முதல் பட்டதாரி

முதல் பட்டதாரி

முன்பெல்லாம்
என் நிலத்தில் விளைந்த
அரிசியைத்தான் தின்பேன்
எங்கள் தோட்டத்தில் விளைந்த
காய்கனிகளைத் தான் உண்பேன்
எங்கள் தோட்டத்து கிணற்றில் முகந்த
தண்ணீரைத்தான் குடித்தேன்
எங்கள் தொழுவத்துப் பசுக்கள் தந்த
பாலையே அருந்தினேன்
எங்கள் தோட்டத்தில் விளைந்த பூக்களில்தான்
சரம் தொடுப்பேன்
காயம்பட்டால்
என் நிலத்து மண்ணை அள்ளிதான் பூசினேன்
இப்போது எல்லாம் மாறி விட்டது
கலப்பையும் கமலைத் தடமும்
மண்ணுக்குள் போய் விட்டது
நெகிழிப் பைகளிலும் போத்தல்களிலும்தான்
எல்லாமும் கிடைக்கிறது
யாரிடமும் கையேந்தாத
விவசாயி வீட்டு முதல் பட்டதாரி
மாதச் சம்பளம் எடுப்பதற்கு
ஒரு ஏ டி எம் வாசல் முன்பு
வரிசையில் நிற்கிறேன்

எழுதியவர் : அன்பழகன் செந்தில்வேல் (25-May-16, 11:28 am)
Tanglish : muthal Pattathaari
பார்வை : 68

மேலே