விழித்துக் கொள்ளும் கவிதை

தூறல் நனைந்த
மேகச் சிறகுகளை
தொட்டுத்
துவட்டி வரும்
இள வெயில்

சாளரங்களினூடு
சாயும் ஒளியில்
நீளும் பொழுதுகளை
நேர்த்தியாய்
அளக்க தொடங்கும்
நிழல்கள்

விடிகாலைக்
காற்றுடன்
விதம் விதமாய்
கதை பேசும்
வாசல் மல்லிகை
வாசம்..

கலைந்து போன
தலையுடன்
காற்றோடு
கண்ணாமூச்சி ஆடும்
வேப்பம் சருகுகள்

எண்ணத் தொலையாத
வண்ணக் கனவுகளை
எடுத்துச் சென்ற மழை
நழுவ விட்ட துளிகள்
நாளினது ஞாபகக் கொடிகளில்
காய்ந்து கொண்டிருக்கும்

வெற்றுத் தரையில்
விடியலைக் குறி வைத்து
வந்தமரும் வேனிற் பட்சிகள்
நேற்றுத் தூவிய
நினைவுச் சோற்றை
கொத்தத் தொடங்கியதும்
விழித்துக் கொள்கிறது
என்னுள்ளும் கவிதை

எழுதியவர் : சிவநாதன் (18-Apr-16, 10:29 pm)
பார்வை : 83

மேலே