கைமா
பேருறுக் கொண்ட மாதங்கம்
___பெருமழையிடி போலொலிரு உரலடி
பேர்யாக்கைப் பெருமருப்பு அல்லியன்
___பெருஞ்சினப் பெருமா அதவை
பேரவாக் கொள்ளுளமிலா உவா
___பெருவலி கொண்டாளும் பீது
பேராற்றங் கரைதொட்ட நதிசரம்
___பெரும்பொய் கையாடும் புண்டரீகம்
பேரச்சத் தும்பியாட்டுந் தாப்பானை
___பெருமுதலிடி யோடெழுந் தள்ளுமட்டம்
பேரடிபதி பொழிலிடைக் கரிணி
___பெருங்காதற் கண்காட்டுங் களிறு.
- செ.கிரி பாரதி.
விளக்கம்:
தற்போது வழக்கில் இல்லாத யானையின் பெயர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கவியே இது.
யானைகள் காட்டில் பல்வேறு இடங்களிலும் பலவாறு மனிதர்கள் போலவே வயது வேறுபாட்டுக்கு ஏற்றபடி பல குணநலன்களோடு காணப்படும்.
‘பேருறுக் கொண்ட மாதங்கம்’
மாதங்கம் என்பது பெரிய உருவமுடையது, இயற்கையில் யானைகளுக்கு பெரிய உருவம் இருப்பதனால் இப்பெயர் அமைந்திருக்கலாம்.
‘பெருமழையிடி போலொலிரு உரலடி’
உருவம் பெரிதாய் அமைந்திருப்பதனால் அது பிளிறும் ஒலியும், பெருமழையின்போது தோன்றும் இடியின் ஒலியினைப்போன்று பெரிதாய் இருக்கும். உரலடி என்பது உரல் போன்று வட்டமான அடியினையுடைய பெரிய விலங்கு.
‘பேர்யாக்கைப் பெருமருப்பு அல்லியன்’
பேருடலுடன் பெரிய தந்தம் கொண்ட தன் கூட்டத்தைப் பிரிந்த யானை. இயற்கையிலேயே தன் கூட்டத்தைவிட்டுப் பிரிந்த யானையானது சற்று மூர்க்கமாகவே காணப்படும்.
‘பெருஞ்சினப் பெருமா அதவை’
பெருஞ்சினத்தோடு பெரிய உடலோடு மூர்க்கமாகத் தாக்கும் போரில் ஈடுபடும் யானை.
‘பேரவாக் கொள்ளுளமிலா உவா’
பெரிய ஆசைகளில்லாத முதிர்ச்சியடைந்த 60 வயதிற்கு மேற்பட்ட யானை. இயற்கையில் வயது முதிர்ச்சியின் காரணமாக, உடலும் தளர்வடையும்போது ஆசைகள் குறைவது இயல்பே.
‘பெருவலி கொண்டாளும் பீது’
பெரிய வலிமையுடன் தன் கூட்டத்தை ஒருங்கிணைத்து வழி நடத்திச் செல்லும் திறன்மிகுந்த யானை. பெண் யானைகளே கூட்டத்தைத் தலைமையேற்று வழி நடத்தும், ஆண் யானைகள் பருவம் எய்தியதும் கூட்டத்தைவிட்டுப் பிரிந்து தனியே சென்றுவிடும்.
‘பேராற்றங் கரைதொட்ட நதிசரம்’
பெரிய ஆற்றங்கரையின் அருகில் பிறந்த யானைகுட்டி.
‘பெரும்பொய் கையாடும் புண்டரீகம்’
பெரிய தாமரைத் தடாகத்தினுள் முழுகி விளையாடும் யானை.
‘பேரச்சத் தும்பியாட்டுந் தாப்பானை’
புதிதாகப் பிடிபட்ட யானையானது அச்சத்தோடு இருக்கும். அதனைப் பழக்கப் பயன்படுத்தப்படும் பழகிய யானை. தற்காலத்தில் உள்ள கும்கி யானை போன்றது.
‘பெருமுதலிடி யோடெழுந் தள்ளுமட்டம்’
பெரிய யானைகளால் இடித்துத் தள்ளப்பட்டு நடைபயிலும், யானைக்குட்டி.
‘பேரடிபதி பொழிலிடைக் கரிணி’
பெரிய அடிகள் மண்ணில் பதியுமாறு சோலையினுள் உலவும் பெண் யானை.
‘பெருங்காதற் கண்காட்டுங் களிறு’
சோலையினுள் உலவும் பெண் யானையினைக் காதலோடு நோக்கும் ஆண் யானை.