காலம் பொன் போன்றது --முஹம்மத் ஸர்பான்

ஜீவன்களின் பிறப்பையும் இறப்பையும் நிர்ணயிக்கும் எண்களின் கணிதம் காலமாகும்.காலம் என்பது எப்போதும் முன்னோக்கிய நகரக்கூடியது.மனிதர்களாகிய நாம் ஓடவேண்டிய நேரத்தில் நடந்தாலும் நடக்க வேண்டிய நேரத்தில் தவழ்ந்து கொண்ட சென்றாலும் காலம் என்பது தன் வேகத்தை குறைப்பதில்லை. தண்டின் மேல் பூத்த பூக்கள் உதிர்ந்த பின் அவ்விடத்தில் மீண்டும் மீண்டும் புதுப்பூக்கள் பூப்பதுண்டு. ஆனாலும் பூத்த பூக்கள் கூட முன்னர் உதிர்ந்த பூவின் தன்மைக்கு இணையாக முடியாது.அதை போல் தான் காலத்தை தவற விட்ட பின் நாமும் எமது வெற்றியை தோல்வியின் சந்தியில் விலை கூவாமல் விற்றுக் கொண்டிருக்கிறோம்.
பயணத்தின் இருப்பில் ஜன்னல்களின் வழியே எம் கண்கள் பார்த்தும் பார்க்காமலும் ரசித்தும் ரசிக்காமலும் எம்மை கடந்து செல்லும் காட்சிகள் ஏராளம்.அதை போல் கடவுள் எழுதிய காலத்தின் விதியில் ஆயுள் சொற்பம்.ஆனாலும் உலகின் ஆயுளை எண்ணிக்கையில் வரையறுக்க முடியாது.எம்மை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் புதுமைதான்.அதில் படிக்க வேண்டிய எண்ணங்களும் மின்னல்கள் போல் சுடர் ஏற்ற வேண்டிய வண்ணங்களும் சரிபாதி.இன்று காண வேண்டிய கனவை நாளை கண்டால் கூட காலத்தின் நீதிமன்றத்தில் நினைவுகளில் தம்மைத்தானே
தற்கொலை செய்திட வாய்தாக்கல் வாங்குகிறோம்.
தவழ்ந்து இலக்கை அடைய நினைப்பவனும் நூறு தடவைகள் முயன்றாலும் தோற்றுவிடலாம்.ஆனால்
லட்சம் தடவைகள் அவன் முடியுமென்ற நம்பிக்கையோடு முயன்றால் குதிரையின் வேகத்தையும் பிந்தச் செய்து இவன் முந்தக் கூடும்.நாள் முழுவதும் உறங்கிக் கொண்டிருப்பதும் குற்றம்.ஆனால் உறங்காமல் இருக்கச் சொல்லி காலத்தின் வேதத்தில் சொல்லப்படவுமில்லை.நீ தர்மமெனும் நன்மை
செய்வதும் ஒரு நொடியில் தான்,நீ தீமைஎனும் பாவம் செய்வதும் அதே ஒரு நொடியில் தான்,காலத்தை
எவனாலும் தடுத்து நிறுத்தி வைக்க இயலாது.ஏனென்றால் கடிகாரம் வேகமாய் நொடிகளை நகர்த்துகிறது என்பதற்காய் கடிகாரத்தை நிறுத்தி வைத்தால் கூட வானில் இரவு பகல் வராமல் விடுவதில்லை.
வேகமாக சலசலவென பொழியும் மழைத்துளிகளும் தரையில் விழுந்து பள்ளங்கள் மேட்டினை நிரப்பி
சிறு வெள்ளமென ஆற்றினை கடந்து நதியிடம் ஓடி கடலிடம் குதித்து சமுத்திரமென தொடர்ந்து பரவிக்
கொண்ட செல்லும்.கடலில் விழுந்த நதிகள் கூட வெள்ளம் வற்றிப் போய்விட்டது என்பதற்காய் மீண்டும்
குன்றின் மேல் ஏறி ஆற்றினை நிரப்பி ஊருக்குள் நுழைவதில்லை,அதை போல் தான் காலமும் முன்னோக்கிய ஓடக் கூடியது.நீ என்றும் ஓடும் காலத்திடம் உறங்கிக் கொண்ட இருந்தால் அது உன்னை
கொன்றுவிடும்.நீ நடக்கும் காலத்திடம் தெளிந்த நீரோடை போல் ஓடிக் கொண்ட இருந்தால் காலமும்
உன்னோடு பிணைந்தே பயணிக்கும்.ஆயிரம் கோடிகள் கொடுத்து காலத்தை விலைக்குவாங்கமுடியாது.
ஆனாலும் காலத்தின் நிலைத்திருப்பில் உயிரின் சுவாசம் தொடருமெனின் பல்லாயிரம் கோடிகள் உன்னிடம் குவியலாம்.காலத்தை வீண்விரயம் செய்பவன் வாழ்வையே தொலைக்கிறான்.காலம் பொன் போன்றது.