காதல் மருத்துவம்

உலகத்தின் உயர்ந்தவற்றை
எடுத்து வந்து
பிரமன் செய்துவைத்த
பேசும் சிலையே...
உன் சிரிப்பில் சிந்திய
சிறுதுளியில்
காதல் தேசத்தின்
இதய உறவுப்பாலத்தில்
நினைவுகள்
நடந்து வருமென
எனக்குள் எதிர்பார்ப்பு.
படர்ந்த ஆலமரமாய்
என் வாலிப இதயம்.
நினைவுப் பறவைகளின்
ஆரவாரக்கொஞ்சல்கள்
பலவிகற்ப இன்னிசையாய்..!
நீ அளந்து பேசும்
வார்த்தைகளில்
அளவடி..!
சிந்தித்துப் பேசுவதில்
சிந்தடி..!
எப்போதும் என்
வெண்பாவாய் நீ !
காலத்தை
கட்டுக்குள் வைக்கும்
என் யாப்பெனும்
இன்பா எப்போதும் நீயடி !
இது வசந்தகாலம்தான்.
எனினும் எனக்குள்
ஏன் இன்னும்
இலையுதிர்காலம்...?
என் நிழலில்.
இளைப்பாற வா.
அப்போதுதான்
ஆரம்பமாகும்
எனக்குள் வசந்தகாலம்...!
என் பாசையில் சொன்னால்
இது கத்தரி வெயில்காலம்.
மற்றவர் பார்வையில்
இது அக்னி நட்சத்திரகாலம்..!
நீ எனக்குள்ளேயே
இருந்துவிடு.
உன்னையும்
ஏன் உன் நிழலையும்கூட
வெயிலின் ஊடுருவுகதிர்கள்
தொடுவதை
அனுமதிக்க மாட்டேன்.
ஒருவேளை
என் அன்புமிகுதியில்
குளிர்காய்ச்சலானாலும்
பயந்துவிடாதே..
போதிதர்மரை
உயிரோடு எழவைத்து
வைத்தியம் பார்க்கிறேன்.