சாம்பலும் காதலிக்கும்- சந்தோஷ்

சாம்பலும் காதலிக்கும்..!
-------------------------------------

நீயென்னை மழலையென
கொஞ்சினால்
போதும் போதும்
தீயென கொதிக்கும்
என் ஏக்கம்
தீபமென குளிர்விடும்.

உன் கருங்கூந்தலில்
சிலந்தியென
எனக்கோர் அனுமதியளித்தால்
போதும் போதும்
காதல் நூல் விரித்து
அன்பு மல்லிப்பூ கட்டி
தவமாய் கிடந்து
வாசமாய் பரவிக்கிடப்பேன்.

நீ வாசிக்கும்
ஒரு புத்தகத்தினுள்
மயிலறகாய் எனை
சேர்த்து வைத்தாலே
போதும் போதும்
பனிக்குடத்தில் மிதக்கும்
மென்சிசுவாய்
சுகப்போதை பெற்றிடுவேன்.

உன்னிரு
விழிப்புருவங்களில்
தினம் நீ பூசும்
கரு மையாய்
எனை எழுதினாலே
போதும் போதும்..
உலகின் ஆகசிறந்த
கவியிரண்டை
அலங்கரித்த கர்வத்தில்
பூரித்து சிரித்துக்கிடப்பேன்..!

இவையாவும் உன்னால்
முடியாத விடயங்கள்
என்றாலும் பரவாயில்லை
என் செல்ல அழகியே..!
ஒரு நிறைந்தப் பார்வையோடு
" போடா லூசு"
என்றாலே
போதும் போதும்
மின் மயானம்
வெளித்தள்ளும் என்
சாம்பலும்
உனை காதலித்து
காற்றில் கீதம் பாடும்..!

**

இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (9-Jun-16, 6:21 pm)
பார்வை : 84

மேலே