உழைப்பே உயர்வு
கடின உழைப்பின்றி எதுவும்
கிடைக்குமென்று நினைக்காதே!
கிடைக்குமென்று தோன்றினாலும்
கிடைப்பதில்லை கிடைப்பதில்லை;
கிடைத்தாலும் நிலைப்பதில்லை!
ஒழுக்கத்தை வளர்ப்பதால்
கடமை கண்ணியம் மட்டுமின்றி
கட்டுப்பாட்டை வளர்ப்பதால்
நிர்வாகத் திறனை வளர்த்து
நிலைநிறுத்தவும் செய்வதால்
உலகமே உன்னால் முடியாதென
ஏளனம் செய்தாலுமே
வைராக்கியம் வளர்ப்பதால்
கடின உழைப்பை பழகு!
மற்றவர்கள் அவசரத்தில்
தவற விட்ட பொருட்களா
உனக்கு வேண்டும்?
இமயமளவு வெற்றிதானே?
பின் ஏன்
அதிர்ஷ்டம் வரும்;
அதிர்ஷ்டம் வரும் என்று
காத்திருந்து நோகிறாய்?
புதியதாக கற்க வேண்டுமா?
புதினமொன்று படைக்க வேண்டுமா?
சிற்பமொன்று செதுக்க வேண்டுமா?
ஏற்றம் தரும் மாற்றம் வேண்டுமா?
கடின உழைப்பே ஒரே வழி!
எந்த வேலை செய்தாலும்
'செய்வன திருந்த செய்'
எனும் பொன்மொழி சொன்னபடி
சிறப்பாக செய்தால்
'இதுவன்றோ வேலை' என்று
உலகமே உன்னைப் பார்க்கும்.
கிரிக்கெட் சச்சினாகட்டும்;
பாடகர் ஜேசுதாசாகட்டும்;
சௌந்தரராஜன் ஆகட்டும்;
இசையமைப்பாளர்கள்
யாவருமே ஆகட்டும்;
பிறவி மேதை என்பதனால்
உழைக்காமல் இருந்ததில்லை:
திருத்தமாக செய்தார்கள்;
நிறுத்தாமல் உழைத்தார்கள்;
உறக்கம் என்றும் உணவென்றும்
பாராமல் உழைத்தார்கள்!
வெற்றிக் கனிகள் பறித்தார்கள்!
வெற்றிக்கு சந்தர்ப்பம்
காற்றிலே பந்தாக
கையிலே குதிப்பதில்லை!
கை கட்டி அமர்வோரை
தேடி வருவதில்லை;
கடினமாய் உழைப்போரை,
தொடர்ந்து உழைப்போரை
மூளையை தட்டி
யுக்திகள் சொல்கிறது!
சோம்பிக் கிடப்போர்க்கோ
கையசைத்து பறக்கிறது!
உழைப்பின் கனிகள்
உனக்கா? உலகுக்கா?
உலகுக்கே என்றாலும்
அயராது உழைத்திடு!
அறிவியல் மேதைகள்
கண்டுபிடிப்புகள் எல்லாம்
தமக்கெனவா செய்தார்கள்!
உலகுக்கன்றோ செய்தார்கள்!
அதுவன்றோ பெரும் உயர்வு!
உனக்காக உழைத்திடு!
நண்பர்க்கும் உழைத்திடு!
ஊருக்கும் உழைத்திடு!
உலகுக்கே உழைத்திடு!
உழைப்பாலே உயர்ந்திடு!