கரையான் திண்ணும்
காகித
குவியலுக்கிடையில்
பழுப்பேற
விலைக்கூடுவதும்
பழம்புண்ணில்
களிம்பிடுவதும்
இவை மாத்திரமே!
கற்றுணர்ந்த
பல்மொழி
அறிஞனுக்கல்ல...
கடுகேனும்
உணர்வாழம்
கொண்டவனுக்கே
விளங்கும்
ஓரிரு சொற்களேனும்...!
எத்தனை தலைமுறை
உருண்டோடினும்...
எத்தனை கோரங்கள்
நிகழ்ந்தேறினும்
கருவறை இறங்கி
உண்ட மண்தொட்டு...
தட்டான் விரட்டி
ஓடிய வரப்பு!
ஓணான் பிடித்து
திணித்த புகையிலை!
குளக்கரை பாய்ந்து
போட்ட குதியாட்டம்!
கண்ணாமூச்சி ரே ரே
ஆடிய மின்கம்பம்!
முதன்முதல்
காதல் முகிழ்த்த
மழைத்துளி!
முதல் வரி கவிதை
சிலிர்த்த தாவணி!
சைக்கிள் ஓட்டி
சிராய்ந்த சாலையென...
தொடர்புடையோர்
இடம்பெயர்ந்து
தொலைத் தூரம்
சென்ற பின்பும்
பழகியோரெல்லாம்
குடிமாறி
விட்டொழித்து
மறந்த பின்னும்
காதல்,வலி,ரணமென
காலாதிகால
நினைவையெல்லாம்
கண்ணிமையாய்
சுமந்தபடி
காலசைக்கிறது...
பால்யம் படர்ந்த
களங்களெல்லாம்!
ஏறும்வரை
வணங்கப்பட்டு
எட்டியபின்
எத்தப்படும்
ஏணிகளாய்...
காலங்கள் மறைந்தாலும்
கதாபாத்திரங்கள்
கரைந்தாலும்
எக்கசக்க
ஆசையோடு
எந்த இதழுக்கோ
தவம் கிடக்கிறது
படிக்கப்படா
பக்கங்களாய்!!!
**********************

எழுதியவர் : Daniel Naveenraj (18-Apr-16, 7:10 pm)
பார்வை : 106

மேலே