ஒரு நாளில் என்ன இருக்கிறது
 
 
            	    
                ஒரு  நாளில் என்ன இருக்கிறது ?
ஒரு நாளில்....
விடுமுறை முடிந்து 
விடுதி  திரும்புகையில் 
இட்லி பொடி, பருப்பு பொடியோடு 
கொஞ்சம் அரிசியையும் சேர்த்து 
மூட்டைக்கட்டிகொண்டு வந்து 
தினமும் விடியும்முன்  
அலாரம் வைத்து எழுந்து 
பாதி தூக்கத்தோடு மாடிக்கு போய்
எடுத்து வந்த அரிசியை 
அணிலுக்கும் காக்கைக்கும் 
பங்கு வைக்கும் ஒரு தோழி இருக்கிறாள் 
ஒரு நாளில்......
திடீரென நடு ரோட்டில் 
வேலை நிறுத்தம் செய்யும் 
இரு சக்கர வாகனத்தை 
சரி செய்யும் முயற்சியில் 
எஞ்சின் முன்பா பின்பா என 
தடவிக்கொண்டிருக்கையில் 
எங்கிருந்தோ தோன்றி 
கேளாமலே உதவி விட்டு 
நன்றியை கூட வாங்காமல் மறையும் 
முகாந்திரமற்ற ஒரு அழகன் இருக்கிறான் 
ஒரு நாளில்......
முதன்முறை நிகழும் சந்திப்பில்
சிலபல புத்தகங்களை வாரி வந்து 
என் கைகளில் திணித்துவிட்டு 
கடிகாரமற்ற அளவலாவளுக்குப் பிறகு
விரசங்களற்ற நட்பிற்கான 
விதையை ஊன்றிவிட்டு போகும்  
கனா காணும் கவி ஒருவன் இருக்கிறான்  
ஒரு நாளில்.....
மன்னிக்க முடியாத வஞ்சகங்களையும் 
இதயத்தை பதம் பார்த்த வார்த்தைகளையும்
வெறித்து  பார்த்த சில வினாடிகளிலேயே
செரித்து விடச் செய்யும் 
ஞான மொழி பேசும் 
நிலவில்லாத வானம் இருக்கிறது  
  
ஒரு நாளில்.....
மணிக்கு பத்து கவிதை 
எழுத முடியாவிட்டாலும் 
மனதில் தேக்கி வைத்ததை 
வார்த்தைகளில் நிறுத்தி வைத்து 
ரசித்து பார்க்க கிடைத்த அரிதான 
அழகான நேரம் இருக்கிறது 
ஒரு நாளில்...... 
இன்னும் சொல்லப்படாத 
எத்தனையோ "இருக்கிறது" இருக்கிறது
அத்தனையையும் நாம் பார்க்கும் 
விதத்தில்தான் எல்லாமே இருக்கிறது 
-டயானா
 
                     
	    
                
