என்றும் தருமே பெருமகிழ்ச்சி

உனக்கு ஒரு வயது!
நீ பேசும் மழலையும் - உன்
தள்ளாடும் நடையும் உன்
தாய்க்குத் தரும் மகிழ்ச்சி!

உனக்கு மூன்று வயது!
சுவற்றில், கிடைக்கும் தாள்களில்,
கிறுக்கித் தாள்களைக் கிழிப்பாயே - அதற்கு
உன் அப்பா அடையும் மகிழ்ச்சி!

உனக்கு ஒன்பது வயது!
நீ சைக்கிள் ஓட்டப் பழகி, முட்டி பெயர
கிடைக்கும் சிராய்ப்புகளும் – உன்
விடாமுயற்சிக்கு வெகுமதி மகிழ்ச்சி!

உனக்கு பனிரெண்டு வயது!
உன் தோழர்களுடன் கிட்டிப்புள் ஆடி,
அடுத்தவர் வீட்டு சன்னலை உடைத்து
ஓடி ஒளிவதும் உனக்கு மகிழ்ச்சி!

உனக்கு பதினெட்டு வயது!
உன்னுடன் பயிலும் பருவப் பெண்ணிடம்
மையல் கொண்டு மயங்கித் திரிவதும்
உனக்குத் தருவது மகிழ்ச்சி!

உன் வாழ்வின் முதுமையில் இவைகளை,
இரு கண்களை மூடி நினைத்துப் பார்ப்பதும்,
பின்னோக்கி எண்ணச்சுழலை மெல்ல ஓட்டிப்
பார்ப்பதும் என்றும் தருமே பெருமகிழ்ச்சி!

ஓ! உனக்கு இப்பொழுது வயது எழுபது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-May-16, 7:00 pm)
பார்வை : 108

மேலே