யாரவன்

யாரவன்
என் யாழவன்
எனை மீட்டவந்தவன்
இல்லை மீட்கவந்தவன்

அவனே என்னவன்
அவன் கையில் பொம்மை நான்


உயிரை எடுப்பவன்
உயிரை கொடுப்பவன்
யாரவன் யாரவன்
யாழவன்
எனை ஆள்பவன்
அவனே இறைவன்
என் தலைவன்


மார்பிலே உறைபவன்
மானத்தை காப்பவன்

வெயிலும் அவன்
மழையும் அவன்
எனக்கெல்லாமே அவன்


முத்தமவன்
என் மொத்தமவன்
எனை ஆட்கொண்டவன்

யாரவன் யாரவன்
உயிரவன்
உடலவன்

எண்ணத்தின் வண்ணமவன்
ஏக்கத்தின்
மொழியவன்
மௌனத்தின் பொருளவன்
தமிழ் அவன்
என் தமிழன் அவன்

வானத்தின் நிலவவன்
வாழ்க்கையின் பாதையவன்

யாரவன் யாரவன்
யாழவன்
என் உயிரை கசிய வைப்பவன்

தென்றலின் தேகமவன்
திங்களின் ஒளியவன்
பூக்களின் இசையவன்
பூமியின் நிழலவன்
என் உயிரின் உரியவன்

யாரவன் யாரவன்.....


என் கணவன்.....


************************************

நானவன்
என் நாணமவன்
என் ஞானமவன்
என் ஞாலமவன்

என் தேகமவன்
என் தேசமவன்

காவிரி ஆற்றில்
கார் மேக வானில்
கடற்கரை மணலில்
காடு மலைகளில்
நந்தவன தோட்டத்தில்
என்னோடு கிடப்பவன்

என் மடியவன்
அவன் மடி நான்

எனை போர்த்திக்கொள்பவன்
என்னில் துடிப்பவன்

கரம் நீட்டுபவன்
என் கண்ணாளன்
கட்டியணைப்பவன்
என் தாயுமானவன்

தலையசைப்பவன்
என் சேயவன்

விரல் கோர்ப்பவன்
மாலையிட்டவன்

வருடுபவன்
ஸ்பரிசிப்பவன்
நேசிப்பவன்
யாரவன்
என் முகிலவன்
என் அகிலவன்
இந்த புதுமை பெண்ணை
ஆளப் பிறந்த பாரதி அவன்
பிரபஞ்சத்தை தூள்தூளாக்க
பிறந்திட்ட அணு அவன்
அணுவில் பிறந்த
பிரபஞ்சன் அவன்

என் உயிரவன்
உணர்வவன்
எனக்கானவன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Jun-16, 8:01 am)
Tanglish : yaravan yaravan
பார்வை : 2903

மேலே