கண்ணீரில் மிதக்கும் மழை -சுஜய் ரகு
வேரோடு பிடுங்கியெடுத்த
வெங்காயத்தை
முத்தங்களால் நிரப்பி
நிலத்தில் அடுக்குகிறார்
உ(அ)ழப் பிறப்பெடுத்தவர்
பற்பல அந்திகளை
விழுங்கி ஏப்பமிட்டுக்
கடக்கிறது அவரின்
அறுவடை காலத்தின்
கணங்கள்
மூட்டை மூட்டையாய்
வெங்காயம் ஏற்றி
விடப்பட்ட லாரி
மழை கிழித்து
விரைந்துகொண்டிருக்கிறது
இன்று
சொற்ப பணமே மிஞ்சிய
கைகளில் கடன் கனக்க
அண்ணார்ந்து பார்த்து
விழிகளின் நீரைக்
கடத்துகிறார் அவர்
பருவம் தப்பிப் பெய்யும்
மழை
அவர் கண்ணீரில் மிதக்கிறது