யார் வந்தாலும் இந்த நிலை மாறாது

உள்ளம் இனிக்கவே தேனாய்த்தான் பேசிடுவர்
இல்லம் நிறையவே வாக்குறுதி அளித்திடுவர்
மக்கள் நலனையே கொள்கையாய் சொல்லிடுவர்
அதிகாரம் கிடைத்திட ஆட்டம் போட்டிடுவர்

தெருத்தெருவாய் அலைந்து வாக்கு சேகரிப்பர்
ஊர்ஊராய் பேசி கைத்தட்டல் வாங்கிடுவர்
ஜெயித்தால் உனக்கேநானென காலில் விழுந்திடுவர்
வெற்றி கிடைத்ததுமே அனைத்தும் மறந்திடுவர்

கூட்டத்தின் முன்னின்று தேம்பி அழுதிடுவர்
உழைத்தே தேய்ந்தேனென கதைகள் விட்டிடுவர்
பாடல்கள் பலபாடி மக்களை மயக்கிடுவர்
பதவியில் அமர்ந்தவுடன் சுகமாய் தூங்கிடுவர்

நல்லது செய்வோரின்று தரணியிலே இல்லையே
வாக்களித்த மக்களெல்லாம் பெருவதிங்கே தொல்லையே
எவர்வந்தும் மாறாதது நிலையொன்று மாத்திரம்
எவர்கையில் உள்ளதுவோ மக்களுயரும் சூத்திரம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jun-16, 2:01 pm)
பார்வை : 457

மேலே