பிம்பம்

என்னென்னெமோ
கொண்டு வந்து மேசை
நிறைக்கிறாங்க...
இதெல்லாம் எதுக்கு..
என்று பிரம்மிப்பும்
கொஞ்சம் பயங்கலந்த
பார்வையுமாய்
குளுகுளு உணவுவிடுதியின்
குடும்ப அறை மேசை முன்
மேனி குறுகி அமர்ந்திருந்த
அப்பாவும் அம்மாவும்
தங்கையும் என்னை
ஏறிட்டுப் பார்க்க..
கரண்டி எல்லாம் கீழவச்சு
கையாலேயே சாப்பிடுங்க
என்று பூரிப்பாய் சொல்லி
ஐஸ்க்ரீம் சகிதம் உண்டு முடித்து
வெயிட்டருக்கு நூறு ரூபாய்
தாளை டிப்சாய் வைத்து
நகருமுன் மெதுவாய்
திரும்பி பார்த்தேன்..
புன்முறுவல் பூக்கும்
அவர் முகத்தில்
எனது முகம் தெரிந்தது..

ஒரு மாத விடுமுறைக்குப் பின்
நாளை மீண்டும் செல்ல வேண்டும்
அந்த வளைகுடா நாட்டின்
பெரிய நட்சத்திர ஓட்டலின்
வெயிட்டர் சீருடையில் நான்...

எழுதியவர் : ஜி ராஜன் (29-Apr-16, 8:39 pm)
Tanglish : pimbam
பார்வை : 83

மேலே