உழைப்பே உயர்வு - சந்தக்கவி
பல்லவி
ஆ: அன்பே ஆனவன் தொழிலாளி
அழகும் ஆனவன் தொழிலாளி
பாசம் பண்பின் உறைவிடமாய்
தாயும் ஆனவன் தொழிலாளி
உழைப்பால் உயர்பவன் தொழிலாளி
உலகை ஆள்பவன் தொழிலாளி
அயராது உழைக்கும் நம்பிக்கையால்
இவனே நல்ல முதலாளி
குழு : பட்டினி கிடப்பான் பங்காளி
ஏய்க்க நினைத்தால் எதிராளி
காரல் மார்க்சின் இலக்கணமாய்
கண்ணியம் உரைப்பான் பாட்டாளி
ஆ: வீடு நலம் பெற
நாடு வளம் பெற
நாளும் உழைக்கும்
நல்லன படைக்கும்
நல்லதோர் சாமி தொழிலாளி
நல்லதோர் சாமியே தொழிலாளி
சரணம் 1
உழைத்துப் பிழைக்கும் உரிமைக்குரலே
அரற்றிப் பிழைக்கும் கூட்டம் வென்றிடு
ஆயிரம் கதைகள் அனுதினம் சொல்லி
அன்பாய் பிதற்றுவர் மறுகணம் தள்ளிடு
புரட்சி என்றால் ஒன்றுமில்லை
உந்தன்உழைப்பே புரட்சி
மலர்ச்சி என்றால் ஒன்றுமில்லை
உந்தன் சிரிப்பே மலர்ச்சி
குழு : இதுவரை வாழ்ந்தது அடிமை ஆகலாம்
இதனை உடைத்திடு விடுதலை காணலாம்
இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழலாம்
இருப்பினும் உழைப்பாய் முதலாளி ஆகலாம்
ஆ: வலியின்றி வாழ்வில்லை
உழைப்பின்றி உயர்வில்லை
இதுதான் வேதம் தோழா
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
இதைவிட பொருளேது தோழா
அட,நீயும் நானும் சொந்தம் - இது
ஈரேழு உலக பந்தம்
சரணம்
ஆ : இருபத்து நான்கு மணி நேரத்தில்
எட்டு மணி நேரம் உழைப்பு - மீதி
இருக்கும் பதினாறு மணி நேரத்தில்
இன்னும் ஏனப்பா அடிமைப்பிழைப்பு
வளர்ச்சி என்றால் ஒன்றுமில்லை
ஏன் என்பதே வளர்ச்சி
நான் என்பவர் ஆட்டம் ஒடுங்க
தீ ஏந்துவோம் மகிழ்ச்சி
குழு : வியர்வையும் உதிரமும் சரித்திரம்தானய்யா
அகிலமே உரைக்குது அப்படிப்போடுய்யா
பசிக்கிற நேரமும் உழைக்கிறோம் பாருய்யா
அதனால் என்றைக்கும் கடவுள் நாமய்யா
உண்மையாய் வாழ்கிறோம்
ஒற்றுமை ஆகிறோம்
வெற்றியின் பாதையில் தோழா
அண்ணனின் தம்பியாய்
தம்பிக்கு அண்ணனாய்
உயிருக்கு உயிர் நீ தோழா
அட,நீயும் நானும் சொந்தம் - இது
ஈரேழு உலக பந்தம்