மெல்லத் தமிழினி சாகும்

ஆனந்தக் களிப்பு

மெல்லத்த மிழினி சாகும் - என
...மேலவன் பாரதி கூறின னென்று
புல்லரு ரைத்தவை கேட்டு - நிதம்
...புண்கண்ட காதுகள் யென்னிட முண்டு !

மொத்ததை யும்படிக் காது - வெறும்
...முதல்வரி மட்டும்ப டித்தவ ரெல்லாம்
மெத்தப்ப டித்தவ ராமோ ? - அட
...மேதியைக் கண்டானை யென்றிட லாமோ ?

இப்படி உள்ளவ ரெல்லாம் - கவி
...இனிப்பி லுப்பையும் தேடிடும் மூடர்
அப்படிப் பட்டவர் பாட்டை - அதன்
...அர்த்தம்வி ளங்கப்ப டிக்கவும் மாட்டார் !

ஆதிசி வன்பெற்று விட்டான் - என
...அன்னவன் சொன்னதை மட்டும்ப டித்து
சோதிசெவ் வேலவன் தம்மை - அவன்
...சொல்லுகின் றானெனச் சொல்லிடு வாரோ ?

ஊன்றிப்ப டித்திடல் வேணும் - பொருள்
...உற்றுத்தான் நோக்கியேக் கற்றிடல் வேணும்
தோன்றிய செய்தியை மட்டும் - படித்
...தோங்கிய மேலவர் யாங்கனு மில்லை !

ஆதலி னால்தமிழ் மக்காள் - தமிழ்
...அழிந்திடு மென்றவன் சொல்லிய சொல்லும்
பாதியில் வந்தது காண்க - முழுப்
...பத்தியை வாசித்து ஞானத்தைப் பூண்க !

-விவேக்பாரதி !

எழுதியவர் : விவேக்பாரதி (5-May-16, 2:44 pm)
பார்வை : 229

மேலே