விலகாத வரம் வேண்டும்
அந்த அதிகாலை விடியல் அவனுக்கு ஏதோ வினோதமாகத் தெரிந்தது. தன்னைச்சுற்றி அந்த சூழல் என்ன என்பது சிறிது நேரம் அவனுக்குப் புரியவில்லை. கண்களை மூடி தன்னை அமைதிபடுத்திவிட்டு மீண்டும் கண்களைத் திறந்தான். அது ஒரு மருத்துவமணை, நான் எப்படி இங்கு வந்தேன், அதுவும் நோயாளிகளுக்கான உடையை அணிந்திருக்கிறேன். எனக்கு என்ன நேர்ந்த்து, யோசித்தவனுக்கு தலைவலி ஒன்றே பதிலாகக் கிடைத்தது. ஆம் நம் கதையின் நாயகன் விஷ்ணு இருந்தது, மாபெரும் சென்னை சிட்டியை விட்டு சற்று தள்ளி அமைந்திருந்த அந்த மனநோயாளிகளுக்கான மருத்துவமணை. பார்ப்பதற்கு நல்ல உயரம், நல்ல நிறம், அழகான முகம் சிகிச்சையில் இருந்த காரணத்தால் சற்றே வாடியிருந்தது அந்த முகம். ஆனாலும் அந்த கண்களில் உள்ள ஈர்ப்பு சற்றும் குறையவில்லை. தன் தலையை கையில் தாங்கி அமர்ந்திருந்த விஷ்ணு தன் அறையினுள் யாரோ வருவது போலத் தோன்றவே தலையை உயர்த்தி ஆவலுடன் பார்த்தான். அந்த மருத்துவமணையின் உரிமையாளர் .விஷ்ணுவின் தந்தையுடைய சிநேகிதர் டாக்டர் பரமசிவம் தான் வந்துகொண்டிருந்தார்.
அங்கிள் நீங்களா? நான் எப்படி இங்கு வந்தேன் ? எப்போது வந்தேன்? யார் என்னை அழைத்து வந்தது? எவ்வளவு நாளாக இங்கு இருக்கிறேன்? எனக்கு என்ன நேர்ந்தது? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றான். ஆனால் பரமசிவம் பதிலேதும் சொல்லாமல் பரவசத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்.
அங்கிள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன், நீங்கள் அமைதியாகவே இருக்கின்றீர்களே, ஏதாவது பேசுங்கள். எனக்கு தலை வெடித்துவிடும் போல இருக்கிறது.
மகிழ்ச்சி நிறைந்த குரலில், விஷ்ணு நீ குணமடைந்துவிட்டாய். மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இன்னும் ரொம்ப நாள் ஆகும் என்று நினைத்தேன். இவ்வளவு விரைவில் நீ குணமடைந்தது அதிசயம்தான். இதற்கு காரணம் எங்களுடைய சிகிச்சை மட்டுமல்ல நந்தினியின் உழைப்பும், அவளுடைய தியாகமும் தான் .
விஷ்ணு கேட்டான் யார் நந்தினி, அவள் என்ன தியாகம் செய்தாள், அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.
பரமசிவம் அயர்ந்து போனார். மனநிலை பாதித்தவர்களுக்கு குணமடைந்ததும் அதற்கு முன் நடந்தது நினைவில் இருக்காது என்று அவருக்கு நன்றாகவேத் தெரியும் இருப்பினும் விஷ்ணு நந்தினியை அவ்வாறு கேட்டது அவருக்கு மிகவும் கவலையை அளித்தது. நந்தினி வந்து இதை கேட்டால் மிகவும் வேதனைப்படுவளே . அதோடு அவளுக்கு வேறு யாரும் ஆதரவு இல்லையே. எங்கு செல்வாள், அவள் குடும்பத்தையே இழந்து நிற்ப்பதற்கு காரணமானவனே அவளை யாரென்று கேட்கிறானே. அவளது எதிர்காலம் அழிய காரணமாய் இருந்தவனே இவ்வாறு கேட்டால் அவள் எங்கு செல்வாள். இந்த உலகம் அவளை தவறான பார்வை தானே பார்க்கும். கடவுளே இது என்ன சோதனை அந்த பெண்ணிற்கு இன்னுமா விடிவுகாலம் வரவில்லை. உன் லீலைகளை முடித்துக்கொள்ளமாட்டாயா. அவளுடைய வாழ்க்கையில் இனி இழப்பதற்கு என்ன இருக்கிறது என்று அவளை இவ்வளவு அலைக்கழிக்கிறாய், போதுமப்பா உன் விளையாட்டை தயவு செய்து இத்தோடு முடித்துக்கொள்.
அவர் சிந்தனையில் ஆழ்ந்திருக்க பலமுறை அழைத்தும் சுயநினைவு வராதவர் விஷ்ணுவின் கரங்கள் தன்னை உலுக்கியதால் இவ்வுலகிற்கு வந்தார்.
என்ன அங்கிள் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன், நீங்கள் ஏதோ யோசனையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன நேர்ந்தது. யார் அந்த நந்தினி அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், நான் இங்கு எப்போது வந்தேன் சீக்கிரம் சொல்லுங்கள் ப்ளீஸ்.
சொல்கிறேன், நீ உன்னுடைய அம்மா அப்பா இறந்த பிறகு மனசு தளராமல் படித்து பிசினசில் உன் அப்பாவையே மிஞ்சி பெரிய அளவில் வளர்ந்து நின்றாய். ஆனால் உன்னுடைய சொந்தங்கள் என்ற பெயரில், உன் கூடவே இருந்த உன் அம்மாவின் ஒன்றுவிட்ட அக்காவின் குடும்பத்திற்கு உன் வளர்ச்சி பிடிக்கவில்லை.
ஆனால் உன் சொத்துக்கள் மட்டும் பிடித்திருந்தது. உன் சொத்துக்கள் அனைத்தையும் அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் நீ அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவே சுதந்திரத்தை கொடுத்திருந்தாய். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. உனக்கு ஒரு குடும்பம் என்று வந்துவிட்டால், அவர்களின் நிலை என்ன ஆவது என்று பயந்தார்கள். உன்னைக் கொன்றுவிடலாம் என்று முடிவெடுத்த அவர்கள் பின்பு அந்த முடிவை மாற்றிக்கொண்டனர். அது உன் மீது உள்ள பசத்தாலோ, இறக்கத்தாலோ அல்ல. நீ இறந்து விட்டால் உன் சொத்துக்கள் ட்ரஸ்டிற்கு போய்விடும் என்கிற பயத்தால். நீயும் அந்த வீட்டில் இருக்ககூடாது, உன் சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையும் அவர்களைவிட்டு போகக்கூடாது. அதற்கு என்ன செய்வது என்று யோசித்தார்கள்.
அப்போதுதான் ஒரு வைத்தியனை பற்றி அவர்களுக்கு தெரியவந்தது. அவனிடம் சென்று உதவிகேட்டனர். பணத்தசையில் அவனும் ஒத்துழைப்பதாக கூறி ஒரு மருந்தையும் கொடுத்தான். இதை தினமும் விஷ்ணுவின் உணவில் கலந்து சமைத்துக்கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய மூளை தன் திறனை இழந்து பைத்தியமாக மாறிவிடுவான். பிறகு அவனை ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் விட்டுவிடுவோம். இங்கு எல்லோரிடமும் அவன் ஓய்விற்காக வெளிநாடு சென்றிருக்கிறான் எனவும், யாரும் தொல்லை செய்யக்கூடாது என்பதற்காக எந்த இடம் என்று சொல்லாமல் சென்றுவிட்டான் எனவும் கதைகட்டிவிடலாம். இவ்வாறு வைத்தியன் கூற அந்த யோசனை சரியென்று அவர்களுக்குபட்டது .
ஆம் விஷ்ணுவிற்கு இந்த பழக்கம் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறையாவது வெளியூர்பயனம் செல்வான். ஆகவே இது அவர்களுக்கு சரியான யோசனை என்று தோன்றியது. ஆனால் அவர்களில் ஒருவனுக்கு மட்டும் திட்டம் முழுமையடையாததுபோல தோன்றியது. அவனுடைய அலுவலக பணியாளர்கள், நண்பர்கள் அனைவரும் சில நாட்களில் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்றால், அவர்களே இப்படி ஒரு பயணத்தை எதிர்பார்க்க வேண்டும். அதற்கு அவனுடைய நடத்தையில் சந்தேகங்களை ஏற்படுத்தவேண்டும். அதுவும் அவனுக்கே தெரியாமல், அவனுக்கு தெரிந்தால் நம் கதை முடிந்தது. எனவே வெகு ஜாக்கிரதையாக செய்யவேண்டும் என்று பலவாறு யோசித்தார்கள்.
அவர்களுக்கு அந்த விபரீத யோசனை தோன்றியது. ஒரு வசதியானவன் கெடுவதற்கு மது மாது இவை இரண்டுமே போதுமானது. ஆனால் விஷ்ணு இந்த இரண்டிலும் மிகவும் கண்டிப்பாக இருந்தான். இருந்தாலும் அவர்கள் தேர்ந்தெடுத்தது அந்த வழியைத்தான்.
விஷ்ணுவின் அலுவலக பணியாளர்களின் காதில் விழுவது போலவும், இரகசியம் பேசுவது போலவும் பேச ஆரம்பித்தனர்.
நம்ம விஷ்ணு இப்போதெல்லாம் ரொம்ப குடிக்கிறான். சொன்னால் மிகவும்
கோபித்துகொல்கிறான். அவன் பேச்சை மீறி அவனுக்கு புத்திமதி கூறவும் பயமாக இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை.
அட குடிமட்டும் இல்லப்பா இப்போல்லாம் எதோ ஒரு பொண்ணு கூட சுத்திட்டு இருக்கான். அந்த பொண்ணும் ரொம்ப அழகா இருக்கிறாள், நல்லா பெரிய இடமா பார்த்து வளைத்துவிட்டாள். விஷ்ணுவும் மந்திரிச்சுவிட்டமாதிரி அவளையே சுத்தி சுத்தி வருகிறான். இது எங்க போய் முடியபோகிறதோ தெரியவில்லை.
எனக்கென்னவோ அந்த பொண்ணு இவன நல்லா ஏமாத்தி பைத்தியமா சுத்தவிடபோகிறாள். என்று இவர்கள் பேச்சு அலுவலர்கள் காதில் விழுவதுபோல பேசினார்கள். எதிர்பார்த்தது போலவே இந்த செய்தி பரவ ஆரம்பித்தது.
ஒரு பக்கம் அவனுடைய பெயர் அழிந்துகொண்டிருந்தது, மற்றொரு பக்கம் அவனுடைய மனநிலை மாறிக்கொண்டிருந்தது. அனைத்தும், பேராசை பிடித்த அந்த வஞ்சகர்களின் திட்டப்படி நடந்து கொண்டிருந்தது என்று அவர்கள் எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் மேலே இருப்பவன் எல்லாவற்றிற்கும் சேர்த்து முதலிலேயே திட்டத்தை போட்டுவிட்டனே. அப்போதைக்கு கடவுளின் திட்டமும் வஞ்சகர்களுக்கு சாதகமாகவே இருந்தது. முடிவு இறைவனுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.
இவர்களுடைய திட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண் சிக்கிக்கொண்டாள். அது எப்படியென்றால், இவர்கள் அலுவலர்கள் கேட்கும்படி பேசிய அனைத்தையும் பத்திரிக்கையில் இருந்த ஒருவனும் சேர்ந்தே கேட்டுவிட்டான். அவனுக்கு, இந்த செய்தியை எப்படியாவது நம் பத்திரிக்கையில் போடவேண்டும் என்று தோன்றியது. ஒரு பிரபலமான பிசினஸ் மேன் விஷ்ணு, அவனுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். ஆக இதை நம் பத்திரிக்கையில் வெளியிட்டால் விற்பனை சூடுபிடிக்கும் என்று எண்ணியவன் இதைப்பற்றி பேசியவர்களிடம் சென்று, விஷ்ணுவுடன் சுற்றும் அந்த பெண் யார் என்று கேட்டான்.
அவர்கள், அதைப்பற்றி உனக்கென்ன, உன்னிடம் அதை சொல்லமுடியாது என்று கூறினார். இவன் விடுவதாக இல்லை, தொந்தரவு செய்துகொண்டே இருந்தான்.
அந்த பெண் யாரென்று சொல்லவில்லை என்றால் நாம் சொன்ன பொய் வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏதாவது ஒரு பெண்ணை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். தெரிந்த பெண் என்றால் அவளுக்கும் பங்கு கொடுக்கவேண்டி வரும், என்ன செய்வது என்று யோசித்தபோது தான் அந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அவர்களுக்கு கிடைத்தது. அவர்களின் கதிப்படி மிகவும் அழகானவள். அவளுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்னும் அளவிற்கு அழகானவள். ஆனால் அவள் யாரென்று அவர்களுக்குத் தெரியாது. அந்த போட்டோவை கையில் எடுத்துவிட்டு சுற்றிலும் பார்த்தார்கள், அங்கு அப்படி யாரும் இருப்பதுபோல இல்லை.
அவள் பெயர் தான் நந்தினி. ஒரு கம்பெனியில் நேர்முகத் தேர்விக்காக சென்னை வந்தாள். சொந்த ஊர் தஞ்சை. ஒரு நல்ல கலாச்சாரமான குடும்பம், வசதி குறைவானாலும் மரியாதையான குடும்பம். குடும்ப சூழ்நிலையின் காரணமாக வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் ஒரு கம்பெனி அவளை நேர்முகத் தேர்விற்காக அழைத்திருந்தது. சென்னையில் யாரையும் தெரியாத காரணத்தால் அந்த பூங்காவில் வந்து பயணக்களைப்பு தீர அமர்ந்திருந்து பின் எழுந்து சென்றாள். அப்போதுதான் விதி விளையாட்டை ஆரம்பித்தது. அப்படி அவள் எழ முயலும்போது கால் தடுமாறி விழப்போனாள். ஆனால் விழாமல் சமாளித்து நின்றாள், தடுமாற்றத்தில் கையில் இருந்தவை கீழேவிழுந்துவிட்டன. அதை எடுத்து அதற்குரிய இடங்களில் வைத்து சரிபார்த்துவிட்டு சென்றுவிட்டாள். அவளுடைய போட்டோ கீழேவிழுந்துவிட்டதை கவனிக்கவில்லை.
இப்படித்தான் நம் கதையின் துஷ்டர்களின் கையில் அந்த போட்டோ கிடைத்தது. அந்த போட்டோவை பத்திரிக்கையாளனிடம் கொடுத்துவிட்டனர். பின்பு நிகழ்ந்ததை சொல்லவேண்டியதில்லை, செய்தி தீயாக பரவியது. இது விஷ்ணுவின் காதில் விழும்முன் அவன் நிலை மோசமாகிவிட்டது. அவனை சென்னையிலிருந்து தூரமாக கொண்டு சென்று விட்டுவிட்டனர். அவர்கள் நிம்மதியாக சொத்துக்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டனர். இதோடு விஷ்ணுவின் கதை முடிந்தது என்று நினைத்து முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆனால் கடவுள் அப்போது தான் விளையாட்டை ஆரம்பித்திருந்தான்.
விஷ்ணுவின் உயிர் தோழன் சரவணன். அவன் வழக்கறிஞனாக இருந்தான், விஷ்ணுவின் சொத்து, வியாபாரம் அனைத்திற்கும் சரவணன் தான் லீகல் அட்வைசர். அவனால் விஷ்ணுவைப் பற்றி வந்த பொய்களை நம்பமுடியவில்லை. தன் நண்பனை காப்பாற்ற எண்ணி அவனுடைய சொந்தங்கள் கூறிய பொய்யை நம்பியது போல காட்டிக்கொண்டான். ஆனால் இரகசியமாக வேவு பார்க்க ஆரம்பித்தான். அப்போது ஒரு நாள் விஷ்ணுவின் வீட்டு வேலைக்காரர் டேவிட் சரவணனைத் தேடி வந்தார்.
வாங்க அண்ணா, என்ன இவ்வளவு தூரம் என்று சரவணன் அவரை அழைத்து உபசரித்தான்.
தம்பி உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லவேண்டும். அந்த வீட்டுல விஷ்ணு தம்பியோட சொந்தங்கள்னு ஒரு சிலர் இருக்கங்களே அவனுங்க பேசிட்டு இருந்ததை நான் எதேட்சையாக கேட்டேன். உலகமே இருண்ட மாதிரி இருந்தது, எனக்கு என்ன செய்வது தெரியவில்லை அதான் உங்களிடம் வந்தேன் என்று கூறி அவர்கள் பேசிய அனைத்தையும் கூறினார்.
சரவணன் அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தான். பணத்திற்காக இந்த மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா. இப்போது விஷ்ணுவை நான் எங்கு சென்று தேடுவேன். அவன் என்ன நிலையில் இருப்பான். யோசிக்க யோசிக்க தலை வெடித்துவிடும்போல இருந்தது சரவணனுக்கு.
ஒரு முடிவுக்கு வந்தவனாக அந்த பெரியவரிடம், ஐயா நீங்கள் அங்கேயே எதுவும் தெரியாதது போல இருங்கள். எது நடந்தாலும் என்னிடம் வந்து சொல்லோங்கள் என்று கூறி அனுப்பி வைத்தான்.
பிறகு, ஒவ்வொரு ஊராகத் தேட ஆரம்பித்தான். இறுதியாக ஒரு ஊரில் உள்ள ஆற்றங்கரையில் அமர்ந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். ஒருவழியாக விஷ்ணுவை சமாளித்து அழைத்து வந்த பரமசிவத்திடம் ஒப்படைப்பதற்குள் சரவணனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
நந்தினியின் போட்டோ பேப்பரில் வந்தது அவளுடைய ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது. சென்னையில் அவளுக்கு வேலை கிடைத்துவிட்டது. அங்கேயே ஒரு விடுதியில் தங்கி பணிபுரிந்துகொண்டிருந்தாள். அப்போதுதான் இப்படி ஒரு விபரீதம் நடந்தது, தன் ஊருக்கு சென்ற அவளை மிகவும் தவறான வார்த்தைகளால் பேசியது உண்மை அறியாத அந்த மக்கள் கூட்டம். இதற்காக தான் சென்னைக்கு சென்றிருக்கிறாள் என்று அனைவரும் முடிவே செய்துவிட்டனர்.
அவளுடைய குடும்பம் அவளை வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். என்ன செய்வது என்று தெரியாமல் திக்கற்றுநின்றாள். பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக விஷ்ணுவின் வீட்டைத் தேடிச்சென்றாள். நல்ல வேலையாக அங்கு டேவிட் மட்டும் இருந்தார். அவருக்கு நந்தினியை பார்த்ததும் அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது.
வெறிபிடித்தவள் போல வந்தவளுக்கு விஷ்ணு அங்கு இல்லாதது மிகவும் ஏமாற்றத்தைதந்தது. டேவிட் அலைபேசியில் விஷயத்தை சரவணனிடம் சொல்ல அவன் நந்தினியை தன் வீடிற்கு அழைத்துவரச் சொன்னான். அங்கு சென்றதும், டேவிட் நீ வந்தால் சந்தேகம் வந்துவிடும், நான் நந்தினியை அழைத்துசெல்கிறேன் என்று சொல்லி நந்தினி இருக்கும் இடத்திற்கு வந்தான். வாருங்கள் விஷ்ணுவிடம் அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னான். அவளும் அவனுடன் சென்றாள்.
யாருடன் செல்கிறோம், எங்கு செல்கிறோம் என்று எதுவும் புரியவில்லை. ஆனால் விஷ்ணுவை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவள் மனதில் இருந்தது. யார் அவன் எதற்காக என் வாழ்க்கையில் இப்படி ஒரு விபரீதத்தை செய்தான். இதனால் அவனுக்கு என்ன லாபம். அவன் யாரென்றுகூட எனக்கு தெரியாதே. இவ்வாறு யோசித்துக்கொண்டே சென்றவள், தான் காரிலிருந்து இறங்கி சரவணனுடன் இவ்வளவு தூரம் நடந்து வந்து ஏதோ ஒரு அறையின் முன் நிற்கும் வரை எதையும் உணரவில்லை. அவள் மனதில் அப்போது வரை விஷ்ணுவை கொன்றுவிடும் அளவிற்கு கோபம் இருந்தது. ஆனால் அந்த கோபம் இவன் தான் விஷ்ணு என்று காட்டும் வரைதான்.
அந்த அறையில் ஒரு சிறு பிள்ளைபோல மருந்து உண்ண அடம்பிடித்து, ரகளை செய்துகொண்டிருந்தவனை கண்டதும் மனம் இளகிவிட்டாள். எதுவும் புரியாமல் சரவணனை பார்த்தாள். அப்போது அங்கு வந்த பரமசிவமும் சரவணனும் சேர்ந்து நடந்ததைக் கூறினார்கள்.
கோபம் இருந்த இடத்தில் இப்போது அனுதாபம் மட்டுமே இருந்தது. ஆனால் அவளுடைய நிலையை நினைக்கையில் எல்லாம் விஸ்வரூபம் எடுத்து நின்றது. அவளுடைய அலுவலகத்தில் இவளை அனைவரும் தவறாக பேசுவதையும், சில ஆண்கள் தவறான எண்ணத்தில் பேசுவதையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேலையை விட்டு நின்றுவிட்டாள். என்ன செய்வது, எங்கு செல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய எண்ணங்கள் புரிந்ததாலோ என்னவோ பரமசிவம் சரவணனிடம், இந்த பெண் விஷ்ணுவை பார்த்துக்கொள்வாளா , அவனுக்கு எப்போதும் ஒரு துணை தேவைப்படுகிறது.
இவளும் வேறு எங்கு செல்வாள். இந்த உலகம் இவளை தவறான பார்வைதானே பார்க்கும். நம்மோடு இருந்துவிட்டால் பாதுகாப்பாகவும் இருப்பாளே என்று யோசனைக் கூறினார். சரவணனுக்கு இது சரியென்றுபட்டது. நந்தினியும் ஒப்புக்கொண்டாள்.
அன்றிலிருந்து அவனை பார்த்துக்கொள்வது ஒன்றே அவள் பணியாக இருந்தது. விஷ்ணுவும் நந்தினியோடு நன்றாக ஒட்டிக்கொண்டான்.
நந்தினியை அருகிலேயே ஒரு விடுதியில் தங்கவைத்தனர். அவள் ஒரு நாள் வர தாமதமானாலும் விஷ்ணு அங்கு அனைவரையும் ஒரு வழிபன்னிவிடுவான். இப்படி சில மாதங்கள் சென்று இப்போது சிகிச்சையின் விளைவாலும், நந்தினியின் கவனிப்பாலும் குணமடைந்துவிட்டான். நந்தியை அவனுக்கு நினைவில்லை. இதைக்கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணு ஏதோ கனவுலகிலிருந்து மீண்டவன் போல தன்னை உலுக்கிக்கொண்டான்.
கடவுளே என்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகிவிட்டதே. அங்கிள், நந்தினி எங்கே நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் இந்த நேரத்திற்கு அவள் வந்திருப்பாளே.
இன்று அவள் மாலை தான் வருவாள். ஒரு எக்ஸாம் எழுத சென்றிருக்கிறாள்.
எக்ஸாமா?
ஆமா, நெட் எக்ஸாம் எழுத தான் சென்றிருக்கிறாள். அதில் தேர்வானால் வேலை சுலபமாகக் கிடைத்துவிடும் என்று பரமசிவம் சொன்னார்.
எதற்கு வேலை? என்று புரியாதவன் போல விஷ்ணு கேட்டான் .
என்ன விஷ்ணு இப்படி கேட்கிறாய். இதோ நீ இப்போது குணமகிவிட்டாய், இனி அவளுக்கு இங்கு என்ன வேலை. அவளின் எதிர்காலத்திற்காக இதை அவள் செய்துதானே ஆகா வேண்டும்.
விஷ்ணு யோசனையாகத் தலையாட்டினான். அங்கிள் நந்தினி எப்படி இருப்பாள். அவளை பார்க்கவேண்டும்போல இருக்கிறது.
பரமசிவம் ஏதோ சொல்லவந்தவர் படபடவென்று எழுந்து சென்றார். விஷ்ணு புரியாமல் அவரையே பார்த்தான். நான் என்ன சொல்லிவிட்டேன் இப்படி ஓடுகிறார்.
சிறிது நேரத்தில் பரமசிவம் வந்தார். அவர் கையில் ஒரு மடிக்கணினி இருந்தது. இதைப்பிடி, இதில் நீ இங்கு வந்ததிலிருந்து இன்றுவரை இந்த அறையில் நடந்த அனைத்தும் பதிவாகியுள்ளது என்று கூறி அதை அவன் முன் வைத்தார். அவன் கேள்வியாக பரமசிவத்தை நோக்கினான்.
என்ன பார்க்கிறாய், இங்கு சின்ன கேமரா செட்பன்னியிருக்கிறேன். உனக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயத்தில் தான் வைத்தேன். அது மட்டுமல்ல உன் மனநிலையில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்றும் தெரிந்துகொள்ளத்தான் இந்த ஏற்பாடு. ஆனால் நந்தினி வரும் வரைதான் இதை நான் கவனித்தேன். அவள் வந்தபிறகு உன்னை கவனிக்கும் பொறுப்பு அவளிடம் சென்றுவிட்டது. அவள் என்னைவிட உன்னை நன்றாக கவனித்துக்கொண்டாள். ஆகையால் இதை நான் பார்ப்பதே இல்லை. உண்மையை சொல்லவேண்டுமென்றால் இங்கு கேமரா வைத்ததே மறந்துவிட்டேன். இனி நீயே பார்த்துக்கொள் என்று அவனிடம் கொடுத்துவிட்டு சென்றார்.
விஷ்ணு நந்தினி வந்த தேதியை கேட்டுத் தெரிந்துகொண்டு அந்த நாளிலிருந்து பரபரப்புடன் பார்க்கத் தொடங்கினான்.........
ஹாய்... விஷ்ணு என்று ஏதோ பழகியவளைப் போல நந்தினி அவன் முன் வந்து நின்றாள். விஷ்ணு அவளை நிமிர்ந்து பார்த்தான், அந்த சிரித்த முகத்தில் என்ன கண்டான் என்று தெரியவில்லை உடனே அவனும் சிரித்தவாறே அவளை நோக்கினான். நந்தினியும் அவனை ஒரு குழந்தையாக பாவித்து அவனோடு பேசி விளையாடி, சாப்பிடவைத்து, மருந்துகளை உண்ணவைத்தாள். ஆர்ப்பாட்டம் பண்ணாமல் அவன் மருந்து சாப்பிட்டது இது தான் முதல் முறை. அனைவரும் ஆச்சர்யமாக நந்தினியையும் விஷ்ணுவையும் பார்த்தார்கள்.
பரமசிவம் கேட்டார் நீ எப்படியம்மா அவனை மருந்து சாப்பிடவைத்தாய். நாங்கள் அவனோடு ஒரு போர் புரிந்தால் மட்டுமே அது முடியும், உன்னால் எப்படி முடிந்தது.
புன்னகைத்துக் கொண்டே, எங்கள் வீட்டு கடைக்குட்டி இப்படித்தான் மருந்து மாத்திரை என்றால் பரந்துவிடுவாள், வீடு இரண்டாகிவிடும். அவளை ஏமாற்றி அவள் கவனத்தை மாற்றி,ஏதாவது செய்துதான் சாப்பிடவைக்க வேண்டும். அந்த பழக்கம் தான் என்று சொன்னவள் முகம் சட்டென்று மாறியது, என் குடும்பம் என்னை நம்பாமல் இப்படி ஒதுக்கிவிட்டதே. ஊரைப்பற்றி கவலையில்லை. அவர்களுக்கு வேறு வேலை என்ன இருக்கிறது, தன் வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கும், ஆனாலும் அடுத்தவர் வீட்டில் உள்ள பிரச்சனைக்கு தீர்ப்பு சொல்ல வந்துவிடுவார்கள். ஆனால் தன்னைப் பற்றி முழுதும் அறிந்திருந்தும் இப்படி நடந்துகொண்ட தன் குடும்பத்தை என்னும்போது தொண்டைகுழி அடைத்துக் கொண்டது.
அவள் முகத்தை பார்த்த பரமசிவம் பேச்சை மாற்ற எண்ணி, இங்கு எதிர் முனையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் பேசிவிட்டேன். நல்ல இடம் தைரியமாக அங்கு தங்கலாம். முன்பணம் அனைத்தும் கட்டியாகிவிட்டது, நீ உன் பொருட்கள் அனைத்தையும் எடுத்து வந்துவிட்டாயல்லவா. வா உன்னை விடுதியில் விட்டு வருகிறேன்.
மறுநாள் காலையிலேயே வந்துவிட்டாள். நந்தினியை பார்த்ததும் தாயைக் கண்ட குழந்தை போல துள்ளிக்குதித்தான். அவனுடன் பேசுவதும் விளையாடுவதும் சிறுகுழந்தைக்குக் கதை சொல்வது போல சின்ன சின்ன கதைகளைக் கூறுவதுமாக பொழுது கழிய ஆரம்பித்தது. இப்படியே சில நாட்கள் சென்றது.
ஒரு நாள் எப்போதும் போல அவனோடு விளையாடி, அவன் உணவு மருந்துகளை முடித்ததும் உறங்கிவிட்டான். அருகில் இருந்த செய்தித்தாளை எடுத்து படித்துக் கொண்டிருந்தவள், அதில் வந்த செய்தியை ஆர்வத்துடன் கண்டாள். நெட் எக்ஸாம் எழுதுவதற்கு தேதி அறிவித்திருந்தார்கள், இதை எழுதினால் இரண்டு வருடத்திற்குள் நல்ல வேலை கிடைத்துவிடும் என்று தோன்றவே அந்தப் பகுதியை வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளலாம் என நினைத்து எழ முயன்றாள். அப்போது தான் கவனித்தாள், விஷ்ணு தன் புடவையின் தலைப்பை கையில் பிடித்தவாறு தூங்கிவிட்டான். அதை எடுக்க முயன்றாள் முடியவில்லை. பலமாக இழுத்தால் அவனிடம் சற்று அசைவு தெரிந்ததே தவிர சேலை தலைப்பு விடுபடவில்லை. இதற்கு மேல் இழுத்தால் அவன் எழுந்துவிடுவான் என்று அமைதியாக அமர்ந்துவிட்டாள்.
செய்தித் தாளை முழுவதும் பார்த்தாகிவிட்டது, இனி என்ன செய்வது. விஷ்ணு விழித்திருக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தை கடத்துவது நந்தினிக்கு மிகவும் சிரமமாக இருந்தது. வேறு வழியின்றி தன் கையில் கன்னத்தை தாங்கியவாறு அங்கு குழந்தை போல் தூங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவை பார்த்தாள். ஆறடியில் ஒரு குழந்தை என்று வாய்விட்டு சொன்னாள். தான் சத்தமாக சொல்லிவிட்டதை உணர்ந்தவள் சுற்றிலும் ஒருமுறை பார்த்தாள் பின் தோள்களை குழுக்குவிட்டு மீண்டும் தன் ஆராய்ச்சியை தொடர்ந்தாள், மூன்று நான்கு நாட்களாக சவரம் செய்யாத முகம், முறையாக வெட்டாத தலைமுடி, சற்று வாடிய முகம். ஆனாலும் அந்த முகத்தில் எதோ ஈர்ப்பு இருக்கிறது என்று தோன்றியது. எவ்வளவு நேரம் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் என்று தெரியவில்லை, சரவணன் அருகில் வந்து அழைத்த பிறகே சுயநினைவை அடைந்தாள.
வந்தவன் சிறிது நேரம் பேசிவிட்டு கொஞ்சம் பணத்தை அவளிடம் நீட்டினான். அவள் எதற்கு என்பது போல பார்த்தாள்.
உங்களுக்கு தேவைப்படும் அல்லவா. ஒவ்வொரு மாதமும் சிறிது பணத்தைக் கொடுத்தால் உங்களுக்கு வசதியாக இருக்குமே.
ஓ! சம்பளமா என்று அவள் கேட்டவிதத்தில் ஏளனமும் கோபமும் கலந்திருந்தது.
ஐயோ, சம்பளமா நீங்கள் பார்க்கும் இந்த வேலைக்கு சம்பளம் நிர்ணயிக்கும் திறன் எனக்கில்லை. ஒரு தாய்க்கு தன் குழந்தையை பார்த்துக்கொள்ள இந்த உலகில் விலை நிர்ணயிக்க முடியும் என்றால் அப்பொழுது உங்களுக்கு சம்பளத்தை நிர்ணயிக்கலாம்.
அவன் பேசிய விதம் அவள் கோபத்தை குறைத்துவிட்டது. இருப்பினும், இந்த பணம் வேண்டாம். எனக்கு எல்லா தேவைகளையும், நீங்கள் இருவரும் செய்தாகிவிட்டது. இனி வேறு என்ன, அப்படியே தேவைபட்டாலும் அதற்கு என்னிடமே பணம் இருக்கிறது என்றாள்.
தயவு செய்து இதை வாங்கிக் கொள்ளுங்கள். என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொண்டால் இந்த பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி தன் கையை நீட்டினான். சிறிது நேரம் யோசித்தவள் பிறகு அரை மனதாக வாங்கிக்கொண்டாள்.அப்பா.. இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது என்று கூறி எழுந்தான். நான் அங்கிளை பார்த்துவிட்டு கிளம்புகிறேன் என்று எழுந்தவனை நந்தினியின் குரல் தடுத்தது.
சரவணன், எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா.
முடியுமா என்ற கேள்வி எதற்கு, என்னவென்று சொல்லுங்கள், என் சிரமேற்க்கொண்டு செய்கிறேன் என தன் தலை தாழ்த்திய அவன் செய்கை அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.
நெட் எக்ஸாம் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும், அதோடு சில புத்தகங்கள் வாங்கவேண்டும் என்றாள்.
அட, ஏன் நல்ல விஷயத்தை தள்ளிப் போடவேண்டும், இன்றே போகலாமே.
இல்லை, நாளைக்கு போகலாம் இன்னும் சிறிது நேரத்தில் விஷ்ணு எழுந்துவிடுவான். அதோடு... என்று விஷ்ணுவின் கையைக் காட்டினாள. அப்போதுதான் சரவணனும் அதை கவனித்தான்.
ஓ... நான் வேண்டுமானால் எடுத்துவிடவா என்று கேட்டான்.
பரவாயில்லை எப்படியும் எழும் நேரம்தான். இடையில் எழுந்தால் நன்றாக இருக்காது என்று கூறியவள், சரவணனை மனதிற்குள் பாராட்டினாள். உதவி தான் என்றாலும் ஒரு பெண்ணின் ஆடையை தொட அவளிடம் அனுமதி கேட்ட அவனது குணம் அவன் மீதுள்ள மதிப்பபைக் கூட்டியது.
ஒரு நிமிடம் இப்போது வருகிறேன் என்று கூறிச் சென்றவன் சில புத்தகங்களுடன் வந்தான். இதை படித்துக்கொண்டிருந்தால் நேரம் போகும். ஒரே முகத்தை எவ்வளவு நேரம் தான் பார்ப்பது, பிறகு என் நண்பனின் முகம் உங்களுக்கு அழுத்துவிட்டால் என்ன செய்வது என்று பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு அவன் சொல்லிய விதத்தில் லேசாக புன்னகைத்தவள் மனதிற்குள் தன்னையே கடிந்து கொண்டாள். அறைக்குள் ஒருவன் வருவதுகூட தெரியாமல் இப்படியா தன்னை மறந்து இருப்பது.
அவளின் சங்கடமான நிலை புரிந்து, சரி நான் நாளை வருகிறேன் என்று விடைபெற்று கதவின் அருகில் சென்றவன் சற்று தயங்கிவிட்டு திரும்பினான்.
நந்தினி என்ன என்பது போல நோக்கினாள்.
நான் ஒன்று சொன்னால் கொபித்துக் கொள்ளமாட்டீர்களே என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான். நீங்கள் சிரித்தல் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு விறுவிறுவென சென்றுவிட்டான்.
முதலில் கோபம் வந்தாலும், தான் வந்த நாளிலிருந்து விஷ்ணுவைத் தவிர வேறு யாரிடமும் சிரித்து பேசவில்லை என்பது அப்போது தான் புரிந்தது. கோபம் மறைந்து இதழ்களில் புன்னகையை தவழவிட்டவளின் பார்வை மீண்டும் விஷ்ணுவின் முகத்தில் வந்து நிலைத்தது. இந்த முகத்தை பார்த்தால் அழுத்துவிடும் முகம்போல தெரியவில்லையே என்று கூறிவிட்டு புத்தகத்தை விரித்து படிக்க ஆரம்பித்தாள்.
மறுநாள் நந்தினி விஷ்ணுவோடு எதோ பேசிக்கொண்டிருக்கையில், ஒரு குழந்தை அந்த அறையை எட்டிப் பார்த்தது. அந்த குழந்தையை நந்தினி அருகில் அழைத்தாள்.
உன் பேர் என்ன.
என் பேரு நித்தியா. உங்க பேர் என்ன.
என் பேர் நந்தினி.
நந்தினி ஆண்ட்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று மழழை மொழியில் கொஞ்சியது அக்குழந்தை.
நீகூடத்தான் ரொம்ப ரொம்ப அழகா இருக்க என்று குழந்தையை முத்தமிட்டாள். அது சரி இங்கு யாரை பார்க்க வந்திருக்கிறாய்.
எங்க பெரியப்பா இங்கதான் இருக்காங்க அவங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இந்த அங்கிள் யாரு அவருக்கு உடம்புக்கு என்ன என்று விஷ்ணுவைப் காண்பித்துக் கேட்டாள் அக்குழந்தை.
அந்த இருவரும் பேசுவதை விநோதமாக பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுவை ஒரு முறை பார்த்துவிட்டு, அங்கிள்க்கு ஜுரம் வந்துடுச்சு ஊசி போட இங்க கூட்டிட்டு வந்திருக்கோம்.
வெளியே குழந்தையின் தாய் அழைக்கும் குரல் கேட்க.
உன் அம்மா தேடுகிறார்கள் போல ஓடு ஓடு என்று குழந்தையை தன் மடியிலிருந்து இறக்கிவிட்டாள். அந்த குழந்தை, பாய் ஆண்ட்டி என்று கூறிவிட்டு தன் கன்னத்தை காட்டியது. நந்தினி புரியாமல் பார்த்தாள்.
ஐயோ ஆண்ட்டி உங்களுக்கு ஒண்ணுமே தெரியல, அம்மா பாய் சொன்னதும் முத்தம் கொடுத்து தான் அனுப்புவாங்க என்று அழகாய் கோபித்துக் கொண்டது.
குழந்தையை அனைத்து முத்தம் கொடுத்தாள், பதிலுக்கு குழந்தையும் முத்தம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டது.
சிறிது நேரத்திற்க்கெல்லாம் சரவணன் வந்துவிட விஷ்ணுவை உறங்க வைத்த பின்பு இருவரும் கிளம்பிச் சென்று, அவன் தூக்கம் களையும் முன் வந்துவிட்டனர். விஷ்ணு எழுந்த பின் வழக்கமாக அவனை சிறிது நேரம் வெளியே அழைத்து சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு வந்து அவனுக்கான உணவு மருந்துகளை எடுத்து வைத்துக் கொண்டே விஷ்ணு கேட்கும் சிறுபிள்ளை தனமான கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் அழகாக பதில் கூறிக்கொண்டிருந்தாள்.
ஒரு நர்ஸ் வந்து, நந்தினி உன்னை டாக்டர் வரச்சொன்னார் என்று சொல்லிவிட்டு சென்றாள். நந்தினி விஷ்ணுவிடம், நான் சென்று டாக்டர் அங்கிளை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லித் திரும்பியவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினான் விஷ்ணு.
என்னமா என்று நந்தினி கேட்க, விஷ்ணு தன் கன்னத்தைக் காட்டினான். என்ன என்று புரியாமல் கேட்டவளிடம். அந்த குழந்தைக்கு மட்டும் கிளம்பும்போது முத்தம் கொடுத்த எனக்கு குடுக்காம போற என்று கூற சிலவினாடித் தினறியவள், ஒரு குழந்தையைப் போலவே அமர்ந்திருந்த விஷ்ணுவைப் பார்த்துவிட்டு தன்னை சமாளித்துக் கொண்டு, அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் மீண்டும் கன்னத்தைக்காட்டி இங்க என்று அடம்பிடிக்கும் குழந்தைபோல கேட்டான். நந்தினி சிரித்துக் கொண்டே, நீ நல்லபிள்ளையா மருந்து சாப்பிட்டு, உனக்கு ஜுரம் சரியாகி வீட்டிற்கு சென்றதும் கன்னத்தில் முத்தம் கொடுப்பேன் சரியா என்று கூற அவனும் வேகமாக தலையை ஆட்டினான்.
அங்கு நடப்பவற்றை, ஏதோ அதிசயத்தை பார்ப்பவன் போல சரவணன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களுக்கு நந்தினி மிகவும் வித்தியாசமான பெண்ணாகத் தெரிந்தாள். விஷ்ணுவை ஒரு குழந்தையாகவே பார்த்துக் கொள்கிறாளே. இவர்கள் இருவருக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருக்கும் என்று நினைக்கிறேன்...
இவற்றை கணினியில் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு ஏதோ வேறு உலகத்தில் இருப்பவன் போலவும், அந்த உலகத்தை விட்டு வெளியே வர விருப்பம் இல்லாதவன் போலவும் அமர்ந்திருந்தான். பரமசிவம் வரவும் நினைவு களைந்தான்.
என்ன விஷ்ணு ஏதோ தீவிர யோசனையில் இருக்கிறாய் போல.
அங்கிள் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா என்று பரபரப்புடன் கெட்டவனை என்ன என்பது போல பார்த்தார் பரமசிவம்.
எனக்கு குணமானது பற்றி நந்தினியிடம் சொல்லவேண்டாம். அவளை என்னோடு பாரஸ்ட் ஹவுஸ்க்கு (காட்டு பங்களா) அழைச்சிட்டு போறமாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க ப்ளீஸ் அங்கிள் ப்ளீஸ் ப்ளீஸ்....
ஓகே ஓகே நான் சொல்றேன். அவள் வரும் நேரமாகிவிட்டது, அதை என்னிடம் கொடு என்று கணினியை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.
நந்தினி வந்த பிறகு விஷ்ணு அமைதியாகவே அமர்ந்திருந்தான். அப்போதுதான் உள்ளே வருபவர் போல பரமசிவம் உள்ளே வந்தார். என்னமா எக்ஸாம் எப்படி எழுதினாய்.
ம், நன்றாக எழுதி இருக்கிறேன். டாக்டர், விஷ்ணுவை யாரவது ஏதாவது சொன்னர்களா. இல்லை ஏதாவது கலாட்டா பண்ணிவிட்டானா என்று நந்தினி கேட்க.
இல்லையே. ஏனம்மா அப்படி கேட்கிறாய் என்று பரமசிவம் கேட்டார்.
இல்லை எப்பவும் என்னை பார்த்தவுடன் குழந்தையை போல ஓடிவந்து என் கையை பிடித்துக் கொண்டு நான் இல்லாத நேரம் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறுபவன் இன்று இப்படி மெளனமாக அமர்ந்திருக்கிறானே அதற்காகத்தான் கேட்டேன்.
ஓ அதுவா, நீ போன நேரத்திலிருந்து இப்படியே தான் அமர்ந்திருக்கிறான். யாரிடமும் பேசவில்லை என்று கூறியவர். நீ ஒரு வேலை செய்வாயா. இங்கிருந்து சிறிது தூரத்தில் இவனுக்கு சொந்தமாக ஒரு காடு இருக்கிறது. அந்த காட்டிற்குள் அழகான ஒரு வீடு இருக்கிறது. விஷ்ணு மன அமைதி தேவைப்பட்டால் அங்குதான் செல்வான் இப்போது அங்கு அவனை அழைத்துச் சென்றால் ஏதாவது மாற்றம் ஏற்படலாம் என்று நினைக்கிறேன்.
ஓகே டாக்டர், அங்கு போவதனால் விஷ்ணுவிற்கு நல்லது என்றால் தாராளமாக செல்லலாம்.
சரிம்மா நான் டிரைவரை வரச் சொல்கிறேன் நீங்கள் கிளம்புங்கள் என்று கூறியவர் விஷ்ணுவிடம் திரும்பி இரகசியமாக ஜாடை காட்டிவிட்டுச் சென்றார்.
காரில் செல்லும் போதும் விஷ்ணு எதுவும் பேசவில்லை. ஆனால் வேடிக்கை பார்த்துக் கொண்டுவந்த நந்தினியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே வந்தான்.காட்டிற்குள் செல்லச் செல்ல வெளி உலகம் மறைந்தே போனது. பார்க்கும் இடமெல்லாம் பச்சை நிறம் மிகவும் ரம்யமாக காட்சியளித்தது. அந்த இடத்தில் வெளி உலகம் கண்களில் இருந்து மட்டுமல்ல நினைவிலிருந்து மறைந்துவிடும் அப்படி ஒரு அழகு.
பறவைகளின் பாடல்கள், மரங்களின் சலசலப்பு எங்கோ தூரத்தில் ஓடும் நீரின் சங்கீதம் என்று ஏதோ கற்பனை உலகிற்குள் செல்வது போல இருந்தது நந்தினிக்கு.
இருவரையும் அங்கு விட்டு விட்டு ட்ரைவர், பிறகு வருவதாக கூறி சென்றுவிட்டார்.
நீண்டநாள் கழித்து வரும் விஷ்ணுவும் சிறிது நேரம் காட்டின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தவன், இவற்றை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியை பார்த்தான். எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத அழகு இயற்க்கைக்கு மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் இன்று இவளின் அழகு அந்த எண்ணம் தவறு என்று கூறுகிறதே. ஒருவேளை இயற்க்கைக்கு ஒரு பெண் இருந்திருந்தால் இவளைப் போலத்தான் இருந்திருப்பாளோ என தன் எண்ணங்களை ஓடவிட்டுக் கொண்டிருந்தவன் நந்தினியின் கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றான். ஒன்றும் புரியாமல் சென்றவள் சிறிது தூரம் சென்றபின் ஒரு அழகான தண்ணீர்த் தடாகம் தெரிய அதன் அழகில் பிரம்மித்து நின்றாள்.
இந்தக் காட்டில் எனக்கு மிகவும் பிடித்த இடம். இங்கு வந்தால் எவ்வளவு பெரிய மனச்சுமையும் குறைந்து விடும் என்று விஷ்ணு கூறினான்.
ஐயோ, எவ்வளவு அழகான இடம், இப்படி ஒரு இடத்திற்கு வந்துவிட்டால் மனக்கவலைக்கு என்ன வேலை. இதை பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமே வேறு என்ன வேண்டும் என்று மெய்மறந்து பேசிக்கொண்டிருந்தாள். விஷ்ணு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் அங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.
திடீரென நினைவுவர, விஷ்ணு வா போகலாம் நேரமாகிவிட்டது என்று சொல்லி திரும்பியவளின் கையைப் பற்றி நிறுத்தினான்.
ஏன் இங்கேயே இருக்கவேண்டுமா என்று நந்தினி கேட்டாள். ஆனால் விஷ்ணு பதிலேதும் கூறாமல் தன் கன்னங்களை அவளுக்கு நேராக காட்டி நின்றான்.
அதைப் பார்த்த நந்தினி புன்னகையோடு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். இது அவர்களுக்கிடையில் அடிக்கடி நிகழும் ஒன்றாகிவிட்டிருந்தது. ஆனால் இன்று அவன் விடுவதாக இல்லை.
மீண்டும் அமைதியாகக் கன்னத்தைக் காட்டி நின்றான். நந்தினி அவனிடம் எதோ வித்யாசம் தெரிவதை அப்போது தான் உணர்ந்தாள். கேள்வியாக அவனை நோக்கினாள்.
நீ தானே எனக்கு ஜுரம் சரியாகி வீட்டிற்கு சென்றதும் கன்னத்தில் முத்தம் கொடுப்பதாய் கூறினாய். இப்போது கொடு என்று கேட்டவனை புரியாமலேயே பார்த்தாள்.
அவன் கண்கள் இவள் கண்களுக்கு ஏதோ செய்தி சொல்ல, துள்ளிக்குதித்து அவனை அனைத்துக் கொண்டாள். மனதில் மகிழ்ச்சி நிறைந்து கண்களின் வழியே பெருக்கெடுத்தது. அவள் எங்கு இருக்கிறாள் என்ன செய்கிறாள் என்று எதுவும் அவளுக்கு மனதில் படவில்லை. இந்த பிறவியின் பயனை அடைந்து விட்டவள் போல சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனாள்.
இவ்வுலக நினைவிற்கு வந்தவள், அவனை விட்டு விலகி நின்றாள். புதிதாக பேசக் கற்றுக் கொண்ட குழந்தைப் போல ஏதேதோ பேசிக்கொண்டே சென்றாள்.
இன்னும் நீ நான் கேட்டதை தரவில்லையே என்று அப்பாவித்தனத்தை முகத்திலும், கள்ளத்தனத்தை கண்களிலும் வைத்துக் கொண்டு கேட்டான் விஷ்ணு.
விளையாடாதே விஷ்ணு வா முதலில் டாக்டர், சரவணன் எல்லோரிடமும் சொல்லவேண்டும் என்று அழைத்தும் அசையாமல் நின்றவனை அப்போதுதான் கவனித்தாள். இவன் விளையாடவில்லை, என்ன ஆயிற்று இவனுக்கு.
விஷ்ணு உனக்கு என்ன நேர்ந்தது. நன்றாகத்தானே இருக்கிறாய்?.
நான் நன்றாகத் தான் இருக்கிறேன், நீ தெளிவான ஒரு பதிலை எனக்கு கூறுவாயா?.
என்ன பதில்?.
வாழ்நாள் முழுவதும் என்னோடு இருப்பாயா. உன் முதல் குழந்தையாக என்னைத் தத்தெடுத்துக் கொள்வாயா?.
நீ என்ன சொல்கிறாய், எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அவன் அவள் கையைப் பற்றிக்கொண்டு, ஒவ்வொரு பெண்ணுக்கும் அவனுடைய கணவன் தான் முதல் குழந்தை, ஒவ்வொரு ஆணுக்கும் அவனுடைய மனைவிதான் இரண்டாவது தாய். உன்னை இரண்டாவது தாயாக என் மனம் ஏற்றுக்கொண்டுவிட்டது. அதே போல என்னை உன் மனம் முதல் குழந்தையாக ஏற்றுக்கொள்ளுமா?.
காதலை எத்தனையோ விதமாகக் கூறி கேள்விபட்டிருக்கிறாள். ஏன் இவளிடமே சிலர் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு அழகாக யாருமே கூறியது இல்லை. அவன் சொல்லிய விதமும், விசயமும் மனதிற்கு பிடித்தாலும் மூளை மனதிற்கு எதிர்புரம் நின்று விவாதம் செய்தது.
இல்லை விஷ்ணு நீ நினைப்பது போல நான் உன்னுடன் பழகவில்லை. உன்னை பார்த்துக் கொள்வதை எனக்கு கிடைத்த வேலையாக எண்ணித்தான் செய்தேனேத் தவிர வேறு எண்ணம் எதுவும் இல்லை.
நீ ஆரம்பத்தில் அப்படி நினைத்து என்னுடன் பழகி இருக்கலாம். ஆனால் பிறகு நீ என்னை உன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நினைத்து வாழ ஆரம்பித்துவிட்டாய்.
என்னை பற்றி உனக்கென்னத் தெரியும். நான் உன்னோடு எப்படி பழகினேன் என்று உன்னால் எப்படி சொல்லமுடியும்.
நீ என்னைப் பார்த்துக் கொண்ட விதத்தைப் பார்த்தால் முட்டாளுக்கு கூட அது புரியும், எனக்கு புரியாத என்ன.
அது எப்படி நா.... பேச ஆரம்பித்தவள் ஏதோ மனதில் தோன்ற பேச்சை நிறுத்தினாள். ஜுரம் சரியாகி வீட்டிற்கு சென்றதும் முத்தம் கொடுப்பேன் என்று கூறியது உனக்கெப்படி தெரிந்தது.
புன்னகையினூடே, அங்கிள் நாம் இருந்த அறையில் கேமரா வைத்திருந்தார். எனக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என்ற பயத்தில் வைத்திருந்தாராம். அது எனக்கு பயன்பட்டுவிட்டது.
இதோ பார் விஷ்ணு அப்பொழுது ஒரு குழந்தையாக நீ நடந்துகொண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது அவ்வளவு தான். இதற்கு நீயாக ஏதேதோ கற்பனை செய்துகொள்ளாதே.
நான் கற்பனை செய்துகொள்ள அவசியம் இல்லை. என்னுடைய அம்மா என்னோடு இருந்த காலம் கொஞ்சம் தான் ஆனால் அந்த நினைவுகளை எந்த சூழலிலும் என்னால் மறக்க முடியாது. அம்மாவின் பிரிவிற்கு பின் நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும், அம்மா இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பார்கள் அப்படி சொல்லியிருப்பார்கள் என்று கற்பனையில் அவர்களோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், என் கற்பனைகளுக்கு உயிர் கொடுத்தது போல நீ வந்திருக்கிறாய்.
பல வருடங்களுக்குப் பிறகு எனக்கு மீண்டும் ஒரு சொந்தம் கிடைத்துவிட்டது என்ற சந்தோசத்தில் இருக்கிறேன். என்னை மீண்டும் அநாதையாக்கிவிடதே.
நந்தினி மொத்தமாக பேசும் திறனை இழந்துவிட்டிருந்தாள். இருந்தாலும் தொண்டையை சரிசெய்து கொண்டு, இல்லை விஷ்ணு உன் வாழ்க்கை முறை வேறு என் வாழ்க்கை முறை வேறு. நீ மிகவும் வசதியானவன், நான் ஏழைக் குடும்பத்துப் பெண். உனக்கும் எனக்கும் ஒத்துவராது. உன் வசதிக்கும் , தகுதிக்கும் ஏற்றார்போல ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள் என்று ஒரு வழியாகக் கூறி முடித்துவிட்டாள். உண்மைக்காரணமும் அதுதான்.
ம்..... நீ சொல்லும் கதையை நம்ப நான் பழைய விஷ்ணு இல்லை. பணம் ஒரு மனிதனின் தகுதியை எவ்வாறு நிர்ணயிக்கும். அப்படி நிர்ணயிக்க முடியும் என்றால் உன் குணத்திற்கும், தகுதிக்கும் ஈடாக இந்த உலகத்தில் உள்ள அத்தனை பணத்தையும் கொண்டுவந்தாலும் உனக்கு முன்னால் அது சிறு துரும்பு தான்..... ஐயோ என்னை சினிமா வசனமெல்லாம் பேசவைக்காதே என்று கூறியவன் அவளை அருகில் இழுத்து அவள் முகத்தை தன் கைகளால் நிமிர்த்தி, என் கண்களைப் பார்த்து சொல் உனக்கு என்னை பிடிக்கவில்லை, என் மீது காதல் இல்லை என்று கேட்டு அவள் கண்களைக் கூர்ந்து நோக்கினான்.
அந்தப் பார்வை கண்களின் வழியே இதயம் சென்று நோக்கியது. அந்த கண்களைப் பார்த்து பொய் சொல்லும் திறமையற்றவளாய் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
மீண்டும் அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் மனதை முகம் தெளிவாகக் காட்டியது. அதைப் புரிந்துகொண்டவன் கண்களில் குறும்பு மின்ன லேசாக புன்னகைத்தான். அதன் அர்த்தம் புரியவே முகம் சிவக்க அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள். அங்கிருந்த பறவைக் கூட்டங்கள், ஒரு புது காதல் ஜோடி தங்கள் கூட்டத்தில் சேர்ந்துவிட்டது என்ற எண்ணத்திலோ என்னவோ மகிழ்ச்சியில் சிறகடித்து ஆர்ப்பரித்துக் கொண்டன.
மறுநாள், பரமசிவம் விஷ்ணு சரவணன் நந்தினி நால்வரும் நேராக தஞ்சைக்கு புறப்பட்டனர். இது விஷ்ணுவின் முடிவுதான்.
நந்தினியின் பெயருக்கு எந்த கலங்கமும் வர நான் அனுமதிக்கமாட்டேன். அவள் குடும்பத்தைப் பார்த்து உண்மையை சொல்லவேண்டும். பிறகு எங்கள் திருமணம். எந்த செய்தித்தாளில் எங்களைப் பற்றி தவறான செய்தி வந்ததோ அதே செய்தித்தாளில் எங்களது திருமண செய்தி வரவேண்டும் என்று விஷ்ணு கூறி முடிக்க சரவணன் அவனை அனைத்துக் கொண்டு, இந்த விஷ்ணுவை கடைசி வரை பார்க்காமல் போய்விடுவேனோ என்று பயந்துவிட்டேன். நீ பழைய நிலைக்கு வந்தது மிகவும் சந்தோசமாக உள்ளது என்று ஆனந்த கண்ணீர் விட்டான்.
விஷ்ணு கூறினான், உன்னைப்போல ஒரு நண்பன் கிடைக்க நான் போன ஜென்மத்தில் ஏதோ பெரிய புண்ணியம் செய்திருக்கிறேன். நீ மட்டும் இல்லையென்றால் என் நிலை என்னவாயிருக்கும். நட்பு எப்போதுமே தலைசிறந்ததுதான் என் நட்பிற்காக நீயும், என் தந்தையின் நட்பிற்காக அங்கிளும் எவ்வளவு செய்திருக்கிறீர்கள். இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்.
அதெல்லாம் சரி உன் வீட்டில் இருப்பவர்களை என்னசெய்யப் போகிறாய் என்று பரமசிவம் கேட்டார்.
நியாயமாகப் பார்த்தால் அவர்களை தண்டிக்க வேண்டும். ஆனால் அவர்கள் இல்லையென்றால் என் வாழ்க்கையில் நந்தினி வந்திருக்க மாட்டாளே. அதனால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பாங்கில் டெப்பாசிட் செய்து அதன் மூலம் மாதம் மாதம் அவர்கள் கைக்கு சிறிது பணம் செல்வது போல ஏற்பாடு செய்து எங்காவது தூரமாக அனுப்பிவிடலாம் என்று முடித்தான்.
தஞ்சையில், நந்தினியின் வீட்டின் முன்பாகச் சென்று நின்றார்கள். அவர்களைப் பார்த்து முதலில் முகம் சுளித்தவர்கள், உண்மை தெரிந்த பின் தன் மகளை ஏற்றுக்கொண்டனர். இருவரின் திருமணத்தையும் நிச்சயித்து விட்டு கிளம்பியவனை கண்களில் கண்ணீரோடும், இதழ்களில் புன்னகையோடும் வழியனிப்பி வைத்தாள்.
திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது. அனைத்து பத்திரிக்கையிலும் இவர்களின் திருமண செய்திதான் முக்கிய செய்தியாக இடம் பெற்றிருந்தது.
மறுநாள், ப்ளீஸ் செல்லம் நான் ஆபீஸ் போய் ஒரு சில வேலைகளை முடித்துவிட்டு, பொறுப்புக்களை மேனேஜரிடம் ஒப்படைத்துவிட்டு உடனே வந்துவிடுகிறேன் என்று கெஞ்சும் குரலில் கொஞ்சிக் கொண்டிருந்தான் விஷ்ணு.
ஓகே சீக்கிரம் வரவேண்டும் என்று அனுமதி கொடுத்தாள் நந்தினி.
ம்..... சரி சரி கொடுக்க வேண்டியதை கொடுத்தால் நான் கிளம்புவேன் என்று தன் இதழ்களைக் காட்ட அவன் நெற்றியில் முத்தமிட்டு கலகலவென சிரித்த தன் மனைவியை முகத்தில் கோபத்தோடும், கண்களில் காதலோடும் பார்த்தான் அந்த அன்புக் கணவன்.