ஒரு நாள் தான் – ஒரு பக்க கதை

சென்ட் பாட்டில், ஃபாரின் சோப், ஒரு ஃபுல் பாட்டில்
எல்லாவற்றையும் பையில் அள்ளிப் போட்டுக்
கொண்டு புறப்பட்டான் ராகவன்.

‘‘ஃபாரின்லருந்து வந்ததும் வராததுமா எங்கடா
கெளம்பிட்டே?’’ – வழிமறித்துக் கேட்டாள்
அம்மா.‘‘கார்த்தி வீட்டுக்கும்மா!’’ – நிற்காமல்
சொல்லிக்கொண்டே, வெளியே வந்து பைக்கை
ஸ்டார்ட் செய்தான்.

மனசெல்லாம் கார்த்திக்கு நன்றி சொன்னது.
‘அவன் உதவி செய்யலைன்னா நான் ஃபாரின்
போயிருக்க முடியாது. கை நிறைய சம்பாதிச்சிருக்க
முடியாது. வீடு, வாசல்னு நல்ல நிலைக்கு
வந்திருக்க முடியாது. நல்லது எதுன்னு எனக்கு
வழிகாட்டினவன் அவன்!’ – நினைத்துக்கொண்டே
ஆக்ஸிலேட்டரைத் திருகினான்.

கார்த்தி வீட்டில் அவன் அம்மா, மனைவி, குழந்தைகள்…
இவனை சுரத்தில்லாமல் வரவேற்றார்கள். யார்
முகத்திலும் உணர்ச்சியில்லை. உற்சாகமில்லை.

என்ன ஆயிற்று? விசாரித்தான்.அவர்கள் வழி சொன்ன
இடம் போய் பார்த்தான். ‘ஒயின் ஷாப்’ வாசலில்
போதையில் சுயநினைவின்றி கிடந்தான் கார்த்தி.

‘‘இன்னைக்கு ஒரே ஒரு நாள்தான். ஒரே ஒரு
கிளாஸ் குடி. ஒண்ணும் செய்யாது!’’ – குடிக்க
மறுத்தவனை வற்புறுத்தி குடிக்க வைத்தது நினைவுக்கு
வந்தது.

நண்பனுக்கு தான் செய்த கைமாறு இதுதானா என
நினைத்து வெட்கினான் ராகவன்!

——————————–

வீ.சுரேஷ்
குங்குமம்

எழுதியவர் : முகநூல் (17-May-16, 3:50 pm)
பார்வை : 307

மேலே