வீணாகப் போவது தலைமுறையே

ஆடுமேய்க்க செல்கிறாள் மகள்
கூலிவேலைக்கு சென்றாள் தாய்
இடம்பிடிக்க விரைகிறான் தந்தை
மதுக்கடை வரிசையில் நின்றிட !

ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்
கோவிலில் நேர்த்திக்கடன் நடக்கிறது
வாசலில் குழந்தையின் அழுகுரல்
பசிபோக்க தாயின் கெஞ்சல் !

வாதங்கள் முடிந்தது கைகலப்பில்
மழலைக்கு பெயர் சூட்டுவதில்
இருவேறு மதத்தினர் பெற்றோர்
அறியாமல் சிரிக்கிறது குழந்தை !

சாதிஒழிப்பு மாநாட்டின் தலைவர்
மகளுக்கு மணமகன் தேடுகிறார்
​தரகரிடம் விவாதிக்கிறார் வீட்டில் ​
​தன்சாதியில் வேண்டுமென கட்டளை ​!

இருமாநில அதிகாரிகள் ஆலோசனை
இருநதிகள் இணைப்பு திட்டம்பற்றி
இறுதிசெய்யப்பட்டது முடிவில்
இருபுறமும் கமிஷன் தொகை !​

பாலூற்றி வணங்கும் ரசிகர்கள்
பால்குடம் ஏந்தும் தொண்டர்கள்
அலகு குத்தும் அரசியல்வாதிகள்
​​அரங்கேறும் அன்றாட அவலங்கள் !

​முன்பின் அறிந்திடா முகங்கள் ​
முற்றம்வரை வந்து கெஞ்சிடும்
முடிந்தபின் முகமே மறந்திடும்
தேர்தல் களத்து வேட்பாளர்கள் !

சிந்திக்காத மக்கள் உள்ளவரை
​நிந்திக்க வேண்டிய தருணங்கள்
முந்திக்கும் கட்சிகள் உள்ளவரை
பிந்தியிருக்க வேண்டிய நிலையே !​

​​கோட்டை வீட்டுக் கோமான்கள் தானே
கோடிகளை கொட்டிடுவர் உண்டியலில்
​கோவணமும் இல்லா மனிதரைப்பற்றி
ஆவணப்படமும் எடுத்திடுவர் நாட்டினில் !

பயன்படுத்த தெரியாத பகுத்தறிவு
பண்படுத்தாத விளை நிலங்களே !
விரயம் அடைகின்ற விளைச்சலால்
வீணாகப் போவது தலைமுறையே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Jun-16, 8:46 am)
பார்வை : 278

மேலே