ஏக்கம்

மாமரத்துக் குயிலே என்வீடு
இன்னும் இருக்கிறதா?
மார்கழித் தென்றலே என்
வீட்டைத் தொட்டாயா?


புறந்து சென்று பார்ப்பாயா
பதுங்கியிருந்து பார்ப்பாயா?
பாதுகாப்பில் இருக்கிறதா?
பார்த்து நீயும் சொல்வாயா?


முள்வேலி இருக்கிறதா?
முன் முற்றம் இருக்கிறதா?
திண்ணையும் இருக்கிறதா?
தெரிந்து வந்து சொல்வாயா?


செக்கச் செவேலென
செம்பருத்தி பூத்திருந்த
பூந்தோட்டம் இருக்கிறதா?


சேர்ந்து விளையாடி
சோறு சமைத்துண்ட
குடிசையும் இருக்கிறதா?


கிட்டிப்புள் அடித்துக்
குதித்து விளையாடிய
தெருக்களும் இருக்கிறதா?


வெட்ட வெய்யிலிலே
வேர்த்து விறுவிறுக்க
வெட்டி இளனீர் குடித்த
தோட்டமும் இருக்கிறா?


தெரிந்து வந்து சொல்வாயா?
அறிந்து வந்து சொல்வாயா?
பறந்து வந்து சொல்வாயா?
பார்த்து வந்து சொல்வாயா?

எழுதியவர் : சர்மிலா (12-May-16, 4:07 pm)
பார்வை : 105

மேலே