கிரிக்கெட் காண வந்த கடவுள்

அவர் வந்துவிடுவதற்கான
முன்னறிவிப்புக்கள் ஏதும்
இல்லாதபோதும் விளையாட்டு
ரசிகர்களால் மைதானம்
நிரம்பி வழிந்தது .

அவர் வருவதுபற்றி
அறிவிக்கப்பட்டிருந்தால்
டிக்கெட் விற்பனை தடைபட்டிருக்கலாம்
என்பதாலோ அல்லது அவர்
வருவதற்கான அறிகுறிகள்
தென்படாதக் காரணத்தாலோ
அவர் வருகை அறிவிக்கப் படாததால்
ஊரே கலைகட்டியிருந்தது

மதிய இடைவேளை வரையிலும்
வாராத கடவுள் விளையாட்டின்
மும்முரத்தை அவதானித்துவிட்டு
வானத்தின் மேலாக மெல்லக்
கரியநிறத்து முகில்களினூடே
தன்னுடைய வருகையை
விளம்பரப்படுத்தத் தொடங்கியிருந்தபோது
விளையாட்டில் மெய்மறந்திருந்த
இரசிகர்கள் கிரிக்கட்டைத்
தெய்வமாக வழிபட்டுக் கொண்டிருந்தார்கள் .

கடவுள் மெல்ல மெல்ல
இறங்கிவந்து மைதானத்துக்குள்
திடீரென நுழைந்தபோது
விளையாட்டு வீரர்கள் நடுவர்கள்
எல்லோரும் அரங்கத்தினுள்
நுழைந்து கொண்டார்கள்.

விறுவிறுப்பான போட்டியொன்றை
பாதியில் இடைநிறுத்தியக்
கடவுளின் வருகையால்
முகம் சுழித்த இரசிகர்கள்
வாங்கிய டிக்கட் பணம் வீணான
வருத்தத்தில் கடவுள்மேல்
ஆத்திரப்பட்டுத் திட்டினார்கள் .
ஒருசிலர் சற்று நேரத்தில்
கடவுள் போய்விடுவார்
மீண்டும் போட்டி ஆரம்பமாகும்
என்ற நம்பிக்கையில் இருக்க
கடவுளோ எவரையும்
வெளியே செல்லவிடாதவாறு
மைதானத்திற்கு வெளியிலும்
வியாபித்திருந்தார்.

முடிவு என்னவாகுமோ என்ற
வருத்தத்தில் இருந்த
இரசிகர்களுக்கு போட்டி
வெற்றித் தோல்வியின்றி
முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டபோது
ஏமாற்றப்பட்ட மனசோடு
கடவுளை கண்டிக்க வழியின்றி
கடவுள் போகும்வரை நின்றிருந்து
கடவுள் போனதும் கவலையோடு
போகத் தொடங்கினார்கள்

ஊரெங்கும் வியாபித்திருந்தக் கடவுள்
வெளியேறிய வேளை
வெளியில் வந்து தங்கள் வயல்
வெளிகளை பார்த்து
ஊர்க்கார உழவர்கள்
சொல்லத் தொடங்கினார்கள்
இம்முறை அமோக விளைச்சல் கிடைக்குமென்று

விவசாயிகளைப் பார்க்கவந்தக் கடவுளை
விளையாட்டு பார்க்க வந்தக் கடவுளாகக்
கருதிக் கொண்டவர்கள் மட்டுமே
புலமிபியிருந்தார்கள் கடவுளை
மழை என்று.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-May-16, 2:59 am)
பார்வை : 102

மேலே