குழந்தைத் தொழிலாளர்

குழந்தைத் தொழிலாளர்

நம்பிடும் கண்களும் நலந்தரும் சிரிப்பும்
மெல்லிய கரங்களும் பல்லாயிரக் கனவும்
சொல்லாமற் பிறக்கும் பாச உணர்வும்
எல்லாம் கொண்டதே குழந்தையின் அடையாளம்

கண்ணீர் கட்டிய கண்கள் சுருங்கிக்
குப்பையைக் குச்சியால் கிளரிடக் கண்டும்
பட்டாசு சுற்றியும், பாலினை விற்றும்
செங்கல் சூளையில் அடுக்கிடும் வாண்டும்

பாத்திரம் கழுவி காத்திரம் இழந்து
நேத்திரம் வழியும் நீரினைத் துடைத்து
கந்தலை ஆடையாய் கபடின்றி அணிந்து
வெந்து நொந்திடும் வெகுளி வயதினர்.

பாலியல் தொல்லையில் பாசக் கிள்ளலில்
காலில் செருப்பு இல்லாத துள்ளலில்
கோடையில் குளிர் நீர் பனிக் கூழ் இன்றி
தாடையில் குத்தால் தகர்ந்திடும் கனவால்

இளமையும் பிராயமும் இல்லை என்றாகி
களப்பணி சுமையதில் சோர்ந்து அழுந்தி
பொறுப்பெனும் சிலுவையை இறக்காமற் சுமக்கும்
இறைவரோ இவர் இளங் குருத்துக்கள்.

படித்திட எத்தனை பாடம் இருக்கு
முடித்திட எத்தனை சாதனை இருக்கு
அத்தனை நலமும் இல்லை என்றாகி
மொத்தமாய் ஏழையாய் இருப்பது எவரால்?

தீயது ஒன்றைச் செய்த போதினில்
நிழலாய் அதன் பயன் நம்மைத் தொடரும்
தீவினை குழந்தை தொழிலாளர் கொடுமை
வீழ்த்திட இதனை ஒன்று சேருவோம்.

உயர்த்துவோம் உச்சிக்கு நமது குரலை
முயலுவொம் சட்டங்கள் பலவும் தீட்டுவோம்
பயனுள்ள செயல் இதுவென உணர்வோம்
பயமின்றி எதிர்த்து சண்டைகள் போடுவோம்.

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (10-May-16, 3:08 pm)
பார்வை : 142

மேலே