பறவைகளைப் பின்பற்றுங்கள்

===============================
கூடுகட்டி மரக்கிளையில் குஞ்சுகள் சகிதம்
=கொஞ்சிதினம் கூத்தாடிக் குலவும் பறவை
வீடுஇன்றித் தெருவினிலே வெட்கம் கொண்டு
=வேதனையில் தவித்ததில்லை வேலை யற்று
நாடுதரும் எனமனிதன் நாடும் வண்ணம்
=நாடியதும் போனதில்லை நாட்டி லுள்ள
கேடுகெட்டப் பேர்வழிபோல் கைகள் ஏந்தும்
=கேவலங்கள் கொள்ளுகின்றக் கீழ்வர்க் கமில்லை.

குஞ்சுகளைப் பட்டினியின் கோட்டி லிட்டுக்
=குடித்துவிட்டு நடுத்தெருவில் குந்துவ தில்லை
நஞ்சுள்ள உணவதனை நாவில் வைத்து
=நமைபோன்று உண்டதுவும் நலிந்த தில்லை
அஞ்சியஞ்சி வாழுகின்ற அவலம் கொண்டு
=அனவரதம் துடித்ததுவும் அழுவ தில்லை
நெஞ்சுரத்தி னாலதுவும் நீண்ட தூரம்
=நீலவானில் பறக்காமல் நின்ற தில்லை.

நாளைக்காய் சேர்த்துவைத்து நாட்டை இங்கு
=நாசமாக்கும் நமதெண்ண நாட்ட மில்லை
வேளைக்கு கூடுவந்து விடியும் போதில்
=விருப்போடு சிறகடிக்கும் வேலை தன்னை
நாளைக்கு எனஒதுக்கி நம்மைப் போன்று
=நாளாந்தம் சோம்பலெனும் நாடகம் போட்டு
மூளையற்றுக் நற்கருமம் முடக்கி வைத்து
=மூலைக்குள் அதுதானும் முடங்கி டாது.

மரம்சாய்த்து கூடுகளை முறிக்கும் போது
=மனம்சாய்ந்து பறவைகளும் மாய்வ தில்லை
சிரம்சாய்த்துக் கண்ணுறங்க சிரமம் பூண்டு
=சிறப்போடு புதுக்கூட்டை செய்து கொண்டு
உரமோடு மறுவாழ்வை உறுதி செய்து
=உழைப்புக்காய் சிறகடிக்கும் உணர்வால். வீழ்ந்தால்
இரந்துண்ண கைநீட்டும் எம்மைப் பார்த்து
=ஏளனமாய் சிரிப்பதுவை எண்ணிப் பாரீர்

காலிரண்டின் பலத்தாலே கடலில் மூழ்கி
=கழுகதுவும் மீன்பிடிக்கக் காணு கின்றோம்
மேலிருந்து பள்ளத்தில் மிருகம் எதையும்
=மிருதுவாகத் தட்டிவிட்டு மெல்ல வாயின்
நூலிழையில் சுமக்கின்ற நுட்பம் கொண்ட
=நூதனத்தைக் காணுகையில் நூறில் ஒன்றிது
போலிலையே மனிதனுக்கு புத்தி என்று
=புலம்பவிடும் அறிவிருக்கு பறவை கட்கு.

நிலம்தாண்டிப் பறந்தந்த நீல வானின்
=நிலையான அழகுக்கு நேர்த்தி சேர்க்கும்
பலவண்ண பறவைகள் பாரில் உண்டு
=பலத்துக்கும் பல்வேறு பட்டக் குணமும்
உலகத்துக் காலநிலை இயல்பிற் கேற்ப
=உயிர்வாழும் தன்மைகளும் உண்ட வற்றின்
சிலவற்றை பின்பற்றிச் செல்லினும் மனிதன்
=சிறந்தோங்கி வாழ்ந்திருப்பான் செகத்தில் நாளும்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Jun-16, 2:11 am)
பார்வை : 134

மேலே