விந்தை இந்த சந்தை மனிதர்கள்
அந்த நாட்களில் மக்களுக்காகவே சந்தை கூடியது. வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மக்களின் தேவையை மட்டும் மையப்படுத்திக் கூடும் ஒரு இடமாகத்தான் சந்தை அந்தக் காலத்தில் இருந்தது. வேர்வைத் துளிகளால் தாகம் தீர்க்கும் சுடுமணற் பரப்பு. மக்களின் கால் தடயங்களில் எழும்பி மெல்ல அடங்க முயற்சித்து தோற்றுப் போகும். குட்டிப் புழுதிக் காளான்கள். குழி பறிக்கும் செவலைகளின் தொடர் சிறு நீர் இரைச்சல். குழந்தைகளின் அடையாள அட்டைகளாக உயரே பறக்கும் ஹூலியம் பலூன்கள்……. இப்படியாக கிராமத்துச் சந்தையை வர்ணித்துக்கொண்டே போகலாம்.
நவீன காலத்தில் மக்களுக்காக சந்தை என்ற தேவையை உடைதெறிந்து விட்டு பன்னாட்டு நிறுவங்கள் தங்களின் சந்தைக்கு ஏற்ப மக்களைத் தயார் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.
விற்பவர்களின் தேவைக்கிணங்க உங்களை மாற்றியமைக்க, உங்களையும் அறியாமலேயே நீங்களும் ஒரு சந்தை மனிதராக உருமாறுகிறீர்கள். சந்தை மனிதர்கள் பார்ப்பதற்கு மற்ற சராசரி மனிதர்களைப் போலத்தான் இருப்பார்கள் எனினும், பொருள் வாங்கும் தேர்வில் ஒரு இயந்திர மனிதர்களைப் போல நடந்து கொள்வார்கள். குறிப்பிட்ட கடையை நோக்கி ஒரு கண்மூடிப் பயணம். கடையில் கூட்டமாக மக்கள் இருந்தாலும், நல்ல பொருள், நான்கு பேர்கள் வரத்தானே செய்வார்கள் என்று சுய சமாதானத்துடன் தன்னுடன் வந்தவர்களை கர்வமாகப் பார்த்து பெருமிதப்பட்டுக் கொள்வார்கள். இவர்களின் உறவுக்காரங்கள் கும்பகோணத்திலிருந்து வந்தாலும், குவைத்திலிருந்து வந்தாலும், அந்தக் குறிப்பிட்ட கடை, குறிப்பிட்ட பொருள் என்று அனைவரையும் திணறடித்துவிடுவார்கள்.
தானாகத் திறக்கும் கண்ணாடிக் கதவு. குளிரூட்டப் பெற்ற பெரிய அறை. நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்ட பொருட்கள். மெல்லிய குரலில் விற்பனையாளர்களிடம் பொருள் குறித்த விபரத்தை ஆங்கிலத்தில் கேட்டால் கூடுதல் மதிப்பு. இவ்வளவு விலையாவென்று எந்த சந்தர்ப்பத்திலும் கேட்கவோ, விழிகளுயர்த்தி ஆச்சர்யப்படுவது அறவே கூடாது என்பது எழுதப்படாத அடிப்படை விதி. அது சக சந்தை மனிதர்களால் உங்களின் சுய மரியாதையையும், தன்மானத்தையும் ஒரு சேர சர்வ அலட்சியமாகப் பார்க்க வைத்துவிடும். பணம் கொடுக்கும் இடத்தில் கடன் அட்டையைக் காட்டினால், உங்களை மகிழ வைக்க தயாரக சேமித்து வைத்திருக்கும் தொடர் ஆங்கிலச் சொற்றோடர்களில் கொஞ்சம் உரையாடி, நன்றிப் பெருக்குடன் தலையாட்டி வழியனுப்புவார்கள்.
உங்களின் தள்ளு வண்டிக் கூடையில் பாஸ்டா, மேக்ரோனி, அஜினோமோட்டோ, மயனீஸ், டொமாட்டோ சாஸ், சீஸ் ஸ்லைஸ், பர்கர், ஒரிகனோ என்று வாயில் நுழையாத பொருட்களிருந்தால், நீங்கள் நிச்சயம் உயர் வர்கப் பிரதினிதித்துவ மக்களாக அடையாளப் படுத்தப் படுவீர்கள். நீங்கள் அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் இந்தியா வந்தவராக ஒரு தற்காலிக பிம்பத்தை ஏற்படுத்த அது நிச்சயம் உதவும். குறைந்த பட்சம் அமெரிக்காவில் படிக்கும், வேலை பார்க்கும் உங்களின் பிள்ளைகளை கௌரவிக்கும் பொருட்டாவது நீங்கள் இது போன்ற பொருட்களை அவசியம் வாங்கித்தான் ஆக வேண்டும் என்பது சந்தை விதிகளில் முக்கியமான ஒன்று.
நீங்கள் அந்த பன்னாட்டு அங்காடியில் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் போது உங்கள் மகனோ, மகளோ அமெரிக்காவிலிருந்து தொலை பேசியில் அழைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், காதிலிருக்கும் புளூடூத்தை ஆட்காட்டி விரலால் மெல்ல அழுத்திப் பிடித்து டாலர் வீழ்ச்சி, வால்ஸ்ட்ரீட் என்று பேசிக்கொண்டே அடுக்கி வைத்திருக்கும் விலையுயர்ந்த உணவுப் பொருட்களை வெகு அலட்சியமாக தேர்வு செய்தால் சந்தை மனிதர்களின் நூறு சதவீத உருமாற்றம் பெற்று விட்டீர்கள் என்று பொருள். நானும் சந்தை மனிதன்தானாவென்ற உங்களின் கேள்விக்குப் பதில் என்னிடம் தயாராய் இருக்கிறது. கீழே கேட்டிருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் “ஆம்” என்றால் நீங்களே இருபது மதிப்பெண்களை தாராளமாய் போட்டுக்கொள்ளுங்கள்.
1. தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரத்தை முன்னிறுத்தி ஒரு தடவையாவது நீங்கள் பொருளைத் தேர்வு செய்து வாங்கி இருக்கிறீர்களா?
2. உங்களின் அண்டை வீட்டார்களையோ அல்லது உறவினர்களையோ திணறடித்துப் பொறாமைப்படவைக்க தேவையில்லாமல் ஏதாவதோரு பொருளை எப்போதாவது வாங்கியிருக்கிறீர்களா?
3. ஷாப்பிங் என்ற பெயரில் வாரத்திற்கு ஒரு முறையாவது வெளியே செல்லாவிட்டால், தலை கனத்துப் போய் வாழ்க்கையையே வெறுத்திருக்கிறீர்களா?
4. கேட்ட விலையை பேரம் செய்யாமல் கொடுப்பதுதான் நாகரீகம் என்ற கூற்றினை முழுவது ஒப்புக் கொள்கிறீர்களா?
5. சந்தைக்கு வந்திருக்கும் புதுப் பொருட்களை ஒரு தடவையாவது வாங்கி உபயோகிப்பவரா?
உங்களின் மதிப்பீடு நூறு மதிப்பெண் என்றால் சந்தை மனிதனென்ற சான்றிதழை பெற்றுக்கொள்ளும் முழுத்தகுதியும் உங்களுக்கு இருக்கிறது. எண்பதெனில் இரண்டாம் பட்சம்தான். முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. அவ்வளவுதான்.
அறுபதெனில் சந்தை மனிதர் என்ற பட்டத்தை சுவீகரிக்க கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவை.
நாற்பதெனில் நீங்கள் சராசரி சந்தை மனிதர். ஒரு நீண்ட புனிதப் பயணம் உங்களுக்காவே காத்திருக்கிறது.
இருபதெனில் பரம பதம் போல, எந்த நேரத்திலும் இந்த உயரிய பதவிக்குப் போட்டி போடும் முயற்சி நீர்த்துப் போய் வெளியேறும் சாத்தியக் கூறுகள் உண்டு.
பூஜ்யமெனில் இந்தக் கட்டுரையை இத்தோடு படிப்பதை நிறுத்திவிட்டால் உங்களுக்கு மிகவும் நல்லது.
ஒரு பொருளை வாங்க நினைக்கும் போது அது அவசியமா இல்லையாவென்று உங்களின் மனதிடம் ஒருபோதும் கேட்கவே கேட்காதீர்கள். தொண்ணூறு சதவீத மனம் அவசியம் என்றுதான் கூறும். வாங்குவதை கொஞ்சம் தள்ளிப்போட முடியுமாவென்று சற்று யோசியுங்கள். அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம், பிறகு அந்தப் பொருளின் போலியான முக்கியத்துவம் மெல்லத் தளர்ந்து உங்களின் மனதிலிருந்து விலகி ஒரு சமயத்தில் வேண்டாமென்று நீங்களே தீர்மானம் செய்து விடுவீர்கள். அதையும் மீறியபடிக்குத் தேவையெனில் அந்தத் தேவையில் நிச்சயம் ஒரு நியாயம் இருக்கும்.
தனியாகப் பொருள் வாங்கச் செல்வதை அறவே தவிர்த்திடுங்கள். குடும்பத்தினருடன் கடைக்குச் செல்லும் போது அனைவருக்கும் அந்தப் பொருள் பிடித்தால்தான் வாங்க வேண்டும் என்பதில் மிகவும் தீர்மானமாக இருந்தால் உங்களின் முழுப்பணமும் வீடு திரும்பும் சாத்தியங்களுண்டு.
பொருள் வாங்கும் முன்பு அது பற்றி விற்பனையாளர்களிடம் முழுவதையும் கேட்டறியுங்கள். விசாரிக்கும் கடையிலேயே பொருளை வாங்கியாக வேண்டுமென்று எந்த நியதியும் இல்லை. குறிப்பிட்ட பொருள் குறித்து நாட் கணக்கில் நீங்கள் அறிந்து கொண்ட விஷயங்கள் பாதிப் பொருளை வாங்கிய முழு மகிழ்ச்சியை உங்களுக்குக் கொடுக்கும். நண்பர்களிடம் அது குறித்து ஆழமாக உங்களால் மட்டுமே முழு அளவில் விவாதிக்கவும் முடியும். பிறகென்ன, அந்தக் குறிப்பிட்ட பொருளை வாங்காததற்கான காரணங்களை மளமளவென்று வேகமாகப் பட்டியலிடுங்கள். இதன் மூலம் உங்களின் புத்திசாலித்தனத்திற்கு நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள் என்பது உறுதி.
கிராமத்திலிருந்து குத்தகைக்காரத் தாத்தா எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். குத்தகைப் பணத்தை என் மனைவிடம் கொடுத்து விட்டு, என்னிடம் பொதுவாகப் பேச ஆரம்பித்தார். திடீரென்று என்னுடைய நெருங்கிய நண்பன் ராஜ சேகர் பற்றியும் அவரின் தந்தை பற்றியும் விசாரிக்க அவரின் தந்தை போன வருடமே இறந்து விட்டதாகக் கூறினார்.
“என்னப்பா செய்ய? ராஜ சேகரும் வெளிநாடு போயிட்டான். பெரியவருக்குக் கடையை நடத்த ஏராளமான போட்டி. மனசுலேயும் வலு குறைஞ்சிடுச்சு. இடமும் ஏதோ விலைக்கு வர அடிமாட்டு விலைக்கு வித்திட்டு வீட்டுக்குள்ளேயே அடஞ்சவர்தான். பத்து நாளிலேயே பொசுக்குன்னு மாருவலியிலே போயிட்டாரு”. துண்டை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார் தாத்தா.
ராஜ சேகரின் தந்தையை நினைக்கும் போது அவரின் கடைக்கு ஒவ்வொரு முறையும் பொருள் வாங்க நான் போகும் போதெல்லாம் என் சிறிய உள்ளங்கை வழிய வழிய பனைவெல்லமோ, பொட்டுக்கடலையோ போடும் அவரின் குவித்த கை விரலில் மாட்டியிருக்கும் தடித்த மோதிரத்தின் எனாமல் பதித்த மூவர்ண தேசியக் கொடிதான் உடனே என் கண்முன்னே நிற்கும்.
சுத்தம்-அசுத்தம் என்ற பாகுபாட்டில் ஜாதிப்பிரிவினை மட்டும் வளரவில்லை. பொருட்களை வாங்கும் நுகர் பொருள் கலச்சாரமும் சுத்தம் அசுத்தமென்ற பாகுபாட்டை உங்கள் கண்முன்னே காட்டி அக்சுறுத்தி ஒன்றை விட, மற்றோன்று சுத்தமென்ற அடிப்படையில் தேர்வு செய்யும்படி உங்களைத் தூண்டும். குடும்ப அங்கத்தினர்களின் அரோக்கியம் கருதி, அவர்களுக்காக என்னைப் போல சந்தை மனிதர்களானவர்களையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள்..