கருவறைத் தொழிலாளி - தொழிலாளர் தினப் போட்டிக் கவிதை

குடி போதையில் அப்பன்
குழந்தை பொறுக்கி விற்கின்றான்
காலி மதுக்குடுவைகளை

பிஞ்சுக் கையில் கந்தக நெடி
தினம் கழுவித் துடைக்கின்றது
தாயின் கண்ணீர்

படித்த பள்ளியின் சுற்றுச்சுவரை
தொட்டுத் தடவி வெள்ளையடிக்கின்றான்
பள்ளி செல்லா சிறுவன்

காலில் தைத்த முள் காயத்துடன்
காலணி தைத்துக் கொடுக்கின்றான்
கால் வயிறு நிரம்பிட

செப்பு வைத்து விளையாடும் வயதில்
பத்துப் பாத்திரம் கழுவுகின்றாள்
பத்து வயது சிறுமி

அடுக்கு மாடி கட்டிடும் செங்கல்
அடுக்கடுக்காய் சுமக்கின்றாள்
ஓலை வீட்டுச் சிறுமி

பூச்சூடி புத்தாடை அணிந்திடாது
பூமாலை கட்டி விற்கின்றாள்
பூவைப் பெண்ணொருத்தி

மண்ணிலே பூத்தபின்
சில செல்லப் பூக்கள்
தளிரிலே தொழிலாளியாகிட...

பிச்சைக்காரி வயிற்றுப் பிள்ளையோ
கருவறையிலேயே வளர்கின்றது
குழந்தைத் தொழிலாளியாய்...!!!

~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (25-Apr-16, 12:33 pm)
பார்வை : 2119

மேலே