மண்வாசனை

சிந்திய ரத்தம் சிதறிய தலைகள்
சேர்ந்தது எங்கள் மண்வாசனை
குந்திய பங்கர் குழிகளில் புதைந்தோர்
கொண்டது எங்கள் மண்வாசனை
தகப்பனை இழந்து தாயையும் இழந்து
தவிக்குது எங்கள் மண்வாசனை
சுகங்களை தொலைத்து சுதந்திரம் இழந்து
சிதைந்தது எங்கள் மண்வாசனை
விதவைகள் சிந்தும் கண்ணீர்த் துளியில்
விசும்புது எங்கள் மண்வாசனை
பதவியில் இருப்போர் கண்களை மூட
பதைக்குது எங்கள் மண்வாசனை
சுதந்திர சிறையில் கைதியை போலே
சுழலுது எங்கள் மண்வாசனை
நிதமொரு துன்பம் நிகழ்ந்திட தவித்து
நிற்குது எங்கள் மண்வாசனை
பாலியல் கொலைக்கு பச்சிளம் குழந்தை
பலியிடும் எங்கள் மண்வாசனை
வேலியின் பாம்பை வேட்டியில் வைத்த
விதிதான் எங்கள் மண்வாசனை
விளைநிலம் எல்லாம் காடுக ளாக
விளைந்ததில் எங்கள் மண்வாசனை
உளமதில் துன்பம் உயிர்பெற வைத்து
உலவுது எங்கள் மண்வாசனை
தகுதிகள் இருந்தும் வாய்ப்புகள் இன்றித்
தனித்திட எங்கள் மண்வாசனை
விகிதா சாரம் குறைத்தெம் முயர்வை
வேருடன் பிடுங்கும் மண்வாசனை
சகலமும் இழந்து உடுதுணி யோடு
சாலையில் உறங்கும் மண்வாசனை
அகதிகள் என்னும் முத்திரைக் குத்தி
அயல்தே சத்தெம் மண்வாசனை
*மெய்யன் நடராஜ்