பேரெழில் இயற்கை

சிறகில் ஒட்டிய
தண்துளி கிளர்த்தி
சிவ்வென புள்ளினம்
பெயர்தலும் காண்!
சிதறிடும் துளிகள்
திசைகள் நான்கும்
பூபாளம் மெல்ல
புகல்தலும் காண்!!
புலங்கிளர் மூக்கினை
புடமிட்டாட்டி
புரியா மொழிதனில்
பேசிடுது!
புலரலில் இமைகள்
விரித்த வெய்யோன்
புரிதலில் தானும்
தோற்றிடுது...!
நிலங்கீறி
விதையூன்றும்
உழவனாய்...
தரைக்கீறி
இரைத் தேடும்
தவிட்டினம்
தனியழகு!
எரிகோற்தன்னின்
தனலது தணிக்க
தலையசைத்திடும்
தென்னை
பேரழகு!!
ஸ்வரலயமடங்கா
சுதிதனிலெழுந்து
சுனை நீர்
பாடிடும்
சுரம் கேள்!
வாசற் தெளித்திடும்
வாளை குமரியர்
சாயலில் நாரைகள்
பார்! பார்!!
காலமெழுதிய
கதைகள் படித்திட
மலையெனை
மௌனமாய்
அழைக்கிறதே!
புரியா பாஷையில்
முறுவலித்து
தென்றலும் சுகமாய்
அணைக்கிறதே!!
கருமுகில் தோன்றி
வெண்ணுருமாறி
பசுந்தரை வீழ்ந்திடும்
மழைத்துளிதானும்
மொழியா தத்துவம்
ஏதிங்கு?!
சேற்றில் முகிழ்த்தினும்
நறுமணம் பரப்பி
நாசி நிறைத்திடும்
மலரினம் பாராங்கு!!
வளைந்திட்ட
வர்ணங்கள்
ஏழதுவும்
ஸ்வர வரிசையின்
குறியீடோ?!
கரித்திடும் நீரலை
பேராழி...
காளையர் களித்திட
தனிவீடோ?!!
எழுதலும் அழகு!
வீழ்தலும் அழகு!
பறப்பதும் அழகு!
தவழ்வதும் அழகு!
இயற்கை போர்வையில்
இறைவன் யாத்த
ஒவ்வொன்றுமிங்கே
சிற்பமடா!
அற்பன்
கொண்டிட்ட சிந்தையில்
கண்டிட்ட காட்சிகள்
மொழிந்ததுமிங்கு
சொற்பமடா!!!
**********************