உழவர்

ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்

ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்

நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!

அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு

கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்டேன்

எல்லாமே வய-தான்னு அங்கேயே கிடந்தியே
என்னய்யா கொண்டு வந்த
என் பொஞ்சாதி கேப்பாளே...

உழச்ச உழப்புக்கு போட்டத எடுத்துட்டேன்
வச்சத மீட்டு அவ கழுத்துல போட்டுட்டேன்
சொந்தத்துக்கு கள நெல்லும்
சோத்துக்கு கள நெல்லும்
சேகரிச்சு வச்சிட்டேன்

எந்திரத்த நம்பி
உழவுத்தொழில் போச்சுன்னா
எம்மக்க பொழைக்க எத நோக்கி ஓடும்??
உங்க நவீன பொழப்புக்கு
நாங்களும் மாறிட்டா
என்னத்த திம்பீக?
எப்படி உயிர் வாழ்வீக?
சுயநலத்துல எங்க நிலத்த வித்துட்டா
வாய்க்கரிசி போடக்கூட வக்கத்தவர் ஆவீக...

நாங்க படிக்காத மக்க
பகட்டுக்கு நடிக்காத மக்க
உலகத்து பசிய போக்குர மக்க
உழவ உசுரா நெனைக்கிற மக்க
உலகத்துல உண்மையா உழைக்கிற மக்க
சோறு போடும் தாய விக்காத மக்க...

எங்க வாழ்க்க தத்துவமெல்லாம்
வெதைய வெதக்கனும்
வெதச்சது வெளையனும்
வெளஞ்சத விக்கனும்
வித்தத வெதையாக்கனும்...

அறுவட முடிஞ்சி வாரம் கழிஞ்சிடுச்சு
வாங்கி வந்த வெர நெல்லு
குறுவைக்கு மிஞ்சிடுச்சு
வைகரையில எழுந்து
வெத நெல்ல எடுத்தேன்
வெளக்க திருப்பி
அவ கழுத்த பாத்தேன்...

எழுதியவர் : வீ. சீதளாதேவி (10-May-16, 5:45 pm)
பார்வை : 609

மேலே