அன்பின் உயிர்ப்போடிய சொல் -சுஜய் ரகு
மேய்ச்சல் பாதையில்
தாயாடு தன்
மடிமுட்டும் குட்டிகளோடு
ஊர்வலம் போகும்போதும்
வாசல் வந்த சிட்டுக்கள்
இரை கொண்ட அலகோடு
குஞ்சுகள் தேடிக்
கூட்டுக்கு விரையும்போதும்
அணில் குஞ்சு நீர் பருக
தாயணில் காவலுக்குத்
திக்களந்து உணர்வூடாய்த்
தவிக்கும்போதும்
பருந்தைக் கண்ட கோழி
குஞ்சிகளைக் கூவியழைத்து
சிறகுகளில் பதுக்கிக்கொண்டு
பதறும் போதும்
கிளை நழுவி விழுந்த குஞ்சை
காகங்கள்
பத்திரமாய்க் கவ்வியள்ளி
கூடு சேர்க்கும்போதும்
ஈன்ற வலியின் பொருட்டின்றி
பசு நாவால் நக்கிக்
கன்றினை
உலர் நிலைக்கு மீட்கும் போதும்
குட்டியை அடி வயிற்றில்
சுமந்துகொண்டே
கிளைக்குக் கிளை தாவி
குரங்குகள் அளாவும் போதும்
அம்மா எனும் அன்பின்
உயிர்ப்போடிய ஓர் சொல்
நெஞ்சில்-
பசுமை போர்த்துகிறது
கண்கள் -
பனிப்பூத்து விடுகிறது !!
-சுஜய் ரகு -