கோடை மழை

எதிர் சவ்வூடு பரவல்
இல்லாமல்
உப்புக்கடலைப் பிரிந்தது
இல்லை,
உடலைவிட்டு உயிர்போல் பிரிந்தது.

பின்பு,
கார்மேகமாய்க் கருக்கொண்டது
மழையாய்ப் பிறந்தது
தூய்மைக்கான
இலக்கணத்தை வகுத்துக்காட்டியது

கோடைக்குக் குளிர்ச்சிகாட்டி
வீட்டுக் கூரையில்
எக்காளமிட்டது
எதிர்பார்த்திருந்த விருந்தாளியாய்
மகிழ்வூட்டி
கோடையின் வெம்மைக்குக்
குளிர்வெனும் போர்வையைப் போர்த்தியது.

மனமுள்ள மனிதருக்கும்
மணமுள்ள மரங்களுக்கும்
உயிர் விருந்தளித்தது.

பள்ளி சேர்க்கும் பருவத்தில்
பள்ளிக்குள் செல்ல மறுத்து
அன்னைமேல்
தாவத் துள்ளிய குழந்தைபோல்
தரையில் பட்டதும்
வான் அன்னையைத்
தாவிப் பிடிக்கத்
துளிகளாய்த் துள்ளியது.

படிக்கட்டுகளில்
தாவிக்குதித்து இறங்கி
பிறந்த வீட்டை நோக்கிய
தன்
பயணத்தைத் தொடர்ந்தது
மழை.

மழை,
எங்கிருந்து எடுக்கப்பட்டதோ
மீண்டும்
அங்கேயே கொடுக்கப்பட்டது !

- செ.கிரி பாரதி.

எழுதியவர் : செ.கிரி பாரதி (12-May-16, 3:42 pm)
பார்வை : 145

மேலே