மரணம் வரை உன்னோடு

தொலை தூரத்தில் நீ...
தொடரும் உன் நினைவில்
துடைக்க கைகளின்றிய
கண்ணீரோடு நான்...
கடவுள் அருளிய பரிசே
வாழ்வு தான் என்றிருந்தேன்,
நீ காதல் தந்த - அந்த
நொடி வரைக்கும்..

என்றாலும் வலிக்கின்றது.,
இதயத்தின் இடுக்குகளெல்லாம்...
அன்பானவன் நீ
அருகிருக்கும் வரம்
இறைவனிடத்தில் - எனக்கு
மறுக்கப்பட்ட நிஜம்,
நினைவுகளில் நீந்தும்
போதெல்லாம்!..

தேனாக ஒலித்திடும்
உன் குரலிலே - என்
தேகமும் உயிர் பெறுது..
ஒரு நாள் சுவர்க்கத்தை
அறிமுகம் செய்து,
தொடரும் ஒன்பது நாள்
எனை நரகத்தில் - வாழ
வைப்பது நீதானடா,
உன் மௌனங்களின்
ஆட்சி நடாத்தியே!..

என்னை வாழ வைக்கும்
மந்திரமெல்லாம் கற்றவனே,..
அங்கே - உன்
வார்த்தைகள் பெறும் மதிப்பு
அறிவாயா? - அதுவோ
மரணப் படுக்கையில்
வீழ்ந்தவன் முன்,
இறைவன் மறுஜென்மம்
வழங்கிப் போவதன்ன!..

இயந்திர உலகத்தின்
சுழற்சியை வெல்வதற்காய்
சுழன்று கொண்டிருப்பவன் நீ!
உன் காதலில் - நான்
குறையேதும் கண்டதில்லை,
இருந்தும் - இதயத்தில்
எவரைக் கொண்டும்
நிரப்பிட இயலாத
வெற்றிடம் - நீ
தூரமாக இருக்கையில்
உணர்கின்றேன்!..

எனக்கு சொந்தமானவனாய்
நீ மாறிவிட வேண்டும்
என பேராசையில்லை...
உன் இதயத்தில் - நீ
எனக்களித்த இடம்
எப்போதும் நிரந்தரமானது,
அறிவேனடா நானதை..
எனக்கு வேண்டியதெல்லாம்
உனக்கு சொந்தமானவளாய்
அங்கே வீற்றிருக்கவே!..

காலங்கள் எப்படியெல்லாமோ
மாறிப் போய்விடலாம்..
கருவாக எனக்குள் விழுந்த
உனக்கான காதல்,
வேரூன்றி கிளை பரப்பி
தலைமுதல் கால்வரை
பரவியிருக்கும் நரம்புகளாய்,
என் உடல் மண்ணை
முத்தமிடும் நாள்வரை!

#கவிப்_பிரியை_shah

எழுதியவர் : ‪கவிப் பிரியை - shah‬ (28-May-16, 8:20 pm)
பார்வை : 3414

மேலே