கோடாலிக்கதை
ஒரு ஊரில்
ஒரு மரம்வெட்டி
இருந்தான் என
துவங்கும் அக்கதை
ஈரமின்றித்தான்
பயணித்தது
ஓங்கிய பெருமூச்சின்
சீரான இடைவெளியில்
நங்கு நங்கென்று
பதியும் வெட்டோசையோடு
நகர்ந்தது
அவ்வதிர்வின்
இலையுதிர்வோ
வேர்களின கனத்த
மௌனமோ
கூடிழந்த பறவையின்
பரிதவிப்போ பச்சையமிழந்த
அக்கதையிலில்லை.
கதைசொல்லியின்
நாவறண்டு
தண்ணீர்தேடும்
சிறு இடைவெளியில்
கதையின் நீதி கூட
நிழல் தேடுவதால்
மூன்று கோடாலிகள்
தந்த தேவதைக்கும்
ஒரு
மழைதேவைப்படுவதாய்
முடியும் இனி அக்கதை
- நிலாகண்ணன்