குழந்தை தொழிலாளி

தன் வாழ்வை போலவே கசங்கிய வெள்ளை காகிதத்தில் எழதத்தொடங்கினான், பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் அந்த சிறுவன்.......

பசித்த வயிற்றோடு இருக்கையில் ரொட்டித்துண்டுகளை எடுத்து தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் புன்னகையோடு எடுத்துத்தருகிறேன்
உடைந்து நொறுங்கிய தூள்களை பிறகு சாப்பிட்டுக்கொள்வேன்

செம்பட்டை நிறத்தில் சிக்குத்தலையுடன் நிற்கும் என்னிடம் தேங்காய் எண்ணையை எடுத்து தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் புன்னகையோடு எடுத்துத்தருகிறேன் சிந்தியிருக்கும் மீதியை எடுத்து பிறகு தடவிக்கொள்வேன்

சுமை இறக்கிவைக்கையில் பட்ட காயத்தோடு இருக்கிறேன் புண்ணிற்கு ஒட்டும் ஒரு மருந்துப்பட்டையை எடுத்து தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் புன்னகையோடு எடுத்துத்தருகிறேன் என் காயத்திற்க்கு நான் எனது எச்சிலை வைத்துக்கொள்வேன்

விளையாடும் ஆசையிருந்தும் நேரமில்லாமல் ஏங்கி தவிக்கும் என்னிடம் பந்தை எடுத்து தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் புன்னகையோடு எடுத்துத்தரும் இடைவெளியில் இரண்டு முறை பந்தை தட்டிப்பார்த்து விளையாடிவிடுவேன்

புத்தகங்கள் சுமந்து பள்ளி சென்று பயிலமுடியா நிராசையில் வாழும் என்னிடம் தன் பிள்ளைக்கு பாடப்புத்தகம் ஒன்றை எடுத்து தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் முதன்முறையாக கண்ணீர் மறைத்து எடுத்து தருகிறேன்
விலைமதிப்பற்ற என் கல்வியை, கனவுகளை, வாழ்வை யாராவது வாங்கித்தருவீர்களா...???

எழுதியவர் : Jaisee (25-Apr-16, 1:01 pm)
பார்வை : 103

மேலே