மாற்றம் வேண்டும்
எங்களின்
எல்லைகள்
உங்களால்
வரையப்பட்டன
எமக்கான
சுதந்திரம்
உங்கள் எல்லைக்குள்
தீர்மானிக்கப்
பட்டிருந்தது
உயிர்ப்பிலும்
பிறப்பிலும்
வேறுபடாத நாம்
வளர்ப்பில் மட்டும்
வேறுபடுத்தப் பட்டோம்
அப்பாவிற்கும் அண்ணனுக்கும்
தம்பிக்கும் அளிக்கப்பட்ட
நியாயங்கள்
அம்மாவிற்கும் அக்காவுக்கும்
தங்கைக்கும்
மறுக்கப்பட்ட போது
கற்பும் காவலும்
காரணங்கள் ஆயின.
சிறையில் வைத்தவர்களும்
நீங்கள்
எங்களைச்
சிதையோடு தள்ளியவர்களும்
நீங்கள்
அடுக்களையில் வைத்தவர்கள்
நீங்கள்
அரண் மனையில்
வைப்பவர்களும்
நீங்கள்.
நீங்கள் கட்டிய
நான்கு சுவர்களைத்
தாண்டி வளர்ந்து
நாசா வரை
சென்று விட்டோம்
எங்கள் மீதான உங்கள்
பார்வை மட்டும் இன்னமும்
முன்னேற மனமின்றி
நான்குசுவருக்குள்
நலிந்தே கிடக்கிறது.