மீராகுட்டிகளின் உலகம்

குழந்தை
குமரியாகி என்னை
விட்டுப்போன அன்றிரவு
மியாவ் என்றது
மகளுக்கு நான் சொன்ன பூனைக்கதைகள்.
பாசத்தின் பொறியில் சிக்கிக்கிடக்கிறேன்
ஒரு காய்ந்த
கருவாடென நான்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அப்பாவிடம்
காண்பிக்க
காத்திருந்து தூங்கிப்போன குழந்தையின் அருகில்
அவள் வரைந்த
குட்டி அணிலும் தூங்கிக்கொண்டிருந்தது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எச்சில் ஒழுக
ஏதோ முனகியபடி
விளையாடிக்கொண்டிருக்கும்
குழந்தைகளை
தாய் தொட்டிலுக்குள்
கிடத்தி
தாலாட்டும்போதெல்லாம்
பிறகு
விளையாடவருவதாய் சொல்லிமறைந்து
விடு்கிறான் கடவுள்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நேற்றிரவு
மீன்படம் போட்ட
தலையணைக்கு
சண்டையிட்டு
உறங்கிய குழந்தைகள்
அதிகாலையில்
திசைக்கொன்றாய்
தரையில்
உருண்டுகிடக்க
மீன்கள் ஆற்றுக்கே போய்விடலாமென்ற
முடிவுக்கு வந்திருந்தன.

- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (26-May-16, 12:38 pm)
பார்வை : 101

மேலே